August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

இலங்கை சொல்லும் பாடம்

மதுக்கூர் இராமலிங்கம்


இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமை குறித்து இந்திய நாடாளுமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80-க்கும் கீழே சரிந்துள்ள நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலை இந்தியாவிலும் ஏற்படுமோ என்ற நியாயமான அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


இதற்குப் பதிலளித்த அயல்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘இந்த ஒப்பீடு தேவையற்றது. தவறான தகவல் அடிப்படையில் கூறப்படுவது’ என்று தெரிவித்துள்ளார். ஆனால் இலங்கையில் நடைபெறுவதை இந்தியா மட்டுமல்ல நவீன தாராளமயமாக்கல் கொள்கையை பின்பற்றும் அனைத்து நாடுகளுமே எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


அங்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக உருமாறியுள்ளது. ராஜபக்சேக்களின் சர்வாதிகார ஆட்சியை மக்கள் தங்கள் எழுச்சியின் மூலம் தூக்கியெறிந்துள்ளனர். அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான உடனடித் தீர்வு எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டிப் போட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இலங்கை மக்கள் மொழி, இன வித்தியாசங்களைக் கடந்து வீதியில் இறங்கி போராடியதோடு ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அதிகார மையங்களுக்குள் நுழைந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.


வகைதொகையற்ற முறையில் கடன் வாங்குவது, உள்நாட்டுப் பொருளாதார சுயசார்பை பின்னுக்குத் தள்ளி அனைத்துக்கும் அந்நிய நாடுகளை சார்ந்திருப்பது என இலங்கையின் வீழ்ச்சி துவங்கி பல ஆண்டுகளாகிவிட்டது. இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க பெரும்பான்மை மதவாத, இனவாத ஆட்சியாளர்கள் தொடர்ந்து மறுத்ததால் உள்நாட்டு போர் மூண்டது.
இதற்கு பெரும் விலையை அந்த நாடு கொடுக்க வேண்டியிருந்தது. பெரும்பகுதி வருவாயை ராணுவத்திற்கு செலவு செய்ததால் வளர்ச்சித் திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. இவை அனைத்தும் சேர்ந்து அந்த நாட்டை திவாலாக்கிவிட்டன. அந்த நாட்டின் ஜனாதிபதியே நாட்டைவிட்டு தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒப்பீடு கூடாது என ஒதுங்கிக் கொண்டது மட்டும் போதாது. உரிய பாடத்தை அண்டை நாடுகள் கற்றுக் கொள்ள வேண்டும்.


தடை செய்யப்பட்ட வார்த்தைகள்
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பே மக்களவையில் பயன்படுத்தி வந்த 40 வார்த்தைகளுக்கு தடை விதித்து மக்களவைச் செயலகம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. ‘தடை செய்யப்பட்ட வார்த்தைகள்’ பட்டியலில் ஊழல், நாடகம், முதலைக் கண்ணீர், குழந்தைத் தனம் என பல வார்த்தைகள் கூறப்பட்டிருந்தன. இந்த வார்த்தைகள் பொதுவாக ஆளுங்கட்சியின் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனமாக முன்வைக்கும் வார்த்தைகளே. இந்த வார்த்தைகளைத் தடை செய்வதன் மூலம் நாடாளுமன்றத்தில் நியாயமான விவாதம் நடைபெறுவதைக் கூட ஒன்றிய ஆட்சியாளர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று தெளிவாகியது. பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்துவது, பதாகைகளைத் தூக்கிப் பிடிப்பது ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது. மோடி அரசு மக்கள் மீதும் எதிர்க்கட்சியினர் மீதும் ஏவிவரும் துல்லியத் தாக்குதல்களில் ‘லேட்டஸ்டாக’ வந்துள்ள தாக்குதல் இது. இந்தக் கட்டுரை உங்கள் கைகளுக்குக் கிடைத்து நீங்கள் அதைப் படிக்கத் தொடங்குவதற்குள் அடுத்த தாக்குதல் வர வாய்ப்பு உண்டு.


நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியைப் போன்றே எதிர்க்கட்சிகளும் முக்கியமானவை. தராசின் இரு தட்டுகள் போன்றவை. எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கும் வகையில் தடைசெய்யப்பட்ட வார்த்தைகளை வெளியிட்டதற்குப் பதிலாக ‘எங்களைப் பற்றிப் பேச யாரும் வாயைத் திறக்கக் கூடாது’ என ஒற்றை வார்த்தையில் பாஜக சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். இதையொட்டி வெளிவந்த ஒரு கார்ட்டூனில், ‘பேசாதே.. உட்கார்.. அந்த வார்த்தையைக் கூறாதே..’ என்றெல்லாம் ஒரு கட்டிடத்திலிருந்து கட்டளைகள் வர தில்லிக்கு புதிதாக வந்த ஒரு சுற்றுலா பயணி இதுதான் ‘திகார் ஜெயிலா?’ என்று கேட்பது போல அந்த கார்ட்டூன் அமைந்திருந்தது. இது உண்மையாகி விடக்கூடாது என்பதே நாட்டு மக்களின் விருப்பம்.


இலவசம் என்பது கெட்டவார்த்தையா?
இலவசத் திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானவை என்று பிரதமர் மோடி அடிக்கடி உபதேசம் செய்து வருகிறார். உ.பி.யில் விரைவு சாலைத் திட்டம் ஒன்றை துவக்கி வைத்த அவர் இந்தக் கருத்தை மீண்டும் கூறியுள்ளார்.
கொரோனா காலத்தில் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க மறுத்த ஒன்றிய அரசு இந்த நெருக்கடியையும் பயன்படுத்திக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி, மானியம், வரிச்சலுகை என வாரி வழங்கியது.

இதன் மூலம்தான் பொருளாதாரத்தை மீட்சியடையச் செய்ய முடியும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கதை அளந்தார். அவர்களைப் பொறுத்த அளவில் கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் சொத்தை உருவாக்குபவர்கள். அவர்களுக்குத் தரும் இலவசம் என்றால் இனிக்கிறது. எளிய, உழைப்பாளி மக்கள் வாழத் தகுதியற்றவர்கள். அவர்களுக்குப் பயன்தரும் இலவசத் திட்டங்கள் என்றால் கசக்கிறது. இப்படி சொல்லித்தான் சமையல் எரிவாயுக்கு வழங்கப்பட்டு வந்த மானியத்தையும் நிறுத்திவிட்டார்கள். இலவசம் என்பது கூட ஒன்றிய ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்ட வார்த்தையாகி விட்டது.

(94422 02726 – [email protected])

Spread the love