September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

இடித்தற் பொருட்டல்ல உறவு

உறவுகள் தொடர்கதை
எஸ் வி வேணுகோபாலன்
திரைப்பட நடிகர் வி கே ராமசாமி அவர்கள் மீது நெருங்கிய உறவுக்காரர்கள் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தங்களுக்கும் பாகம் உள்ள வீட்டை அவர்களுக்குச் சொல்லாமல் விற்று விட்டார் ராமசாமி என்பதுதான் பிரச்சனை.
வழக்கை விசாரித்த நீதிபதி, ‘அய்யா, நீங்கள் கலைத்துறையில் மிகவும் அறியப்பட்ட மனிதர். நீங்களே இப்படி செய்யலாமா, வீட்டை விற்றது உண்மையா ?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு வி கே ஆர் சொன்ன பதில், அவரையே சிரிக்க வைத்துவிட்டது: ‘அய்யா, நீங்க சொல்றது வாஸ்தவம்.. எனக்கு இருக்கற கடனுக்கு அந்தத் தெருவையே வித்திருக்கணும். என் பேர்ல இருக்கற வீட்டை மட்டும் வித்தது தப்பா?’
கடன் என்கிற சொல்லுக்குத் தமிழில் அந்த ஒரு பொருள் மட்டுமா இருக்கிறது, கடமைக்கும் அதுதானே! அனுபவத்திலிருந்தும்தானே உருவாகின்றன சொற்கள்!!
மூத்த படைப்பாளி கி.ரா. மறைவுக்குப் பிறகு, அவரது ‘காய்ச்ச மரம்’ எனும் கதை வாட்ஸ் அப்பில் அதிகம் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. அதிர்ச்சியடைய வைக்கும் கதை.
நான்கு வீடுகள், நிலபுலன்கள், 2000 வெள்ளிக்காசுகள் வைத்திருக்கும் நிமாண்டு நாயக்கர், நான்கு மகன்களையும் அழைத்து, ஊர் மத்தியஸ்தர் பாறைப்பட்டி நாயக்கர் முன்னிலையில் கூறு சீட்டு போட்டு, எல்லாவற்றையும் பிரித்துக் கொடுத்துவிடுகிறார், ஒற்றை நயா பைசா தனக்கென்று வைத்துக் கொள்ளாமல் ! அவரும் மனைவி பேரக்காள் இருவரும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மகன் வீட்டில் தங்குவது என்று இவர்கள் முடிவு. பெற்றோரை எப்படி வெளியேற்றுவது என்பது சொத்தை உடமையாக்கிக் கொண்டவர்கள் முடிவு என்பது போகப்போகத் தெரியும். தற்செயலாகப் பார்க்கவரும் மகள் கொடுக்கும் கொஞ்சம் காசை வைத்துக்கொண்டு மதுரைக்குப் போய் அப்படியே ராமேஸ்வரம் போய்விடுகின்றனர் மூத்த தம்பதியினர். மத்தியஸ்தம் செய்த நாயக்கர் சில ஆண்டுகள் கழித்து நேர்த்திக் கடன் செலுத்த ராமேஸ்வரம் போகையில், அவர் கண்ணில் பட்டுவிடுகின்றனர். நாயக்கர் தம்பதியினர், கோயில் வாசலில், பிச்சை எடுத்துக் கொண்டு! அவரை அடையாளம் தெரிந்து கொள்ளும் பேரக்காள் பேசும் ஒற்றை வார்த்தை: ‘எம் பிள்ளைங்க நல்லா இருக்காங்களா’..
இதை இந்த சமூகத்தின் உருவகக் கதையாகக் கொண்டு, பெற்ற கடன் மறந்தவர்கள்தான் பிள்ளைகள் என்று முடிவுக்கு வந்துவிடத் தேவையில்லை. நம்பிக்கை வைக்க அஞ்சி, எல்லாவற்றையும் தங்கள் பொறுப்பில் வைத்துக் கொண்டு நிம்மதியற்று வாழும் முதியவர்களும் உண்டு. எல்லாக் கஷ்ட காலத்தையும் பெற்றோரைத் தாங்கியவாறே கடந்து போகும் அருமையான பிள்ளைகளும் உண்டு.
உங்கள் ‘பெண்ணும் சன்னும்’ காப்பாற்ற மாட்டார்கள், பென்சன்தான் காப்பாற்றும் என்று ஓய்வூதியக் கோரிக்கை மீது உரையாற்றும் சில அன்பர்கள் சொல் ஜாலத்தைக் காட்டுவதுண்டு. பெற்றோர் மீது கரிசனம் வைத்திருக்கும் குழந்தைகள் கேட்டால் அது எத்தனை பெரிய உளவியல் வன்முறையாக ஒலிக்கும் என்று நமக்குத் தோன்றுவதில்லை. எதையும் பொதுவான விஷயமாக மாற்றிப் பேசுவது, உறவுகளைத் தழைக்க வைக்க உதவாது. அன்பை உணர வாய்ப்பற்று வறண்டு போகும் வாழ்க்கையில் காசு மட்டும் கையில் இருந்து என்ன இன்பத்தை இலையில் பரிமாறி விட முடியும்?
வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் மூளும்போது, ‘இப்பவே இவ்வளவு பேசுற, வயசான காலத்துல நீயெல்லாம் எங்களை எங்க வச்சு காப்பாத்தப் போறே’ என்று தாயோ, தந்தையோ பேசி விடுவதுண்டு. எங்கேயோ கேள்விப்பட்ட, திரையில் பார்த்த, அக்கம்பக்கத்தில் காதில் விழுந்த விஷயங்கள் எல்லாம் பூதாகரமாக நெஞ்சில் ஓடி அந்த வார்த்தையைப் பேசு பேசு பேசு என்று தூண்டிவிட, பேசி விடுகின்றனர். நாவினால் சுட்ட வடு ஆறாது என்பது பள்ளிக்கூடத்தில் இரண்டு மதிப்பெண்களுக்கான வாசிப்பு மட்டும்தானா, என்ன! பெரிய பெரிய கட்டிடங்களை எழுப்புவதற்கு நீண்ட காலமும் உழைப்பும் தேவைப்படுகிறது. ஆனால், தகர்க்க மிகச் சில நிமிடங்களும், கொஞ்சம் சொற்களும் போதுமானதாக இருக்கிறது.
எந்த உறவும், எந்த நட்பும் சமூகப் போக்கில் உரசலுக்கு ஆட்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றன. ஆனாலும், அன்பின் பூங்காற்று காயங்களை ஆற்றிக் கொடுக்கிறது. மடித்துவைத்த பாயை விரித்து உறவுகள் அமர்ந்து பேசக் கேட்டுக் கொள்கிறது. (உறவும் நட்பும் வளரட்டுமே)
(94452 59691 [email protected] )

Spread the love