June 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

இந்தியாவைத் தாக்கும் ஒரு புதிய வன்முறை வடிவம்

சி.ராம்மனோகர் ரெட்டி
கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வெளியான ஒரு படம் இந்தியாவின் இன்றைய நிலையை உள்ளது உள்ளபடி சித்தரிப்பதாக உள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள கார்கோனைச் சேர்ந்த வாசிம் ஷேக், தான் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அவருடைய வீட்டின் முன்னே நிற்கிறார். அவருக்குச் சொந்தமான ஒரு சிறிய மளிகைக் கடை ஏப்ரல் 11 அன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. காரணம் சில நாட்களுக்கு முன்னர் தூண்டிவிடப்பட்ட ஒரு வகுப்புக் கலவரத்தின்போது இவர் கல்லெறிந்தார் என்பது அவர் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. வேடிக்கை என்னவெனில், 2005-ல் நேர்ந்த ஒரு விபத்தில் இவர் தன் இரு கைகளையும் இழந்தவர். ஆனாலும் இந்துத்துவா வன்முறையாளர்களுக்கு அவர் வன்முறை நடந்த இடத்தில் இருந்த ஒரு முஸ்லிம் என்ற காரணமே போதுமானது. சொற்பமான ஒரு வாழ்வாதாரத்தை அவருக்கு வழங்கி வந்த அவருடைய ஒரே சிறிய கடை அடித்து நொறுக்கப்பட்டது.
முஸ்லிம்களை ‘மற்றவர்கள்’ என அழைத்து நமது பகைவர்களாக அவர்களைக் கற்பனை செய்வது, வெறுப்பது, பழி வாங்குவது என்பதுதான் இந்த ‘நவீன இந்தியா’. இந்த அரசுகள் சட்டத்தை நிர்வகிப்பவர்கள் அல்ல, அதை மீறுபவர்கள். இங்கு கும்பல்கள் இந்தியாவின் பல பகுதிகளில் முஸ்லிம்களை மிரட்டுகின்றன. கலவரம் மூண்டால் அரசு நிர்வாகம் தலையிட்டு அவர்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களை அழித்து ஒழிக்கிறது. இதனைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கட்சியின் தலைமை அமைதி காக்கிறது. ஏனெனில் இந்த வன்முறை வெறுப்பை கெட்டிப்படுத்தி, தேர்தல் காலத்தில் வாக்குகளை அறுவடை செய்யப் பயன்படும் என்பது அதற்குத் தெரியும். காவல்துறை அரசியல் தலைமையின் வழிகாட்டுதல்களைப் பெற்று செயல்படுத்திடவே பயன்படுகிறது. வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தேகத்திற்குரிய குற்றவாளியாக மாற்றி ஜாமீனில் எடுக்க முடியாமல் சிறையில் அடைக்கிறது. நீதிமன்றங்கள் பெரும்பாலும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கின்றன அல்லது அரசாங்கங்களை வலிக்காமல் மென்மையாக கண்டிப்பதோடு நிறுத்திக் கொள்கின்றன. சுதந்திரத்தின் 75-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தருணத்தில் நாம் இந்த இடத்தில்தான் நிற்கிறோம்.
இதுதான் இன்றைய இந்தியா செல்லும் திசை அல்லது அந்த இடத்தை இந்தியா ஏற்கனவே சென்றடைந்துவிட்டது என்றும் கூறலாம். மனிதாபிமானம் சிறிதளவும் அற்ற ஒரு வன்முறை சமூகம் சிறுபான்மையினரைக் குறிவைத்து வேட்டையாடுகிறது. அரசோ சட்டத்திற்கு அப்பாற்பட்டதாக நடந்து கொள்கிறது.
வகுப்புவாத அடிப்படையில் வாக்குகள்
இத்தகைய கலாச்சாரக் காவலர்களின் செயல்கள் ‘மற்றவர்கள்’ மீது வெறுப்பை வளர்க்கிறது. அச்சத்தை அதிகரிக்கிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் வாக்குகள் அறுவடைக்கு இது மிகவும் பயன்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின்போதும் மக்களைத் திரட்டும்போதும் மிகவும் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்ட ஒரு அரசியல் உத்தியாக இது நிலைநிறுத்தப்படுகிறது. சக குடிமக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுக்க பலர் முன்வருவதில்லை.
விதிவிலக்குகள்
இந்த நடைமுறைக்கு சில விதிவிலக்குகளும் இருக்கின்றன. ஒரு டஜன் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு அளித்து அவர்களை விரட்டும் ஒரு கும்பலுக்கு எதிராக தொடர்ந்து போராடுபவரான ராஜஸ்தான் மாநிலம் கரோலியைச் சேர்ந்த மதுலிகா ராஜ்புத் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறார்.
அதே போல ‘நான் ஒரு இந்து. அவர் ஒரு முஸ்லிம். நாங்கள் நண்பர்கள். துயரத்தில் இருந்தால் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வோம். எங்கள் வாழ்வாதாரத்தை அழிக்க வன்முறை கும்பல் முயல்கிறது. தனி ஆளாக இருந்தாலும் மசூதியை இடிக்க வரும்போது புல்டோசர் முன் நிற்பேன். மசூதியைக் காப்பேன்’ என்று ஜஹாங்கீர்புரியில் வசிக்கும் ஒரு சிறு வணிகர் கூறுகிறார்.
மனிதநேயத்தின் மெல்லிய இந்த இழைகளைப் பற்றிக் கொண்டு நாம் இருண்ட கரிய மேகங்களிலிருந்து வெளியேறுவோம். இந்த இந்து-முஸ்லிம் சகோதர சகோதரிகளின் வலிமை மற்றும் நல்லெண்ணங்கள் மீது மட்டுமே நாம் நம்பிக்கை வைத்து முன்னேற முடியும் என்பதை உணர்வோம்.
(ஏப்ரல் ஆங்கில இந்து நாளிதழில் வந்த கட்டுரையின் ஒரு பகுதி)
(தமிழில் : கடலூர் சுகுமாரன் (94437 28774)

Spread the love