June 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

இருள் சூழ்வதற்கு முன்னால்….

1975-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அவசரநிலையைப் பிரகடனப்படுத்தி நாட்டையே அச்சத்தில் ஆழ்த்தினார். இன்று அத்தகு அறிவிப்பு ஏதுமில்லாமலேயே நாட்டில் அவசரநிலை நிலவுகிறது.
அன்று அவசரநிலையை அமல்படுத்த மிசா எனும் கருப்புச் சட்டம் பயன்பட்டது. இன்று அறிவிக்கப்படாத அவசரநிலையை அமல்படுத்த ‘உபா’ எனும் கருப்புச் சட்டம் அச்சுறுத்தி வருகிறது. தேச பக்தி மற்றும் கலாச்சார தேசியத்தின் பெயரால் அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தும் சட்டங்கள் எல்லாம் மீறப்படுகின்றன.
பேச்சுரிமை, எழுத்துரிமை தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன. அன்று காவல்துறை நள்ளிரவில் வீடுகளின் கதவைத் தட்டி கைதுசெய்தது. இன்று ஒன்றிய அரசின் தேசியப் புலனாய்வு நிறுவனம் உபா சட்டத்தின் கீழ் கைதானவர்களை விசாரிக்கும் கருவியாக உள்ளது. தேசிய புலனாய்வு நிறுவனத்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிணையில் வெளிவரவே முடிவதில்லை. பீமாகோரேகான் வழக்கில் கைதான 16 மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் இன்றுவரை வெளிவர முடியவில்லை. அவர்களில் ஒருவரான எண்பது வயது பாதிரியார் ஸ்டான்சாமி சிறையில் இருந்தபோதே உயிரிழந்தார். அதைப் பற்றி மன்னர் மோடி சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை. இரங்கல் கூடத் தெரிவிக்கவில்லை. ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் தோல்வி அடைந்துள்ளன. தேர்தல் ஆணையம், தகவல் ஆணையம், அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை, ரிசர்வ் வங்கி, யுபிஎஸ்சி ஆகிய அனைத்துமே ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டன. அண்மையில் தேசத் துரோகச் சட்டம் பிரிவு 124-ஏ, பேரறிவாளன் விடுதலை போன்ற வழக்குகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வரவேற்புக்குரியவையாக இருந்தாலும், வேறு பல முக்கிய வழக்குகளில் விசாரணையைத் தொடங்காமல் காலந்தாழ்த்தி வருவதும் உண்மை.
முதலாளித்துவம் ஏற்படுத்தும் கடுமையான பொருளாதார சமத்துவமின்மை சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் என்பதை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. பொருளாதார சமத்துவமின்மை ஏற்படுத்தும் பதற்றத்தைப் பயன்படுத்தியே அன்று இத்தாலி, ஜெர்மனியில் பாசிச சக்திகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றின. இந்தியாவிலும் வலதுசாரி தத்துவமான இந்துத்துவா, கார்ப்பரேட் கனவான்களுடன் கூட்டு சேர்ந்து இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறது. இருள் சூழ்வதற்கு முன்னால் விழிப்படைவோம்! போரிடத் தயாராவோம்!
-ஆசிரியர் குழு

Spread the love