June 24, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

இரு வேறு இந்தியாக்கள்.!

செல்வகதிரவன்
மதுரை-இராமேஸ்வரம் நான்கு வழிப்பாதை முழுமையாக முடிவடைந்து விட்டது. பேருந்துகள், வாடகை ஊர்திகள், இருசக்கர வாகனங்கள் இத்தியாதிகளை புதிய சாலையைப் பயன்படுத்த அனுமதித்து விட்டனர். முன்பெல்லாம் மதுரையில் இருந்து மானாமதுரை வந்து சேர ஒண்ணேகால் மணி நேரம் ஆகும். இப்பொழுது முக்கால் மணி நேரத்தில் மானாமதுரை வந்து விடுகிறார்கள். முன்கூட்டியே வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுவதில் ஒருவித ஆனந்தம் ஏற்படுவதை மக்களிடத்தில் காணலாம். ரேசன் கடையோ, வங்கிக் கவுண்டரோ, தான் மற்றவர்களை முந்திப் போய் விட வேண்டும் என்பதில் நம்மவர்களுக்கு போட்டிதான். பின்னாடி நிற்போர் சலசலப்பைக் காட்டியதும் தங்கள் இடத்திற்கு மீண்டும் வேண்டா வெறுப்பாக வந்து சேருவார்கள்.
இந்த நான்கு வழிச்சாலை நன்கு இயங்கினாலும் சிறிய சங்கடங்கள் வந்து சேர்ந்தன. மதுரைக்கும் மானாமதுரைக்கும் இடையில் ஒரு டோல் கேட் மையம் அமைத்திருக்கிறார்கள். லாரிகள், வாடகைக் கார்கள் முதலியன டோல் கேட்டைக் கடக்கும்போது கணிசமான கட்டணம் வசூலித்தார்கள். கட்டண வசூலிப்பைக் கண்டு பலருக்கு கோபம்.. கேட்ட பணத்தைக் கட்டிவிட்டு ரசீது கூட வாங்காமல், சிட்டாய்ப் பறந்தனர் சிலர். பண வசூலிப்பைக் கண்டித்து பல அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. வாரக் கணக்கில் போராடியும் போராட்டத்தால் பலன் கிடைக்கவில்லை. கார்ப்பரேட் கனவான்களை ஒன்றிய அரசு அவ்வளவு எளிதில் கைவிட்டு விடுமா? வசூலிக்கும் முறையை மட்டும் நவீனப்படுத்தியது.
ஃபாஸ்டேக் என்கிற புதிய தொழில் நுட்ப வடிவில் வசூல் வேட்டை தொடர்ந்தது. வாகனப் பதிவு எண், அலைபேசி எண் முதலியனவற்றை வாகன ஓட்டிகள் முன்கூட்டியே பதிவு செய்து, பணம் செலுத்தி, பயணப்படும்போது கொடுக்கும் எளிமையான முறை கொணரப்பட்டது. இந்த வசூல் பாணி அனைவரையும் வியக்க வைத்தது.
முன்பெல்லாம் அரசுக்கு பணம் கட்டணும்னா சலான் எழுதணும்.. அதை அரசாங்கக் கருவூலத்தில் காண்பித்து சீல் வாங்கணும்.. சீல் போடுகிற நபருக்கு காபி குடிக்கக் காசு கொடுக்கணும்.. பிறகு சலானைக் கொண்டு போய் வங்கியில் கட்டணும். இப்ப இருக்கிற இடத்திலே இருந்துக்கிட்டே சுலபமாய் பணம் கட்டி விடுறோம். எவ்வளவு முன்னேற்றம் பார்த்தீங்களா? ‘இருபது வருசத்துக்குள்ள எல்லாமே இப்பிடி மாறிப் போச்சு…’ என்று எழுபது வயதுகளைத் தொட்ட இரண்டு மூத்தோர் பேசிப் பெருமூச்சு விட்டனர்.
அந்த டோல்கேட் சென்டர் இயங்கும் சாலையோரத்தில் புக்குளம் என்கிற குக்கிராமம் இருக்கிறது. ஐம்பது வீடுகளை உள்ளடக்கிய கிராமம். வாய் வார்த்தைக்கு வீடு என்று அழைத்தாலும் அவை கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் அல்ல. குடிசை வீடுகள் வகையைச் சேர்ந்தவைதான். எந்த வீட்டிலும் கழிப்பறை வசதி கிடையாது. இதனால் கூடுதல் அவதி பெண்களுக்குத்தான். தினமும் வெளிச்சம் எட்டிப் பார்ப்பதற்குள் காட்டுக் கருவைச் செடிகளுக்குள் ஒதுங்க வேண்டும். இல்லை என்றால் காலைக் கடன்களை இரவில் முடிக்க வேண்டும்.
