June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

இல்லம் தேடி கல்வி

உமா
19 மாதங்களுக்குப்பிறகு நவம்பர் மாதம் பள்ளிக்கு வரும் குழந்தைகளை வரவேற்போம் என்று மிகவும் கனிவுடனும், அக்கறையுடனும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மிகவும் வரவேற்கத்தக்கது.
ஆசிரியர்கள் நீண்ட இடைவெளிக்குப் பின் வரும் தங்கள் பள்ளி மாணவர்களை வரவேற்றிட எவ்வாறெல்லாம் திட்டமிட்டனர் என்பது களத்தில் உள்ளவர்களால் மட்டுமே அறிய முடியும். ஏனென்றால் பள்ளி திறந்தவுடன் மாணவர்களை வரவழைத்து, பள்ளிக்குள் கற்றல் கற்பித்தலை தொடர்ந்து எடுத்துச் செல்ல ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன. கொரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பு குறித்த நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் இருக்கின்றன. வகுப்பிற்கு 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றால் 2000 குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் 100 வகுப்பறைகள் வேண்டும். அதற்கேற்ப ஆசிரியர்களும் வேண்டும். நகரங்களில் பெரும்பாலான பள்ளிகள் இவை இரண்டுமின்றி விழிபிதுங்கி நிற்கின்றன. கிராமங்களிலும் இதேநிலைதான். தன்முனைப்புடன் செயல்படும் தலைமையாசிரியர்கள், கல்வி அலுவலர்களை அணுகி எத்தனை முறை கேட்டாலும் கல்வி அலுவலர்களிடமிருக்கும் அலட்சியப்போக்கே மிஞ்சுகிறது. அரசுப்பள்ளி குழந்தைகளுக்கான கல்வியை மறுக்கும் செயலாகவே வெளிப்படுகிறது. வகுப்பறைகள் மட்டுமா? கழிப்பிட வசதிகள், மின்சார வசதி..? இன்னும் என்னென்ன வசதிகளின் போதாமை?
பள்ளி மேலாண்மைக் குழு ‘இல்லம் தேடி கல்வி’யை கண்காணிக்கும் என்று இதற்கான கையேட்டில் கூறப்பட்டுள்ளது. எத்தனை பள்ளி மேலாண்மைக் குழுக்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன? கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் 2009-க்குப் பிறகு தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் தங்கள் பங்கை ஆற்றவில்லை என்பதே கள உண்மை. 50 சத பள்ளிகளில் மேலாண்மைக் குழுக்கள் சிறப்பாக செயல்பட்டிருந்திருந்தால் கூட தமிழக பள்ளிக் கல்வியில் இன்று இத்தனை சிக்கல்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. கட்டமைப்பு சார்ந்தும், ஆசிரியர் பற்றாக்குறை பற்றியும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் என்ன சாதித்தன? வெறும் பதிவேட்டு அளவில் மட்டுமே 90 சத பள்ளிகளில் மேலாண்மைக் குழுக்கள் இருக்கின்றன என்பதை ஆசிரியர்கள் அறிவார்கள். இந்நிலையில் பள்ளி மேலாண்மைக் குழு ‘இல்லம் தேடி கல்வி’யை எவ்வாறு கண்காணிக்கும் என்று சிந்திக்க வேண்டாமா ? தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான பள்ளிகளின் கட்டமைப்பில் போதாமையும், ஆசிரியர் பற்றாக்குறையும், இடநெருக்கடியும், தொடர்ந்து பல ஆண்டுகளாக நிலவி வருகின்றன. இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தை நோக்கி கல்வித்துறை திட்டமிடுவது வேடிக்கையாக இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பு பள்ளித் தலைமையாசிரியருக்கு எனவும் ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் ஒருவர் தினம் மாலை ஏழு மணி வரை இத்திட்டம் தொடர்பான பணிகளுக்காக அப்பகுதியில் இருக்க வேண்டும் என்றும் கல்வி அலுவலர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் இத்திட்டத்தினை செயல்படுத்திட வேண்டுமென்பதுதானே இதன் பொருள்? இதன் விளைவாக பள்ளியின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் கூடுதலாகத் தொய்வடையும் என்பது நிச்சயம்.
