September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

இதற்கு நான் ஆசைப்படவில்லை (பாலகு)மார்க்கா..!

டாக்டர் ஜி. ராமானுஜம்


சில மாதங்களுக்கு முன் செயற்கை அறிவைப் பற்றி எழுதியிருந்தேன். முக நூல் போன்ற இணைய தளங்களில் இத்தளமும் நமக்கு வேண்டிய பொருளை நாம் கேட்காமலேயே கணித்து ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ எனக் கேட்கும். சில சமயங்களில் அது பயனுள்ளதாக இருந்தாலும் பல சமயங்களில் அபத்தமாக இருக்கும்.
நாம் இணையத்தில் எதாவது ஒரு விஷயத்தைத் தேடி விட்டுப் பின் நாம் அதை மறந்தாலும், வேலை முடிந்து திரும்பும் அப்பாவிடம் வாங்கி வரச் சொன்ன பொருளை ஞாபகம் வைத்திருந்து கேட்கும் குழந்தை போல ஒவ்வொரு முறை இணையத்துக்குள் போகும் போதும் ‘என்ன வேண்டாமா? வாங்கலியா’ எனக் கேட்டுக் கொண்டே இருக்கும். 16 வயதினிலே படத்தில் கமல் ‘சந்தைக்குப் போணும்… ஆத்தா வையும்… காசு குடு!’ என மந்திர உச்சாடனம் போல் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கும். போய்த் தொலையட்டும் என ஒரு தடவை அந்த லிங்க்கை அமுக்கினால் அவ்வளவுதான்.. நாம் தொலைந்தோம்.
நண்பர் ஒருவர் வீடு கட்டிக் கொண்டிருந்தார். வீடு கட்டுவது என டைப் அடிக்க நினைத்தவருக்கு கட்டை விரலில் சனி பிடித்துக் கொண்டது. வீடு கூட்டுவது என டைப் அடித்துவிட்டார். தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான துடைப்பங்கள், பிரஷ், டஸ்டர், வேக்குவம் க்ளீனர்கள் என விளம்பரங்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.
இப்படியெல்லாம் விளம்பரங்கள் வராமல் இருக்க என்ன வழி என ஒருவர் இணையத்தில் தேடினார். அதன்பின் ஏகப்பட்ட விளம்பரங்கள்! “எங்களது சாப்ஃட்வேரைப் பயன்படுத்துங்கள். விளம்பரங்களே வராது !” என.
நம்மைப் பற்றிய பல தகவல்களை இணையம் அறிந்து கொண்டாலும் பிரச்சினைதான். சில வருடங்களுக்கு முன் ஒரு வீடியோவைப் பார்த்தேன். எல்லாவற்றோடும் ஆதார் எண்ணை இணைப்பதால் வரும் தொந்தரவுகளைப் பற்றிய நகைச்சுவை வீடியோ. ஒருவர் சீஸ் சாண்ட்விச் ஆர்டர் செய்வார். அவரது ஆதார் எண்ணைக் கேட்பார் கஸ்டமர் கேரில் இருக்கும் பெண். ஆதார் எண்ணைக் கம்ப்யூட்டரில் அடித்த அந்தப் பெண் ‘சாரி சார்! உங்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் சீஸ் சாண்ட்விட்ச் சாப்பிட முடியாது’ என்பார். அவரது மருத்துவ அறிக்கைகளும் ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்டிருந்தன. சரி வெஜிட்டபிள் சாண்ட்விட்ச் ஆவது கொண்டுவாருங்கள். நேரில் வரும்போது பணம் தருகிறேன் என்பார்.
கஸ்டமர் கேர் பெண் ‘கொஞ்சம் பணத்தைத் தயாராக வைத்திருங்கள் சார். ஏற்கனவே உங்கள் க்ரெடிட் கார்டுக்கு ஒழுங்காக நீங்கள் பணம் செலுத்தவில்லை’ என்பார். உடனே பேச்சை மாற்றிய அவர் ‘எங்கள் வீட்டு அட்ரஸ் சொல்லவா?’ என்பார்.
