September 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

இளநீர்க் கடையில்!


செல்வகதிரவன்


அனுமார் கோயில் பக்கத்தில ஒரு அம்மா எளநீ விக்கும்..அங்க வாங்கிட்டு வா.
அது ரெம்ப தூரமாச்சே..


தூரந்தான்.. ஆனா எளநீ சூப்பரா இருக்கும்.. வெலயும் நாயமா இருக்கும்..
கோயிலின் வலது பக்கத்தில் தள்ளு வண்டியில் இளநீர் விற்கிறாள் பார்வதி. இந்த நகரத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு அவளே வாகனத்தில் போய் இளநீர் வாங்குவாள். வாகன வாடகை, தென்னந் தோப்புக்காரர்களிடம் கொடுத்த தொகை ஆகியனவற்றுடன் தனது உழைப்பிற்கான கூலி சேர்த்து இளநீர் விலையை நிர்ணயிப்பாள். பார்வதி நிர்ணயிக்கும் விலை மற்றவர்களைக் காட்டிலும் குறைவாகவே இருக்கும். பொருளின் தரம் உயர்வு, விலை குறைவு எனும்போது மக்கள் இளநீர் வாங்க பார்வதியைத் தேடி வருவதில் வியப்பில்லை அல்லவா..?


மிஞ்சிய இளநீர் என்று ஒருநாளும் பார்வதி வீட்டுக்கு இளநீர்க் காய்களை எடுத்துச் சென்றதில்லை. இவளிடம் இளநீர் விற்றுத் தீர்ந்த பிறகுதான் வாடிக்கையாளர்கள் வேறு கடைகள் நோக்கிப் போவார்கள். சக வியாபாரிகளுக்கு பார்வதி மீது சற்று பொறாமைதான்..இந்தம்மா கொறச்ச வெலைக்கிக் கொடுக்கிது.. அதனால எல்லாரும் அந்தம்மா கடைக்கே ஓடுறாங்களே..
பார்வதியிடமும் நேரில் வந்து அவர்கள் குறைபட்டுக் கொண்டார்கள். இவ்வளவு ரூபாய்க்கி வித்தாலும் இளநீ விக்கிம்.. நீங்க எதுக்காக கொறச்சலாக் கொடுக்கிறீங்க.?


நா ஒண்ணும் நட்டத்துக்கு விக்கலையே..? கிராமங்களுக்கு போய் வர்ற வண்டி வாடக.. எளநீ வாங்குற வெல.. அத்தோட நம்ம அலச்சலுக்கு ஏத்த கூலியச் சேத்து விக்கிறேன்.. அவ்வளவுதான்!
இன்னும் சாஸ்தியா வெல வச்சு வித்தாத்தான் என்ன..? நாம சொல்ற வெலைக்கித்தான் ஜனங்க வாங்கிட்டுப் போயிடுறாங்களே..?


நாம எளநீ விக்கிறது கார்ல வர்றவுங்களுக்கும் கை நெறைய காசு வச்சு கணக்குப் பாக்காம செலவளிக்கிறவுங்களுக்கு மட்டுமா.? நம்மள மாதிரி ஏழை பாழைகளும் அன்றாடங்காச்சிகளும் எளநீ வாங்கிட்டுத்தானே போறாங்க.. அவுங்க இவ்வளவு வெலையான்னு கேட்டா நாம நல்லா இருப்பமா..? என்னதான் வருமானத்துக்காக வியாபாரம் பண்ணினாலும் அதுல ஒரு நேர்ம இருக்க வேண்டாமா..? இரக்கம் இல்லாம பணம் சம்பாரிக்கிறோம்னு வை.. அது ஆஸ்பத்திரி செலவுக்குத்தான் போகும்.. தெரிஞ்சுக்கிடுங்க..


பார்வதியின் கறாரான பதிலைக்கேட்டு மேற்கொண்டு எதுவும் பேசத் தோன்றாமல் உச் கொட்டிவிட்டுப் போவார்கள். பார்வதியின் வியாபார வெற்றிக்கு விலை மட்டுமல்ல, வேறு சில காரணங்களும் இருக்கவே செய்தன. பார்வதியின் அணுகுமுறை, புன்னகை தவழும் பேச்சையும் சொல்லலாம்.


