January 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

இலவசத் திட்டங்கள் வேறு, மக்கள் நல அரசு வேறு..

கடலூர் சுகுமாரன்
நவீன தாராளமய பொருளாதாரம் தனியார் மூலதனத்தையும் சந்தையையும் ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் மக்கள் நலனில் இருந்து விலகும்படி அரசை கட்டாயப்படுத்துகிறது. மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற அரசு மேற்கொள்ளும் முயற்சிகளையும் அது மட்டுப்படுத்துகிறது. ஏழைகள் தங்கள் நல்வாழ்க்கைக்கும் அனைத்துத் துறை முன்னேற்றங்களுக்கும் அரசு பல சேமநல நடவடிக்கைகளை எடுக்கும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் இன்றைய அரசியல் கட்சிகள் இலவசங்களைக் கொடுத்து அவர்களைக் கவர்ந்திழுக்கவே முயல்கின்றன. எனவே மக்கள்நலத் திட்டங்களுக்கும் இலவசக் கலாச்சாரங்களுக்கும் இடையே உள்ள நுண்ணிய வேறுபாட்டை உணர முடியாத ஒரு சூழல் உருவாகி விடுகிறது.


ஏழைகளை நோக்கிய பொதுவிநியோகத் திட்டம், தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு, தரமான கல்வி, நியாயமான வேலைவாய்ப்பு, உடல்நலப் பாதுகாப்பு, கண்ணியமான இருப்பிடம், சுரண்டல் மற்றும் வன்முறையில் இருந்து விடுவிப்பது போன்ற பலவற்றை உள்ளடக்கியதே மக்கள்நலத் திட்டங்கள். இதற்கு மாறாக, வாக்காளர்களை கவர்ந்திடவும், தனிப்பட்ட சில பொருட்களை அளித்திடவும் ஒரு குறிப்பிட்ட தேர்தல் காலத்தில் மட்டும் இலவசங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொது கட்டமைப்பு வசதிகளையும், அனைவருக்கும் பொதுநன்மை தரக்கூடியவைகளையும் அவை ஊக்குவிப்பதில்லை.


இலவசங்களின் கலாச்சாரம் 1967-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தொடங்கியது. ரூபாய்க்கு மூன்று படி அரிசி தருவதாக திமுக தலைவர் அறிஞர் அண்ணா தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தார். அதற்குப் பிறகு வந்த திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் முதலமைச்சர்களும் இலவச டிவி செட்டுகள், இலவச லாப்டாப்புகள், இலவச காஸ் சிலிண்டர்கள் மற்றும் அடுப்புகள், ஏழை விவசாயிகளுக்கு இலவச ஆடுகள் மற்றும் பசு மாடுகள்.. என இலவசங்களை அதிகரித்துக் கொண்டே போனார்கள்.


இலவசங்கள் ஒரு ஜனநாயக விரோத ஆளுமை வழிபாட்டு முறைகளை உருவாக்கி வளர்க்கின்றன. குறிப்பாக விளிம்பு நிலையில் வாழ்கின்ற ஏழை மக்களின் பகுத்தறிவு சிந்தனையை மழுங்கச் செய்கின்றன. மக்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை மறுத்துவிட்டு, அவர்களை வெறும் அரசின் பெருந்தன்மை காரணமாக சில பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் நுகர்வோராக இலவசங்கள் மாற்றி விடுகின்றன. அவர்களை ஏழைகளாகவே நீட்டிக்கச் செய்கின்றன. ஆட்சியாளர்களின் கருணைக்கும் பரிதாபத்திற்கும் உரியவர்களாக மாற்றிவிடுகின்றன. ஆனால் நலத்திட்டங்கள் அவர்களை ஜனநாயக ரீதியில் அனைத்தையும் பெறும் உரிமை உள்ள குடிமக்களாக உயர்த்துகின்றன.


இலவசங்கள் குறித்து வெள்ளை அறிக்கையை திமுக அரசு சமீபத்தில் சட்டப்பேரவையில் வெளியிட்டுள்ளது ஒரு நல்ல முயற்சி. ஆரோக்கியமான திசைவழியில் பயனுள்ள விவாதங்கள் நடந்து வருகின்றன. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு முதலான பொது சேவையை எல்லா பிரிவு மக்களுக்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்தில் கொள்கைகள் உருவாக்கப்படவேண்டும். அரசியல் சாசனம் உத்தரவாதப்படுத்துகின்ற, அனைவருக்கும் நன்மை பயக்கும் மதசார்பற்ற ஜனநாயக நெறிகளையும் சமூகத்தையும் நிறுவிட இது அத்தியாவசியமாகிறது.


இலவசங்களுக்கும் நலத்திட்டங்களுக்கும் உள்ள வேறுபாட்டினைப் புரிந்து கொள்வோம்.
(28-10-2021 ஆங்கில இந்துவில் சி.லட்சுமணன்-


எஸ்.வெங்கடநாராயணன் எழுதிய கட்டுரையின் சுருக்கம்)
(94437 28774 – [email protected])

Spread the love