September 29, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அறைகூவல்

லோ. விக்னேஷ்
கால்களால் பூமியை மிதித்துப் பிளக்க வேண்டுமென்று துடிப்பவள் போல் தரையை ஓங்கி அடித்து வேகமாக நடந்து கொண்டிருந்தாள் ஜெனிடா, முதுகில் மாட்டி இருந்த புத்தகப் பையின் தோல் பட்டைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு. உதடுகள் உதறல் எடுப்பது போலவும் ஏதோ முணுமுணுப்பது போலவும் இருந்தது. தீராத வெறுப்பை முகத்தில் காண முடிந்தது.
எப்போதுமே பள்ளிக்கூடம் முடித்து பாட்டியின் பூ வியாபாரத்திற்கு உதவி செய்ய பிராட்வே பேருந்து நிலையத்திற்குச் செல்லும் வழக்கப்படியே அன்றும் சென்றாள்.. தரையில் பழைய சினிமா பேனருக்கு மேலே பரப்பி வைக்கப்பட்ட குவியலுக்குப் பின்னால் அவள் பாட்டி, நடுங்கும் விரல்களால் தன்னால் முடிந்த வேகத்தில் மிகவும் பொறுமையாகவே பூக்களை தொடுத்துக் கொண்டிருந்தாள். சைக்கிளில் டீ கொண்டு வந்தவர் அவர்கள் கேட்காமலேயே வழக்கம்போல் இருவருக்கும் டீ கொண்டுவந்து வைத்தார். இருபது ரூபாய்த் தாளை பாட்டி எடுத்து கொடுத்தாள் டீ குடித்துக் கொண்டே.
தரையையே பார்த்துக் கொண்டிருந்த அவளைப் பார்த்து பாட்டி, “ஜெனிக் கண்ணு, டீ குடிச்சிட்டுப் பூ கவருங்கள எடுத்துட்டுப் போடீ” என்றாள். டீயை அப்படியே விட்டுவிட்டு ஜெனிடா நிறமற்ற பாலித்தீன் கவர்களுக்குள் கட்டி வைக்கப்பட்டிருந்த பூக்களை வெடுக்கென்று எடுத்துக்கொண்டு பேருந்துகளில் அமர்ந்திருப்பவர்களிடமும், வெளியே பேருந்துக்காக காத்து கொண்டிருந்தவர்களிடமும் விற்கச் சென்றாள்.
பலவிதமான மனிதர்களின் குரல்கள், விதவிதமான பொருட்கள் விற்க வந்த வியாபாரிகளின் குரல்கள், எதுவுமே அவள் காதில் விழுந்ததாக தெரியவில்லை. அவளுக்குள் கேட்டுக்கொண்டிருந்தது எல்லாம் வேறு ஒரு முரட்டுக் குரல்: “இங்க பாரு ஜெனிடா, இதையெல்லாம் வெளிய சொன்ன, உனக்கு நல்லதில்ல பாத்துக்க, எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல உனக்குதான் கெட்ட பேரு, அதோட இந்த வருஷம் பத்தாவது பரீட்சைல பாஸ் ஆவறதெல்லாம் நடக்கவே நடக்காது. ஞாபகம் இருக்கட்டும்”.
“மா பூ எவ்ளோ? எவ்ளோ மா பூ?” என்று இரண்டு முறைக்கு மேல் யாரோ பயணி ஒருத்தி கூப்பிட்டும் கேட்காதவளாக இருந்தாள் ஜெனிடா. வெள்ளரிக்காய் விற்கும் ஏழாம் வகுப்பு சிறுவன் கையைப் பிடித்து உலுக்கி, ’அக்கா’ என்றவுடன்தான் நிதானத்திற்கு வந்தாள். பூ கேட்டவருக்கு விலை சொல்லும் முன்பே அந்தப் பேருந்து கிளம்பி விட்டது. தன்னை மீறி வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வேறு பேருந்து நோக்கி நடந்து சென்றாள் ஜெனிடா.