‘அதெல்லாம் எங்களுக்குத் தெரியும். அதான் ஆதார் இருக்கே! ஆனா உங்க வீட்டு நாய்க்கு ரேபீஸ் தடுப்பூசி போடவில்லை. ஆகவே நாங்க நேரில் வரமுடியாது சார். நீங்களே வந்து வாங்கிக் கொள்ளுங்கள்’ என்பார்.
நொந்து போன வாடிக்கையாளர் ‘நானே வரேன். சாண்ட்விட்சையாவது கொஞ்சம் சீக்கிரம் கொடுங்கள்’ என்பார்.
அதற்கு அந்தப் பெண் ‘உங்க பைக்கைத்தான் தவணை கட்டலைன்னு வங்கி எடுத்திட்டுப் போயிடுச்சுல்ல… அதனால் நீங்க நடந்து வர்ரதுக்குள்ளே ரெடியா வச்சிருப்போம் சார்’ என்பார்.
இது போன்றே 80-களில் இங்கிலாந்து டி.வியில் வந்த “டூ ரோனீஸ்” என்ற ஒரு தொடரில் கம்ப்யூட்டர் மூலம் ஒரு மனிதனுக்கு சிகிச்சை அளிப்பதைப் பற்றி நகைச்சுவையாக எடுத்திருப்பார்கள். ஒரு ஆண் தன்னைப் பற்றிய தகவல்களை எல்லாம் மருத்துவம் செய்யும் கம்ப்யூட்டரில் டிக் அடித்துக் கொண்டே வருவார். எல்லாக் கேள்விகளையும் கேட்டு ஆராய்ந்த கம்ப்யூட்டர் இறுதியில் “வாழ்த்துக்கள்! நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள்!” என்று சொல்லும்.
‘புதுப்புது அர்த்தங்கள்’ திரைப்படத்தில் எஸ்.பி.பி. பாடிய ‘கல்யாணமாலை’ என்ற பாடலை இணையத்தில் ஒரு முறை தேடினேன். நான் தேடியது ஏதோ மேட்ரிமோனியல் தளம் என நினைத்து அதன்பின் ஒவ்வொரு முறையும் ‘26 வயது; சிவ கோத்திரம்; மாநிறம், அரசு வேலையில் இருக்கும் அழகான பெண்’ என்றெல்லாம் விளம்பரங்களைக் கண்ணில் காட்டிக் கொண்டே இருக்கிறது முகநூல். எனக்குக் கல்யாணம் ஆகி பத்தாம் கிளாஸ் படிக்கும் மகள் இருக்கிறாள். ‘இதற்கு நான் ஆசைப்படவில்லை மார்க்!’ என்று முகநூல் ஓனரிடம் கதற வேண்டும் போல் இருந்தது.
இணையத்தில் ஒரு முறை மன நலம் பாதித்தவர்களுக்கு திருமண உறவில் ஏற்படும் சட்டச் சிக்கல்களுக்காக விவாகரத்து தொடர்பான சட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்தடுத்த நாட்களில் தொடர்ச்சியாக சுலபமாக விவாகரத்து செய்ய வேண்டுமா?.. 30 நாட்களில் விவாகரத்து! இன்னொரு வாழ்க்கைத்துணை அமைய வேண்டுமா? மீண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? எங்களை அணுகுங்கள்!.. என்றெல்லாம் அழைப்புகள் வரத்தொடங்கின.
தூக்கமின்மை தொடர்பாகப் பார்த்தால் எங்களது தலையணையை வாங்குங்கள், இந்த தாயத்தை அணியுங்கள்! குழந்தை போல் தூங்குவீர்கள்! என்றெல்லாம் வந்தன… தற்கொலை தொடர்பாகப் பார்த்தால் உறுதியான நைலான் கயிறு! ஸ்ட்ராங்கான அரளி விதைகள்!! .. போன்ற விளம்பரங்கள் வருமோ என்னவோ!
இந்தக் கட்டுரையில் செயற்கை அறிவைப் பற்றி எழுதி இருக்கிறேன். இனி செயற்கை அறிவைப் பற்றிய விளம்பரங்களாக வருமே.. அதற்கு நான் தயாராக வேண்டும்..!

(9443321004 – [email protected] )

Spread the love