August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஆணவக் கொலைகளுக்கு முடிவு எப்போது?

கடலூர் சுகுமாரன்,


“இவர்களுடைய குடும்பம்தான் இனி எனது குடும்பம்” என உறுதியாகத் தெரிவித்தார் அஷ்ரின். நாகராஜு என்ற 25 வயது நிரம்பிய தன் கணவனை ஆணவக்கொலையில் பறிகொடுத்தவரின் உறுதிமொழி இது.
நாகராஜு என்ற ஒரு தலித் இளைஞனை தன்னுடைய தங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டு விட்டார் என்பதற்காக அவருடைய சகோதரன் சையத் முகமது மோபின் மற்றும் அவருடைய சகோதரியின் கணவன் முகமது மசூத் இருவரும் நாகராஜுவைத் துரத்தித் துரத்தி வெட்டிக் கொன்றார்கள்.
நம்முடைய நெஞ்சைப் பதற வைக்கும் இந்த கொடூர சம்பவம் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி இரவு 8.45 மணிக்கு நான்கு வீதிகள் சந்திக்கும் ஒரு முனையில் நடந்துள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் விகரபட் மாவட்டத்தின் மார்பில்லியில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரியில் வில்லிபுரம் நாகராஜன் மற்றும் அஷ்ரின் சுல்தானா இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள். 2000 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் கலந்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.
நாகராஜு பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். விவசாயக் கூலித் தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமியரான அஷ்ரினின் தந்தை ஒரு தினக்கூலி. அஷ்ரின், நாகராஜு நட்பு விரைவில் காதலாக கனிகிறது. திருமணம் முடிக்க விரும்புகின்றனர். அஷ்ரினுக்கு மாப்பிள்ளை பார்க்கத் துவங்கும் நேரத்தில் மோபினுக்கு இந்த காதல் தெரியவருகிறது. மிகவும் ஆக்ரோஷமாக அதனை எதிர்க்கிறார். மோபின் மனம் தளரப்போவதில்லை என்பதை உணர்ந்த அஷ்ரின் ஜனவரி 30-இல் வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஆரிய சமாஜத்தில் இந்து திருமண முறைப்படி நாகராஜுவை மணக்கிறார். தன் பெயரை பல்லவி என மாற்றிக் கொள்கிறார். தகவலறிந்த மோபினும் மசூதும் அஷ்ரினைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். அங்கு நாகராஜை விரும்பி மனதார திருமணம் செய்து கொண்டுள்ளதாக அஷ்ரின் அனைவர் முன் வாக்குமூலம் தருகிறார்.
அதற்குப் பிறகு அவர்கள் வாழ்க்கை இயல்பாக பயணிக்கிறது என நினைத்த போதுதான் மே 4 அன்று துள்ளத் துள்ள அஷ்ரின் கண்ணெதிரிலேயே அவர் சகோதரனால் நாகராஜு வெட்டிச் சாய்க்கப்படுகிறார். ஒருவரை ஒருவர் மனதார விரும்பினார்கள் என்பதைத் தவிர ஒரு குற்றமும் அறியாத அந்த இளம் ஜோடிகளின் 7 வருடக் காதல் மற்றும் 92 நாட்கள் திருமண வாழ்க்கை ஒரு பயங்கரமான சோக முடிவிற்கு வந்தது. கொலை நடந்த சில மணி நேரத்தில் மோபினும் மசூதும் காவல் துறையிடம் சிக்கினர். வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தக் கொலையை இரு மதங்களுக்கு இடையிலான திருமணத்துக்கு எதிர்வினையாக பார்க்கமுடியாது. சாதி வெறுப்பே இதில் முன்னுக்கு வந்து இருக்கிறது. ஒரு பெண் தலித் ஒருவரை திருமணம் செய்து கொண்டதை அவமானமாக உணரும் கருத்து இதற்கு காரணமாகிறது.
2018-ம் வருடம் நால்கொண்டாவில் இதேபோல நடந்துள்ளது. உயர்ஜாதி வைசிய குலத்தைச் சேர்ந்த ஒருவரின் மகள் அமிர்தா, தலித் இனத்தைச் சேர்ந்த பிரணவை மணந்தபொழுது கூலிப்படையை ஏவி விட்டு அந்த இளைஞர் கொல்லப்பட்டார். அப்போது அமிர்தா கர்ப்பமாக இருந்தார். வெறுப்பு, ஆணவம், சாதிவெறி என வரும்பொழுது பெண், கர்ப்பிணி, குழந்தை, மகள், பேத்தி என எதுவுமே பெரிதாகத் தெரிவதில்லை. கொலை வன்மமும் ரத்த வெறியும் மட்டுமே முன்னால் நிற்கின்றன.
தமிழ்நாட்டிலும் தொடர்ந்து பல ஆணவக் கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அண்மையில் கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட 5 நாட்களில் புதுமணத் தம்பதியை, பெண்ணின் அண்ணன் தனது உறவினருடன் சேர்ந்து படுகொலை செய்த கொடூரம் நடந்தேறி உள்ளது.
அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என எல்லோரும் போராடினாலும் இத்தகைய ஆணவக் கொலைகள் நடைபெறுவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இத்தகைய ஆணவக்கொலைகளுக்கு எதிரான சட்ட வரைவு ஒன்றை தேசிய மகளிர் ஆணையத்தின் கலந்தாலோசனையின்படி உருவாக்கி கொடுத்துள்ளார் ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவருமான சுபாஷினி அலி.
(94437 [email protected])

Spread the love