ஜெனிடா ஏறிய பேருந்தில் கல்லூரி மாணவர்கள் மூன்று நான்கு பேர் ஏதோ நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் வாங்க மறுத்த போதும் அவர்களுக்குப் பக்கத்து இருக்கையில் வைத்து விட்டுச் சென்றனர். எதுவும் பேசாமல் பூ கவர்களை கையில் பிடித்தபடி பேருந்தில் பயணிகளை நாடிப் போய்க்கொண்டிருந்தாள் ஜெனிடா.
“அன்பார்ந்த பேருந்து பயணிகள் அனைவருக்கும் வணக்கம்!” என்று வண்டிக்குள் திடீர் என்று ஓங்கி ஒலித்த குரலால் அதிர்ந்தாள் ஜெனிடா.
“கல்வியை வியாபாரம் ஆக்காதே, எல்லோருக்கும் இலவச கல்வி கொடுன்னு குரல் கொடுக்கும் மாணவர் சங்கம் நாங்க…. அதே நேரத்தில், கல்வி நிலையங்கள்ல மாணவர்களுக்கு, குறிப்பா மாணவிகளுக்கு எதிரா சொல்லப்படாத பாலியல் குற்றங்கள் நடக்குது.. இந்தப் பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஒரு மாநாடு நடத்தறோம்….பொது மக்கள் ஆதரவு தரணும், நிதி அளிக்கணும்னு பணிவோடு கேட்டுக்கறோம்…” என்று நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருந்த அமைப்பிலிருந்து ஒரு கல்லூரி மாணவி உரத்துப் பேசிக் கொண்டிருந்தார்.
பேருந்தில் இருந்த ஒரு நடுத்தர வயதுக்காரர், “ஏம்மா, இப்ப என்ன பொம்பள பசங்க பாதுகாப்புக்கு குறைச்சலு, பொம்பள பசங்க மாதிரியா இருக்குதுங்க, எப்ப பாரு ஆம்பள பசங்களோடதான் ஜோடி ஜோடியா திரியுதுங்க, இதுங்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுக்கணும். சொல்லப்போனா அடக்கிதான் வைக்கணும். இப்ப இவங்க படிக்கிறதுக்கு மட்டும் யாரு தடையா வந்துட்டா. பிரதமர் பெண் குழந்தைகளைப் படிக்க வைங்கனுதான் சொல்றார்?” என்றார்.
இன்னொரு குரல் உடனே, “பஸ்ல கூட பொம்பளைங்களுக்குத் தான் ஃப்ரீ இதுக்குமேல என்னதான் பண்ணணுமா இப்போ? படிக்கிற வயசுல எவனெவனோ சொல்றதெல்லாம் கேட்டுட்டு சும்மா இப்படி முட்டாள்தனமாக பேசி வாழ்க்கையை அழிச்சிக்காதீங்க.” என்றது.
“யார் சார் அது பேசிக்கிட்டே போறீங்க…நீங்க பேசுறது ஒண்ணும் மாணவிகள் மேல இருக்கற அக்கறை மாதிரி தெரியல, அவருக்கு என்னடான்னா பிரதமர் மேல பாசமும், உங்களுக்கு ஃப்ரீ டிக்கெட் கிடைக்காத ஏக்கமுமா தான் இருக்குது!”என்றவுடன் பயணிகளிடையே சிரிப்பலை எழுந்தது.
