September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அறியப்படாத மாணிக்கங்கள்

முனைவர் ச.சீ. இராஜகோபாலன்.

பள்ளியிறுதி வகுப்பிற்கு முந்தைய வகுப்பில் நான் படிக்கும் பொழுது பாடப் பகுதியில் இடம் பெற்றிருந்த தாமஸ் கிரே என்ற புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் எழுதிய ஒரு இரங்கற்பா என் மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கல்லறையொன்றிற்குச் சென்ற அக்கவிஞர் சமாதிகளில் உள்ளவர்களின் பெயர்களைக் காண்கிறார். ஆழ்கடலில் மக்கள் கண்ணில் படாது புதைந்து கிடக்கும் மாணிக்கக்கல் போன்றும், பாலைவனத்தில் மலர்ந்து தனது மகரந்த வாசனையை மனிதர்கள் யாரும் நுகராவண்ணம் வாடும் நறுமணமிக்க மலர் போன்றும் ஊர் அறியா வண்ணம் இறந்தவர்களில் பலர் வாழ்ந்திருக்கக்கூடும் என்று நினைக்கிறார். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக ஒரு இரங்கற்பாவை இயற்றினார். அச்செய்யுட்பகுதியை எனது ஆசிரியர் மிகுந்த உணர்ச்சிகரமாக எங்களுக்குக் கற்பித்தார். அதே செய்யுளை மீண்டும் பட்ட வகுப்பிலும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி’ இதழ் அறியப்படாத ஒரு நன்மாணிக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர் பெயர் முக்தாபாய் சால்வே. 1855-ம் ஆண்டில் 14 வயதுச் சிறுமியாக இருந்தபோது அவர் எழுதிய கட்டுரையில் தம் இன மக்கள் பார்ப்பனர் உள்ளிட்ட மேல் சாதியினரால் எவ்வாறு மனதளவிலும், உடலளவிலும் சித்திரவதை செய்யப்படுவதை விளக்குகிறார். முக்தாபாய் சாதீய அமைப்பிலேயே மிகத் தாழ்ந்ததாகக் கருதப்படும் மங்க் சமூகத்தைச் சார்ந்தவர். அவரது எழுச்சிக் குரலில் ‘உயர்’ சமூகத்தினரைப் பார்த்து வினாவெழுப்புகிறார். “மெத்தக் கற்ற பண்டிதர்களே! உங்கள் வெற்று வேதாந்தங்களுக்கு முழுக்குப் போடுங்கள். நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று அறைகூவல் விடுக்கிறார். 14 வயதுப் பெண் எத்தனை அவமதிப்புகளைச் சந்தித்திருந்தால் இவ்வாறு வெளிப்படையாகச் சவால் விடமுடியும் என்று சிந்தித்துப் பார்க்க முடியும்.ஜோதிராவ் பூலேயும், சாவித்திரிபாயும் தொடங்கிய பள்ளி அனைத்து சமூகத்தினர்க்கும் இடமளித்தது. அப்பள்ளி தொடங்கப்பட்டதால் முக்தாபாய்க்குக் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று ஆண்டுகள்தான் அவர் கல்வி கற்றார். ‘மகர் மற்றும் மங் சமூகத்தினரின் துயரங்கள்’ என்று தலைப்பிட்ட அக்கட்டுரையில் “நம்மைப் பார்ப்பனர்கள் வெகுவாக இழிவுபடுத்துகின்றனர். மாடு, எருமைகளை விடக் கேவலமாக நம்மை நடத்துகின்றனர், தலித் மக்களை அவர்களது நிலங்களினின்று விரட்டிவிட்டு, தாம் வாழ மாட மாளிகைகளைக் கட்டிக் கொண்டுள்ளனர். தலித் பெண்கள் படும்பாடு சொல்ல முடியாதது. பிரசவத்திற்கு மருத்துவ உதவி இல்லாது குழந்தை பெறும் அவல நிலை உள்ளது. தமக்கு இடமில்லாத இந்து மதத்தில் அதன் சம்பிரதாயங்களை மட்டும் திணிக்கின்றனர். மதத்தின் பெயரால் பார்ப்பனர் பல சலுகைகள் பெற்று சுக வாழ்வு வாழ்கின்றனர். மங்இனத்தவர்க்கு உணவு, குடியிருப்பு, கல்வி ஆகியவை மறுக்கப்படுகிறது. கல்வி மூலமே நாம் வலிமை பெற்று இந்த அநியாயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதுதான் நாம் அனுபவிக்கும் துயரங்களுக்கு ஒரே தீர்வு” என்று எழுதுகிறார். இளம் வயதிலேயே இப்படியொரு கட்டுரையை எழுதும் அளவுக்கு அவருக்கு திறன் இருந்தது.
இக்கட்டுரை ‘தியானோதய’ என்ற மராத்தி இதழில் வெளிவந்தது. முக்தாபாய் ஆதிக்கச் சக்திகளால் இருட்டடிப்பு செய்யப்பட்டார். அவரது வாழ்க்கை பற்றி பலரும் ஏதும் அறியப்படாத நிலையே உள்ளது. இவ்வாறு மறைக்கப்பட்ட வரலாறுகள் ஏராளம்.கற்றலின் நோக்கம் எழுத்தறிவு மட்டுமல்ல,சமூகச் சீர்கேடுகளை அகற்றிட உதவும் வலிமை மிக்க சாதனமே கல்வி.
(044-23620551 – [email protected])

Spread the love