பெண்கள் விவசாய சீசனில் கூலி வேலைக்குப் போவார்கள். வேளாண்மை வேலைகள் இல்லாதபோது கட்டுமானப் பணிகளில் சித்தாள் வேலை பார்ப்பார்கள்.
அழகம்மாள் அம்பலகாரர் வயலுக்கு களை எடுக்க வருவதாக ஒப்புக் கொண்டிருந்தாள். நேரம் சென்று போனால் அம்பலகாரரிடம் ஏச்சும் பேச்சும் கேட்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் அதிகாலையில் எழுந்த அழகம்மாள் காலைக் கடன்களை முடிக்க காட்டுக் கருவை புதருக்குள் புகுந்தாள். போனவுடன் பாதத்தில் முள் குத்திய மாதரி சுருக்கென வலித்தது. நல்ல பாம்பு ஒன்று நகர்வதைப் பார்த்த பிறகுதான், முள் குத்தவில்லை பாம்பு கடித்துவிட்டது என்பதை அறிந்தாள். காலைக் கடன்களை முடிக்காமல் வீட்டுக்கு ஓடி வந்து அக்கம் பக்கத்தாரிடம் விசயத்தை சொல்லி முடிப்பதற்கும் அழகம்மாளுக்கு மயக்கம் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
புக்குளம் கிராமத்தில் வீடுதோறும் கழிப்பறை கிடையாது. அருகில் உருவாகி இருக்கும் டோல் கேட்டில் மட்டும் நான்கு நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு இயங்குகின்றன. ஆனால் அவற்றை பொது மக்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அது மட்டுமல்ல, ஆபத்தான தருணங்களில் முதலுதவி செய்ய ஆரம்ப சுகாதார நிலையமும் அங்கு இல்லை. மாட்டு வண்டியைப் பூட்டி அழகம்மாளை அதில் தூக்கிப் போட்டு ரோட்டுக்கு வந்தனர். டோல்கேட் பகுதியில் ஓடிய ஆட்டோவை மறித்து அவளை ஏற்றி மானாமதுரை அரசாங்க மருத்துவ மனைக்கு கொண்டு போனார்கள். டாக்டர் பரிசோதித்து விட்டு, உதட்டைப் பிதுக்கி இறந்து விட்டார் என்று நிலைமையைச் சொல்ல உடன் வந்தோர் ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டார்கள். ஆஸ்பத்திரி அலுவலர்கள் அனைவரையும் அதட்டி அமைதிப்படுத்தினார்கள்.
டாக்டரை கெஞ்சிக் கூத்தாடி ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்தார்கள். புக்குளத்திற்கும் அலைபேசி வாயிலாக அழகம்மாள் காலமாகி விட்டாள்.. ஆம்புலன்சில் பாடி வருகிற சங்கதி தெரிவிக்கப்பட்டடது.
பஞ்சாயத்து தேர்தல்லேருந்து எம்.பி. எம்.எல்.ஏ தேர்தல் வரைக்கும் ஜெயிச்சிட்டு போறவுங்க ஓகோன்னு வாழ்றாங்க. அவுங்கள்ல யாருக்காவது இந்த ஊருக்கு நாலஞ்சு பொதுக் கக்கூசு கட்டித்தரணும்னு தோணல பாருங்க. அப்பிடி கக்கூசுக்களைக் கட்டிப் போட்டிருந்தா, இந்தக் கொஞ்ச வயசுல அழகம்மாளைப் பறிகொடுத்திருக்க மாட்டோம். ஆம்புலன்சில் அழகம்மாளின் உயிரற்ற உடலைப் பாத்துப் பார்த்து அழுதபடி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் அழகம்மாளின் கணவன்.
(99445 09530 – [email protected])

Spread the love