“எனக்கு எதுக்குமா ஃப்ரீ டிக்கெட், எனக்கென்ன டிக்கெட் எடுக்க வக்கில்லையா? உங்கள மாதிரி உண்டியல் தூக்கிட்டுப் பொய் சொல்லிப் பிச்சையா எடுக்கிறேன்?” என்று குரல் வந்த திசை நோக்கி அந்த மாணவி கோபத்தை மறைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“ஆமாம் சார் உங்க வீட்டுப் பெண்ணுக்குப் படிக்கிற இடத்துல பாலியல் சீண்டல் நடக்க கூடாதுன்னுதான் பிச்சை எடுக்கிறோம். அவங்களுக்கு நல்ல கழிப்பறை வசதியும், தண்ணீர் வசதியும் இருக்குதான்னு யோசிச்சு இருக்கீங்களா என்னிக்காவது? படிக்கிற இடத்துல யாராலயாச்சும், ஏன் பாடம் எடுக்குறவங்களாலேயே கூட அவங்களுக்கு வர பிரச்சினைய அவங்க யாரு கிட்ட சொல்லுவாங்க, யோசிச்சிருக்கீங்களா? பள்ளிக்கூடம் சேருகிற பெண் குழந்தைகள் எத்தனை பேர் கல்லூரி வரைக்கும் போறாங்க… எத்தனை பேர் பாதியிலேயே விடுபடறாங்கன்னு தெரியுமா….தெருவோர குடிசையில் வாழ்ந்து பாத்ரூம் கூட இல்லாத இடத்திலிருந்து படிக்க வர மாணவிகள் படிப்பு பாதில நின்னா அதுக்கு பிரதமர் பொறுப்பில்லையா, படிக்க போன எடத்துல தற்கொலை பண்ணிட்டு சாகறவங்களுக்கும், அரசாங்கத்துக்கும் சம்பந்தமில்லையா? ’பேட்டி படாவ், பேட்டி பச்சாவ்’ னு பிரதமர் பேசிட்டா மட்டும் ஆச்சா, படிப்ப பாதில நிறுத்தி குழந்தை திருமணங்களும் நடந்துட்டுதான் இருக்கு. இன்னும் எத்தனை நாளுக்கு பொண்ணுங்க மேலயே பழியைப் போடுவீங்களாம்? ஆம்பள பசங்களோட பேசுனாலே தப்புன்னு ஆயிடாது, பொண்ணுங்கள தப்பா நினைக்கிறதுதான் தப்புனு உங்க வீட்ல வளர்ற பசங்களுக்கு சொல்லிக் கொடுங்க, எல்லாரும் சமம்னு அழுத்தம் பாடத்துல கொண்டுவந்து சொல்லிக் கொடுக்கத்தான் சார் நாங்க பிச்சையெடுக்குறோம்”. என்று முடிக்கவும் பயணிகள் சிலர் புருவங்கள் உயர்த்திப் பார்த்தனர்.பேசிய மாணவியும் மற்றவர்களும் உண்டியல் வசூலை ஆரம்பித்தனர். ஜெனிடா நின்ற இடத்திற்கு இடது பக்கத்தில் இருந்த இருக்கையில் இருந்து இரண்டு பெண் பயணிகள், “இந்த மாதிரி பொண்ணுகிட்ட எவனும் தப்பா நெருங்க பயப்படுவான். பொண்ணுனா இப்படிதான் இருக்கணும்” என்று பேசிக்கொண்டிருந்தனர். தன்னருகே உண்டியலோடு வந்து நின்ற மாணவியை நிமிர்ந்து பார்த்தாள் ஜெனிடா. தன் சீருடை சட்டைப்பையில் இருந்த சில்லறைக் காசுகளை எவ்வளவு என்று பாராமல் எடுத்துப் பேட்டாள். இருவரும் பரஸ்பரம் புன்னகைப் பூக்கள் பரிமாறிக் கொண்டனர்.
அடுத்த நாள் பள்ளிக்கு விரைந்த ஜெனிடாவின் முகத்தில் எந்தவித பதட்டமும் இல்லை. தெளிவாக இருந்தாள்.
பள்ளியின் வாசலில் அவளுக்கு முன்பாக முதல் நாள் மாலை பேருந்தில் பேசிய அதே மாணவி நின்றிருந்தார். அவரது பையில் இருந்து துண்டு பிரசுரங்கள் வெளிவந்தன ஜெனிடாவும் அங்கு வந்து சேர்ந்த சக மாணவர்களும் மாநாட்டிற்கான துண்டு பிரசுரத்தை எல்லோருக்கும் விநியோகிக்கக் தொடங்கினர் ஏளனமாக வாங்கிக் கொண்டு நடந்த ஒருவர், அதை வாசிக்கையில் கதி கலங்கியது முகத்தில் தெரிந்தது
(9087658942 – [email protected])

Spread the love