May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஆப்கானிஸ்தானில் நடக்கப் போவது என்ன..?


இருபதாண்டுகளுக்கு முன் ஆப்கனில் நிலைகொண்டிருந்த பயங்கரவாதிகளை அழித்து அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டப் போவதாகச் சொல்லி சிங்கத்தின் கர்ஜனையுடன் நுழைந்த அமெரிக்க இராணுவம், இன்று பாம்பைப் போல் சத்தமின்றி நழுவி ஓடிவிட்டது. ஆனாலும் ‘என்னோட மீசையில ஒண்ணும் மண் ஒட்டலியே’ என்று சமாளிக்கிறது. உலகெங்கும் இருக்கும் நாடுகளில் தனக்கு அடிபணியாத ஆட்சிகளைக் கவிழ்த்து தனக்கு ஏதுவான பொம்மை ஆட்சியை நிறுவுவதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வாடிக்கையான அரசியல் உத்தி. ஆப்கனில் முன்னாள் சோவியத் ரஷ்யாவின் ஆதரவுடன் நஜிபுல்லா தலைமையிலிருந்த சோசலிச ஆட்சியை வீழ்த்துவதற்காக தாலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் உட்பட அனைத்து ஆதரவையும் அளித்து வளர்த்தது அமெரிக்கா. வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது. அமெரிக்கா வளர்த்துவிட்ட பயங்கரவாதிகள் ஆப்கன் அரசைக் கைப்பற்றி அமெரிக்க ராணுவத்தையே விரட்டியடிக்கும் அளவிற்கு வலுப்பெற்று விட்டனர். மத அடிப்படைவாதிகளான தாலிபான்கள் ‘ஆப்கான் இஸ்லாமிய அமீரகம்’ தோன்றியுள்ளது என்றும் ஷரியத் வழியில் ஆட்சி நடைபெறும் என்றும் பிரகடனப்படுத்தியுள்ளனர். ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளாக இருந்த ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த அமெரிக்க, நேட்டோ படையினரும் அவர்களுக்குத் துணைநின்ற மக்களும் நாட்டை விட்டு வெளியேறத் துடிக்கின்றனர். ஆப்கனிலிருந்து இந்தியாவுக்கு வரவிரும்பும் இந்தியர்களை அழைத்துவரும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரஷ்யா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தாலிபான்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று தெரிகிறது. தெற்கு, மத்திய ஆசிய நாடுகளின் புவியியல் அரசியலிலும் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தாலிபான்கள் 2001-க்கு முன் நடத்தியது போன்ற பிற்போக்கு மதவாத அரசியலையே நடத்துவார்களா, அல்லது கால மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு செயல்படுவார்களா.. பெண்களைப் பற்றிய அவர்களது பார்வையில் சில மாற்றங்களாவது ஏற்படுமா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அமெரிக்க வல்லரசுக்கு இளைய பங்காளியாக இருந்துகொண்டு அமெரிக்க ராணுவத்திற்கு வலு சேர்க்கும் முயற்சியை இந்தியா கைவிடுவதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. இதுதான் நாம் கவலைப்பட வேண்டிய விஷயம். ஆப்கன் அனுபவத்திலிருந்து கற்க வேண்டிய பாடத்தை உலக நாடுகள் கற்றுக் கொண்டு ஐ.நா.சபையின் கரங்களை வலுப்படுத்த முன்வர வேண்டும். அமெரிக்காவின் யதேச்சதிகாரப் போக்கினைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு ஐ.நா. வலுப்பெற வேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு. -ஆசிரியர் குழு

Spread the love