May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஆர் எஸ் எஸ் உயர்த்திப் பிடிக்கும் இந்துத்துவம்

இந்து மதம் வேறு.. இந்துத்துவம் வேறு. இரண்டும் ஒன்றல்ல. இந்தியாவில் இந்துராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் ஆர்எஸ்எஸ்-சின் சித்தாந்தமே இந்துத்துவம். அது ஓர் அரசியல் கோட்பாடு. ஆக்டோபஸ் போன்று பல்வேறு பெயர்களில் பல்வேறு கிளைகளைப் பரப்பி இந்தியா முழுவதும் நாட்டின் அனைத்துப் பிரிவு மக்களிடையேயும் ஊடுருவிப் பரவியுள்ள அமைப்பே ஆர்எஸ்எஸ். அதன் அரசியல் பிரிவான பாஜக நாட்டின் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்து நாக்பூரிலிருந்து வரும் ஆர்எஸ்எஸ் கட்டளைகளை சிரமேற்கொண்டு நிறைவேற்றி வருகிறது. ‘சர்சங்சாலக்’ என அழைக்கப்படும் இதன் தலைவர் மோகன் பகவத் இந்தியா முழுவதும் தற்போது வலம் வருகிறார். வரலாற்றைத் திருத்தியும், திரித்தும் உண்மைக்குப் புறம்பாகவும் பேசுவதில் ஆர்எஸ்எஸ் பேர்வழிகள் சமர்த்தர்கள் என்பதை பலர் அறிவதில்லை.


இந்திய மக்கள் தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறார் மோகன் பகவத். நம் நாட்டில் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தக் கூற்றுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. அதே போல இந்தியாவில் நிலவி வரும் சாதிய உணர்வுக்குத் தீர்வு சனாதன இந்து மதம்தான் என்று அவர் கூறியுள்ளது நகைப்புக்குரியது. நாட்டில் சாதியவாதம் தலைவிரித்து ஆடுவதற்கு அடிப்படைக் காரணமே சனாதனம் வகுத்துத் தந்த நால்வர்ணக் கோட்பாடுதான்.


அடுத்து, இந்துக் கோயில்கள் எல்லாம் அரசின் பராமரிப்பில் இருப்பது குறித்த தன்னுடைய ஆதங்கத்தையும் சர்சங்சாலக் வெளிப்படுத்தியுள்ளார். இந்துக் கோயில்களின் பராமரிப்பை இந்து அமைப்புகளிடமே விட்டுவிட வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ்-சின் பிரச்சாரம் தற்போது பலமாக நடந்து கொண்டிருக்கிறது. முன்னர் தனியார்களின் பராமரிப்பில்தான் இந்துக் கோயில்கள் இருந்தன. அதில் நடந்த நிர்வாக முறைகேடுகளைக் களைந்திடவும், கோயில்களின் கோடிக்கணக்கான சொத்துக்களைப் பாதுகாக்கவுமே இந்து அறநிலையத் துறை உருவாக்கப்பட்டது. இந்துக் கோயில்களை மீண்டும் தனியார்களிடம் விடவேண்டும் என்ற கோரிக்கை பழைய முறைகேடுகளை மீண்டும் கொணரும் முயற்சிதான். மக்கள் ஏமாந்துவிட வேண்டாம் என்பதே நம் வேண்டுகோள்.

-ஆசிரியர் குழு

Spread the love