September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

இரைப்பையையும் கிழிப்பார்கள்!

மதுக்கூர் இராமலிங்கம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இதனை பாஜகவினர் ஒரு பெரும் விழாவாக கொண்டாடியுள்ளனர். ஆனால் இந்த 8 ஆண்டுகால ஆட்சி என்பது இந்திய மக்களுக்கு திண்டாட்டமாகவே அமைந்தது.
பணமதிப்பிழப்பு துவங்கி 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வரை மோடி ஆட்சி என்பது எதிர்மறைகளின் தொகுப்பாகவே உள்ளது. பணமதிப்பிழப்பு அறிவிப்பு மூலம் கருப்புப் பணம் ஒழிக்கப்படும், கள்ளப்பணம் காணாமல் போய்விடும், பயங்கரவாதிகளுக்கு இனி பணமே கிடைக்காது என்றெல்லாம் பிரதமர் மோடி கூறினார். ஆனால் கருப்புப் பணம் ஒழியவில்லை. கள்ளப்பணமும் அழியவில்லை. பணம் கிடைக்காமல் பயங்கரவாத இயக்கங்களை கலைத்து விட்டதாகவும் தகவல் இல்லை. ஆனால் பணமதிப்பிழப்பால் விவசாயம் சிறு-குறு தொழில் நசிவு என ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் முட்டை ஓடு போல நொறுங்கிவிட்டது. அதை இதுவரை சீர்செய்ய முடியவில்லை. கார்ப்பரேட் முதலாளிகள் தங்களிடமிருந்த கருப்புப் பணத்தை வெள்ளைப்பணமாக மாற்றிக் கொள்ளவே இந்த நடவடிக்கை உதவியுள்ளது.
ஒரே நாடு, ஒரே வரி என்று கூறி ஜிஎஸ்டி வரியைக் கொண்டுவந்தார்கள். இதனால் வரிச்சுமை குறையும், விலைவாசியும் குறையும் என்று ஜிஎஸ்டி வரி விதிப்பின் உபாசகர்கள் உபதேசித்தார்கள். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் ஆளைக் கடித்த கதையாக இப்போது அரிசி, மோர், தயிர் உள்ளிட்ட உணவுப் பண்டங்களுக்கும் ஜிஎஸ்டி வரியை கொண்டுவந்துவிட்டார்கள். மறுபுறத்தில் தங்கத்திற்கும், வைரத்திற்கும் ஜிஎஸ்டி வரியில் சலுகை வழங்கப்படுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உப்புக்கு வரி போடப்பட்டதை எதிர்த்து மகாத்மா காந்தியின் தலைமையில் தண்டி யாத்திரையும், ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் யாத்திரையும் நடைபெற்றன. இப்போது அரிசிக்கும் ஜிஎஸ்டி வரி போட்டிருப்பதால் பட்டினி யாத்திரைதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் 2047-ல் இந்தியா வல்லரசாகிவிடும் என்று சங்பரிவாரத்தினர் கொட்டி முழக்குவதற்கு மட்டும் குறைச்சல் இல்லை.
அவசரநிலைக்காலத்தில் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டபோது கவிஞர் கந்தர்வன் ஒரு கவிதையில் இப்போது குழந்தை வேண்டாம் என கருப்பையைக் கிழிப்பவர்கள், நாளை சோறு வேண்டாம் என இரைப்பையைக் கிழித்தாலும் கிழிப்பார்கள்’ என்று எழுதினார். அது உண்மையாகிக் கொண்டிருக்கிறது. தேசம் தலைகுனியட்டும் மனச்சாட்சி உறங்கும்போது மனக்குரங்கு ஊர்சுற்றக் கிளம்பிவிடுகிறது’ என்பது கலைஞர் ஒரு படத்தில் எழுதிய வசனம். ஒரு சமூகத்தின் மனச்சாட்சி உறங்கிவிடுமானால் அந்த சமூகமே விரைவில் மயங்கி விழுந்துவிடும் ஆபத்து உள்ளது.
குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் நடைபெற்ற மதரீதியான வன்முறையின்போது 2002 மார்ச் 3-ம் தேதி பில்கிஸ் பானு என்ற 5 மாத கர்ப்பிணிப் பெண் கும்பல் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த பில்கிஸ் பானுவின் குழந்தை உட்பட 7 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது.