இல்லம் தேடி கல்வியை மிகப் பெரிய மாற்று சிந்தனையாக பலர் கொண்டாடுவது ஏன் என்று புரியவில்லை. இது கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால் கள எதார்த்தம் வேறாக இருக்கிறது. இது தேசிய கல்விக் கொள்கையின் ஒரு கூறு என்பது நன்கு விளம்பரப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான ஓராசிரியர் பள்ளிகள் குறித்தும், கற்பித்தல் அல்லாத பணியால் ஆசிரியர்கள் வகுப்பறைகளில் முறையான கற்பித்தல் செயல்பாட்டில் ஈடுபட முடியாமல் தவிப்பது குறித்தும் புதிய ஆசிரியன் இதழில் நாம் அவ்வப்போது பதிவு செய்து வந்துள்ளோம். கடந்த இரு கல்வியாண்டுகளில் இரண்டரை லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்குப் புதியதாக வந்துள்ளனர். அவர்களுக்கான ஆசிரியர்கள் எங்கே? அவர்கள் அமர்வதற்கான வகுப்பறைகள் எங்கே? பகுதிநேர ஆசிரியர்களாக 12,000 பேர் பத்து வருடங்களுக்கும் மேலாக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் கலை, ஓவியம், உடற்கல்வி என மாணவரது திறன்சார் கற்றலை வெளிக்கொண்டுவர நியமனம் செய்யப்பட்டு பாதி நாட்கள் மட்டுமே வருகை புரிகின்றனர். அவர்களை முழுநேர ஆசிரியராக மாற்றினால் குழந்தைகளுக்கும் நல்லது.. பள்ளிக்கும் நல்லது. முறையான கல்வி அமைப்புடனான பள்ளிகள் சிதைந்து கிடப்பதைப் புறந்தள்ளிவிட்டு முறைசாராக் கல்வியின் வடிவமான இல்லம் தேடி கல்வியை அரசும் மற்ற பலரும் தூக்கிப்பிடிப்பதேன்?
எதார்த்த உண்மைகளைக் கொண்டு இத்திட்டத்தை மறுக்க ஆசிரியர்களுக்கு முழு உரிமை இருக்கிறது. மேலும் ஒன்றே முக்கால் லட்சம் தன்னார்வலர்களைத் திரட்டி, அவர்களைப் பயிற்றுவித்து, இறுதியில் பணத்தையும் கொடுத்து மாலையில் சொல்லிக் கொடுங்கள் என்பது கைக்குள் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய் தேடும் கதைதான். பத்து லட்சத்திற்கும் அதிகமான முறையான ஆசிரியர் பயிற்சி பெற்று தகுதித் தேர்வில் வெற்றியும் பெற்றவர்கள் இருக்க, ‘பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும் வாருங்கள்! தன்னார்வலர்களே! கல்விப்பணி செய்திட..’ எனக் கூவி அழைப்பதை ஏற்க முடியவில்லை.
காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் மாலையில் விளையாடவோ தமக்குப் பிடித்தவற்றை செய்யவோ வேண்டாமா? ‘மாலையில் படிக்கத்தானே போகிறாய்.. எனவே காலையில் வேலைக்குப் போகலாம்’ என பெற்றோர்கள் அழைத்துச் செல்ல வாய்ப்புகள் உண்டு. ‘ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கிட்டு இவங்க சொல்லிக் கொடுக்காம தன்னார்வலர்கள் எதற்கு?’ என்று பெற்றோர்கள் கேட்க மாட்டார்களா? ஆசிரியர்களுக்குத்தான் கற்றல் இடைவெளியைப் போக்கும் கடமை உண்டு. தன்னார்வலர்கள் ஓரிருவர் ஆங்காங்கே ஆர்வமாகச் செயல்படலாம். ஆனால் அவர்களை அரசின் முறையான சட்டகத்திற்குள் கொண்டுவரக் கூடாது. இன்று இதை ஏற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் தவறான அரசியல் சித்தாந்தம் கொண்ட ஆட்சியாளர்கள் தவறான சித்தாந்தத்தை மாணவர்களிடம் விதைப்பதற்கு வழி ஏற்பட்டுவிடக் கூடும். இன்றைய அவசியத் தேவை அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவதுதான்.
கள எதார்த்தங்களை ஏற்க மறுத்து முறைசாரக் கல்வியின் ஒரு வடிவத்திற்கு ஆதரவு தருவது சரியல்ல என்பதை ஆசிரியர்கள் சார்பாக வலியுறுத்த விரும்புகிறேன்.


அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குழு (m3) –
[email protected] – 99769 86098)

Spread the love