எத்தனையோ வாடிக்கையாளர்கள் பார்வதியிடம் இளநீர் வாங்கிப் போவார்கள். ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர். வயது அறுபதைத் தாண்டியும் தொடர் நடைப்பயிற்சி, சாப்பாட்டு முறை அவரை சுறுசுறுப்பாக இயங்க வைத்தது. காலை டிஃபன் முடித்து ஒன்பது மணிக்கு நூலகம் போவார். செய்தித்தாள்கள், வார இதழ்கள் வாசித்து விட்டு பார்வதியின் இளநீர்க் கடைக்கு வருவார்.


அப்பு வாங்க..
என்ன பெரியம்மா.. வியாபாரம் எப்பிடிப் போகிது?
ஆண்டவன் புண்ணியத்தில நல்லாப் போய்ட்டு இருக்கு..
இப்படி உரையாடியபடி தனது வண்டிக்குக் கீழே மஞ்சப் பையில் வைத்திருக்கும் கூர்மையான அரிவாளை எடுத்து இளநீரைச் சீவி நீட்ட ரசித்து ருசித்துச் சாப்பிட்டு விட்டு, கேட்டக் காசை கொடுத்து விட்டுக் கிளம்புவார். இது அவர் ஓய்வு பெற்ற பிறகு தொடர்ந்து நடைபெறும் வாடிக்கை,
அன்றும் அப்படித்தான்..வழக்கம் போல பார்வதி கடைக்கு வந்தார் நமச்சிவாயம்.
நா ரெம்ப நாளாக் கேக்கணும்தான் நெனக்கிறது..அப்பறமாக் கேக்காமப் போயிறது.. இந்த அரிவாள எதுக்கு இவ்வளவு பத்திரமா துணிப்பையில போட்டு வண்டிக்கு கீழே வக்கிறீங்க.
அதுக்கு முக்கியமான காரணம் இருக்குப்பு..


அப்பிடி என்ன காரணம் பெரியம்மா? பத்து நிமிசத்துக்கு ஒரு தடவ எளநீ வாங்க ஆட்கள் வருது. அதக் கீழேருந்து எடுத்து எளநீ சீவிக் கொடுக்க கொஞ்சம் நேரமாகிதில்ல? இப்பிடி எளநீ மேலயே அரிவாள வச்சிருந்தா, எளநீ வாங்கற ஆளு வந்தவுடனே எடுத்து சீவி காக்க வைக்காம அனுப்பலாமே..? ஒண்ணிரண்டு நிமிசம் நின்னாக் கூட பரவாயில்ல.. ஆனா அருவாள மேல வைக்கிறதில ஆபத்து வந்து சேர வாய்ப்பு இருக்குப்பு..


அந்த வாய்ப்பு உடனே வந்தது. ஒரு வாடிக்கையாளருக்குக் கொடுக்க இளநீரைச் சீவிக் கொண்டிருந்தாள் பார்வதி. அப்போது ரோட்டில் வாக்குவாதம் பண்ணியபடி வந்த இரண்டு பேர்களின் வாக்குவாதம் பலத்த சண்டையாக மாறியது. சண்டை கைகலப்பாக மாறியது. இருவரில் ஒருவன் பார்வதி கையில் இருந்த அரிவாளைப் பிடுங்க வந்தான். நல்ல வேளை நமச்சிவாயம் தலையிட்டு வந்தவனைக் கீழே தள்ளிவிட..அவன் கீழே விழ, இன்னொருவன் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஓட,ஓடுறவனை அரிவாளைப் பிடுங்க வந்தவன் துரத்தி ஓட.. நடக்கவிருந்த ஒரு அரிவாள் வெட்டு நமச்சிவாயத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.


அரிவாளை வெளிய தெரியாம ஏன் பைக்குள்ள வச்சு கீழ வைக்கிறேன்னு இப்பத் தெரியுதா.? நாம என்னதான் சாக்கிரதையா நடந்தாலும், ஆபத்து எப்பிடி வருது பாத்தீங்களா..? இன்னக்கி ஒண்ணு கெடக்க ஒண்ணு நடந்திருந்தா இந்தப் போலீசு என்னய என்ன பாடு படுத்தி இருக்கும்.? ஸ்டேசனுக்கு வா, கோர்ட்டுக்கு வா.. சாட்சி சொல்ல வான்னு அலக்கழிச்சிருக்காது? இதச்சாக்கு வச்சு எத்தன போலீசுக்காரங்க காசு தராம எளநீ குடிச்சிருப்பாங்களோ..?
பார்வதியின் புத்திசாலித்தனத்தைப் புரிந்து கொண்டார் நமச்சிவாயம்.

(99445 09530 – [email protected])

Spread the love