June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

இல்லம் தேடி கல்வி

“இல்லம் தேடி கல்வி சர்ச்சைகள் சரியா?” என்ற தலைப்பில் 10-11-21 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெ. நீலகண்டன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகள்,,
இரண்டு ஆண்டுகள் விலகி இருந்த பிள்ளைகள் மீண்டும் உற்சாகமாக பள்ளிக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். அதே நேரம், 22 சதவீத மாணவர்கள் பள்ளியிலிருந்து இடைநின்றிருப்பதாக தொண்டு நிறுவனங்களின் ஆய்வுகள் சொல்கின்றன. இவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வரவும், வகுப்பறைச் செயல்பாடே இல்லாமல் வீட்டுக்குள் முடங்கியிருந்த குழந்தைகளை உற்சாகப்படுத்தி கல்வி இடைவெளியைக் குறைப்பதற்காகவும் ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தை உருவாக்கியிருக்கிறது தமிழக அரசு. தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் ஆரம்பத்திலேயே சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.


போதிய அளவுக்கு ஆசிரியர்களை நியமித்து குழந்தைகளை ஈர்க்கும் வகையில் பள்ளிகளை மேம்படுத்த வேண்டிய அரசு, ரூ.200 கோடியை தற்காலிகத் திட்டத்துக்கு செலவிடுவது வீண் என்று சிலர் குரல் எழுப்புகிறார்கள். மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவோம் என்ற தமிழக அரசு படிப்படியாக மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தத் தொடங்கி இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் கிளம்பியிருக்கிறது. மதச்சார்புள்ள தொண்டு நிறுவனங்கள் இதில் ஊடுருவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.


தமிழக அரசின் இணையதளத்தில் 1.28 லட்சம் பேர் தன்னார்வலர்களாகப் பதிவு செய்துள்ளார்கள். இவர்களில் 80 சதவீதத்துக்கும் மேல் பெண்கள். பகுதிவாரியாகப் பிரித்து அந்தந்த வரம்புக்குள் வரும் பள்ளிகளுக்கு தன்னார்வலர் பட்டியல் அனுப்பப்படும். 6 மாத காலத்திற்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு தன்னார்வலர் வாரத்துக்கு 6 மணி நேரத்தை மையத்துக்கு ஒதுக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கொரு முறை தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
20 மாணவர்களுக்கு ஒரு தன்னார்வலர், திண்ணை, சமுதாயக்கூடம், மொட்டைமாடி என பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானிக்கும் இடத்தில் மையம் செயல்படும்.


இந்தத் திட்டத்தை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்ககம் முன்னெடுத்துச் செல்கிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம், எய்டு இந்தியா, குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சார அமைப்பு, அருணோதயா, பூமி, அகரம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்களும்,,, பேராசிரியர் ச.மாடசாமி, ஆர். ராமானுஜம், காளீஸ்வரன், எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், முத்துநிலவன், முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி உள்ளிட்டோரும்
இந்த திட்டத்தில் முக்கிய பங்களிப்பு செய்கிறார்கள். இந்தத் திட்டம் தொடர்பான அச்சங்களை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாநில இயக்குநர் சுதன் முன்வைத்தோம். அவர் கூறிய பதில்.. இந்தத் திட்டத்தால் எந்த விதத்திலும் பள்ளிக் கல்விச் சூழல் பாதிக்கப்படாது. நம் பள்ளிக் கல்வியின் அடிப்படை மிகவும் வலுவானது.


தற்போதைய பேரிடர் சூழலில் பள்ளியிலிருந்து விலகியிருந்த பிள்ளைகளை மீட்டு மீண்டும் பள்ளிக்குக் கொண்டு வருவதற்காக கொண்டுவரப்பட்ட குறுகிய காலத் திட்டம் இது.
இது குழந்தைகளின் பன்முகத் திறனை வெளிக் கொண்டுவந்து பள்ளிச் சூழலையே மாற்றும்.
இந்தத் திட்டத்தின் செயல்திட்டங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்கின்றன. மக்கள்தான் எல்லாவற்றையும் தீர்மானிப்பார்கள். உள்ளூர் நபர்கள் மட்டுமே தன்னார்வலர்களாகச் செயல்பட முடியும். பள்ளி மேலாண்மைக் குழுவும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகளும்தான் அவர்களை இறுதி செய்வார்கள். எல்லா நிலையிலும். கண்காணிக்க, திட்டமிட, செயல் திட்டங்களை வகுக்க குழுக்கள் இருக்கின்றன. அதனால் தவறு நடக்கவோ, தவறான நபர்கள் ஊடுருவவோ வாய்ப்பே இல்லை. இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் முதல் செயல்திட்டமே, பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோரை நேரில் சந்தித்து இந்தத் திட்டத்தைப் பற்றி பேச வேண்டும் என்பதுதான். பெற்றோர் அனுமதி இல்லாமல் இந்தத் திட்டத்தில் எதுவும் நடக்காது. அதன் மூலம் பள்ளி மேலாண்மைக் குழு இயல்பாகவே செயல்படும் என்கிறார் சுதன்.


( இந்த இதழில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை ஆழமாக விமர்சனம் செய்து ஒரு கட்டுரையை உமா எழுதியிருக்கிறார். ஆனந்த விகடனில் பல கல்வியாளர்கள், தமிழக அரசு ஆகியோரின் கருத்துகளை உள்ளடக்கி மேற்கண்டவாறு ஒரு கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது. தற்போதைக்கு இரு கருத்துகளையுமே பதிவு செய்திருக்கிறோம். பொறுத்திருந்து பார்ப்போம். ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பரிசீலிப்போம்… ஆசிரியர் குழு )

Spread the love