September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஆசிரியர் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் கே.ஏ.

தேவராஜன் மறைவு
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினைத் தோற்றுவித்து அயராது உழைத்த தோழர் கே.ஏ.தேவராஜன் (கே.ஏ.டி. என்று தோழர்களால் அழைக்கப்பட்டவர்) 9-8-2022 அன்று நம்மை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்தார். தன் வாழ்நாளை எல்லாம் ஆசிரியர் நலங்காக்க மட்டுமே செலவழித்தவர். சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்.
கே.ஏ.டி. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பரங்குன்றம் வட்டாரச் செயலாளராக தனது ஆசிரியர் இயக்கப்பணியைத் தொடங்கியவர். அன்றைய மதுரை மாவட்டத்தலைமையின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்து ஆசிரியர்களைத் திரட்டிய மதுரை மேற்கு வட்டாரச்செயலாளர் எல்.கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து மதுரை மாவட்டத்தில் இயக்கத்தைக் கட்டினார். 1984-ம் ஆண்டில் தொ.பள்ளி ஆசிரியர் கூட்டணியின் எதேச்சதிகாரத் தலைமை ஒன்பது மாவட்டச் செயலாளர்களை நீக்கியபோது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உருவானது. கே.ஏ.டி. அதன் மாநில செயற்குழு உறுப்பினரானார். 1985-ல் ராஜீவ் காந்தி கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து ஒரு ஆவணம் உருவாகப் பாடுபட்டார். பின்னர் மாநிலத் தலைவராகத் தேர்வு பெற்று பொதுச்செயலாளர் செ.நடேசன், மாநிலப் பொருளாளர் மா.ச.முனுசாமி ஆகியோருடன் இணைந்து செயல்பட்டார். மத்திய அரசு ஆசிரியர்களுக்கிணையான ஊதியம் என்ற முக்கியமானதொரு கோரிக்கையைப் பெற ஜாக்டீ-அரசு ஊழியர் பேரமைப்பு 1988-ம் ஆண்டில் உருவானது. 22-6-88 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம், 22-7-1988 அன்று அண்ணா சாலை முற்றுகைப் போராட்டம் ஆகியவற்றின் முடிவில் அக்கோரிக்கையை கொள்கையளவில் ஏற்றுக் கொள்வதாக அப்போது அதிகாரத்தில் இருந்த ஆளுநர் ஆட்சி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பின்னர் 1989-ம் ஆண்டில் கலைஞர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அதற்கான ஆணைகளைப் பிறப்பித்தார்.
பிரிவுத் துயரால் தவிக்கும் தோழர் கே.ஏ.டி.-யின் மனைவிக்கும், அவரைக் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்த அவரின் ஐந்து புதல்விகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஆசிரியர் இயக்கத்தில் முத்திரை பதித்த தோழர் கே.ஏ.டி.-யின் மறைவுக்கு புதிய ஆசிரியன் இதழின் அஞ்சலி.
ஆசிரியர் குழு

Spread the love