ஆனால் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி இந்தக் குற்றவாளிகள் 11 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி விடுவித்திருக்கிறது குஜராத் மாநில பாஜக அரசு. இந்த விடுதலையை சங் பரிவாரத்தினர் இனிப்பு கொடுத்து கொண்டாடியதோடு அந்தக் குற்றவாளிகளுக்கு தடபுடலான வரவேற்பு அளித்துள்ளனர். இதற்கு நாடெங்கிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்த முடிவு சட்டத்தையே வன்புணர்வு செய்வது போன்றது என்று ஒரு முன்னாள் நீதிபதி குமுறி உள்ளார். ஆனால் பாஜகவினர் கொஞ்சம் கூட கூச்சப்படாமல் அவர்களது விடுதலையை நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த லட்சணத்தில் பெண்ணியம், கண்ணியம் என்று உபதேசம் வழங்கிக் கொண்டிருக்கிறார் இந்தியாவின் பிரதமர்.
இலவசம் என்பது கெட்டவார்த்தையா?
உ.பி.யில் பல்வேறு சாலைப் போக்குவரத்து திட்டங்களை, குறிப்பாக 8 வழிச்சாலைகளை திறந்துவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இலவசங்களைக் கொடுத்து எதிர்க்கட்சிகள் நாட்டை சீரழித்துவிட்டன என்று குமுறியிருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தொடுத்துள்ள வழக்கில் மாநில அரசுகள் இலவசம் குறித்த அறிவிப்புகளை தேர்தல் காலத்தில் வழங்கக்கூடாது என்று கூறியுள்ளது.
ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்ற வாக்குறுதி துவங்கி இலவச கேஸ் அடுப்பு வரை பல்வேறு வாக்குறுதிகளை மோடி வாரி வழங்கியிருக்கிறார். இப்போது கூட இலவச வீடுகள் கட்டும் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்திக் கொண்டிருப்பதாக பெருமை பொங்க ஒருபுறம் கூறிக்கொண்டே மறுபுறத்தில் இலவசங்கள் ஒழியட்டும் என முழக்கமிடுவது ஒரு முரண்பாடு என்பது கூட அவருக்குப் புரியவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களும் இலவசங்கள் வழங்குவதில் குறை ஏதும் வைக்கவில்லை.
அதே சமயம், கொரோனா இந்திய மக்களை கொடூரமாகக் குதறிக் கொண்டிருந்தபோது தடுப்பூசியை இலவசமாகத் தர மறுத்து ஒரே ஊசிக்கு 3 வகையான விலை நிர்ணயித்ததுதான் இலவசத்திற்கு எதிராக மோடி எடுத்த மக்கள் விரோத நடவடிக்கை. அதற்கு எதிர்ப்பு பலமானதும் பின்வாங்கினார் என்பது வேறு.
கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடிந்ததன் முக்கியக் காரணங்களில் ஒன்று வலிமையான சுகாதாரக் கட்டமைப்பு, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை ஆகியவையே. அந்த மாநிலங்களில் இலவசக் கல்வி மட்டுமின்றி இலவச காலை மற்றும் மதிய உணவுகள் வழங்கும் திட்டங்கள் இருப்பதால்தான் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
எளிய மக்களுக்கு வழங்கப்படும் இலவசத் திட்டங்கள்தான் ஒன்றிய அரசின் கண்களை உறுத்துகின்றன. அதனால்தான் பல மானியங்களை மாயமாக்கி விட்டார்கள். மன்னர்களுக்கு மானியம் கேட்ட ஜனசங்கத்தின் வாரிசுகள் இப்போது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மட்டும் வரிச் சலுகை, கடன் தள்ளுபடி என காருண்யம் காட்டுகிறார்கள். அவர்களுக்கு தருவது இலவசம் அல்ல, வளர்ச்சிக்கான முதலீடு என்று அதை நியாயப்படுத்த வேறு செய்கிறார்கள்.
இலவசங்கள் யாருக்கு, எதற்காகத் தரப்படுகின்றன என்பதை வைத்தே அவற்றின் தன்மை குறித்து முடிவு செய்யப்பட வேண்டும்.
(94422 02726 – [email protected])

Spread the love