September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அரசியல்

தேர்தல் முடிவுகளும், தேசத்தின் தேவைகளும்…

                                                                                                                   மதுக்கூர் இராமலிங்கம்

                       தமிழகம், கேரளம், மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள் முடிந்துள்ளன. அசாமில் மட்டும் பாஜக ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கொரோ

னா காலத்திலும் அந்த மாநிலத்தைச் சுற்றிச் சுற்றி வந்தனர். அனைத்து வகையான அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டனர். எனினும் அவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் அங்கு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது.

கேரளத்தில் அதிக இடங்களைப் பிடிப்போம் என்றது பாஜக. முதல்வர் பினராயி விஜயனோ பாஜக-விற்கு சட்டப்பேரவையில் ஒரே ஒரு இடம் இருக்கிறது.. அதையும் இந்தத் தேர்தலில் இல்லாமல் செய்து கணக்கை முடித்து வைப்போம் என்று சொன்னார். சொன்னபடியே செய்தும் காட்டிவிட்டார்.

                    தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பார்த்தது. எப்படியாவது ரஜினிகாந்த்தை களத்தில் இறக்கி ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று முதலில் கணக்குப்போட்டது. ஆனால், போக்குக் காட்டிக் கொண்டே வந்த அவர் கடைசியில் இவர்களது வலையில் சிக்கவில்லை. அரசியலுக்கு வரும் முன்னோட்டமாக சிஸ்டம் சரியில்லை.. அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று கூறிவந்தவர், எனக்கு கிட்னி சரியில்லை.. இந்த கொரோனா காலத்தில் அரசியலுக்கு வர என் உடல் நிலை அனுமதிக்காது என்று கூறிவிட்டு மொத்தமாக ஒரு முழுக்குப் போட்டுவிட்டார். கட்சி ஆரம்பிக்கா விட்டாலும் பரவாயில்லை. பாஜக-விற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தால் கூடப் போதும் என்று எண்ணி ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது கூட கொடுத்துப் பார்த்தார் மோடி. ஆனால், அவரோ `நன்றி’ என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டு மௌனமாகவே இருந்துவிட்டார். அதிமுக-விடம் அடித்துப் பிடித்து இருபது தொகுதிகளைப் பெற்ற பாஜக, நான்கு இடங்களில் வெற்றி பெற்று விட்டது. அதுவே தமிழகத்தின் மதச்சார்பற்ற முகத்திற்கு சிறிதளவு பின்னடைவுதான்.

             தேர்தல் நெருங்கிய நேரத்தில் பாஜக புதுவையில் பல சித்து விளையாட்டுகளைச் செய்தது. கிரண் பேடியை அனுப்பிவிட்டு, பொறுப்பு துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜனைக் கொணர்ந்து, காங்கிரசிலிருந்து சில எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, இறுதியில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கவும் செய்தது பாஜக. தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றுவதில் வெற்றி அடைந்தது. ஆனாலும் ஆட்சியமைக்கும் அளவுக்கு எண்ணிக்கை தேறவில்லை. சதுரங்க ஆட்டத்தின் அடுத்த நகர்வாக, மூன்று எம்.எல்.ஏ.க்களை நியமித்து, கொல்லைப்புற வழியாக மூன்று பேர் சட்டசபைக்குள் ஏறிக் குதிக்க பாஜக வழியமைத்துக் கொடுத்தது. இன்னும் சில எம்எல்ஏக்களை சந்தையில் வாங்கினால் முடிந்தது கதை ! இதற்கிடையே, புதுவை, புதுடில்லி, காஷ்மீர் போன்ற யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநருக்கே முதல்வரைவிட அதிக அதிகாரம் இருக்கும் வண்ணம் ஒரு சட்டத்திருத்தத்தை மோடி அரசு கொணர்ந்துவிட்டது. அதனால், பெயருக்கு என்.ரெங்கசாமி `முதல்வர்’ என்று பெயர்ப் பலகையை மாட்டிக் கொண்டாலும், ஆட்சி நடத்தப் போவதென்னவோ தமிழிசை மேடம்தான்! தமிழிசை சௌந்தரராஜனுக்கு அவருக்குக் குடைச்சல் கொடுக்கும் பொறுப்பு மட்டுமே.

மொத்தத்தில் கூட்டிக் கழித்துப் பார்த்தால், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜக-விற்கு பின்னடைவு என்றே சொல்லலாம். கொரோனா காலத்திலும் கூட நாட்டு மக்களைப் பற்றி கவலைப்படாமல் பறந்து பறந்து மோடியும் அமித் ஷாவும் பிரச்சாரம் செய்தாலும், பாஜக நினைத்தமாதிரி முடிவுகள் அமையவில்லை.

                தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக நீடித்து வந்த அதிமுக அரசு அகற்றப்பட்டு திமுக ஆட்சியமைத்துள்ளது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக அரசு என்பது பாஜக-வின் பினாமி அரசாகவே செயல்பட்டது. மாநில உரிமைகளை, தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நியாயமான நிதியை மத்திய பாஜக கூட்டணி அரசு மறுத்தபோதும், அதிகாரத்தில் தொற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் அதிமுக அனைத்துக்கும் தலையாட்டியது.

               தமிழகத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு பாஜக தலைவர்களில் ஒருவராகிய வானதி சீனிவாசன் இரண்டு தலையாட்டி பொம்மைகளை பரிசாகக் கொடுத்தார். இது நடந்து வந்த ஆட்சி குறித்த ஒற்றை வரி மதிப்பீடு. ஒரு வழியாக தலையாட்டி பொம்மைகளின் பொம்மலாட்டம் முடிவுக்கு வந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் கூட ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகளுக்கு இடையே முட்டல், மோதல். அப்பத்திற்கு பூனைகள் அடித்துக் கொள்ளும்போது பஞ்சாயத்துக்கு வந்த குரங்கு குதூகலம் அடைந்தது என்பது பள்ளிக்கூடக் கதை மட்டுமல்ல. தமிழக நடப்புக் கதையாகவும் உள்ளது. கடைசியில் எப்போதும் போல ஓபிஎஸ்-தான் விட்டுக் கொடுக்க வேண்டி வந்தது.

               தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள திமுக அரசின் தொடக்க நிலை செயல்பாடுகள் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளன. பெண்களுக்கு இலவச பஸ் பயணம், கொரோனா கால நிவாரண நிதியாக ரூ.4,000, ஆவின் பால் விலை குறைப்பு, `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை, கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முதல்வரின் காப்பீட்டு அட்டைதாரர்களின் செலவை அரசே ஏற்கும் முடிவு ஆகியவை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கான அச்சாரமாக அமைந்துள்ளன.

                 ஸ்டெர்லைட் போராளிகள் மீதான வழக்குகள் வாபஸ், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை, கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு என அறிவிப்புகள் வரிசையாகத் தொடர்கின்றன.

                 தேசியக் கல்விக் கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அறிவித்ததோடு, கல்வித்துறை செயலாளரை அழைத்து மத்திய அரசு நடத்திய கூட்டத்தைப் புறக்கணித்ததும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பல்கலைக்கழகப் பாடங்களில் இடம் பெற்றிருந்த தவறான பகுதிகள் நீக்கப்பட்டிருப்பதும் நல்ல விஷயம். எனினும் கல்வித்துறையில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்களை ஆசிரியர் சங்கங்கள், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை, உயர்கல்வியைப் பாதுகாப்போம் (ளுயஎந ழபைநச நுனரஉயவiடிn) ஆகிய அமைப்புகள் விரிவான கோரிக்கை மனுக்களை அளித்துள்ளன.

                  கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதை சமாளிப்பதும் திவால் நிலையில் விடப்பட்டுள்ள மாநில அரசின் நிதி நிலையை சீர் செய்வதும் புதிய அரசின் முன் உள்ள பெரும் கடமையாக முன் நிற்கிறது.

                  கேரளத்தில் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் ஆட்சியிலிருந்த கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததில்லை. அந்தச் சாதனையை இடது ஜனநாயக முன்னணி நிகழ்த்தியுள்ளது. முதல்வரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் புதியவர்கள். பெரும்பாலும் இளைஞர்கள். கடந்த ஐந்தாண்டு காலம் கேரள மாநில அரசு சந்தித்த சவால்கள் ஏராளம். புயல், மழை, வெள்ளம் என இயற்கைப் பேரிடர்கள், நிபா வைரஸ், கொரோனா வைரஸ் என அடுத்தடுத்து நோய்த் தாக்குதல்கள் தொடர்ந்தன. இவற்றை மாநில அரசு சமாளித்த விதம் கேரள மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகமுடிவது உள்ளிட்ட முற்போக்கான திட்டங்களையும் பினராயி அரசு செயல்படுத்தியுள்ளது. அரசுப்பள்ளிகள்,மருத்துவமனைகள்,வலுவானகட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது… நோய்த் தொற்றுகளை எதிர்கொண்ட விதம் கேரள மக்களின் அங்கீகாரத்தை மட்டுமல்ல, உலகளாவிய பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும் பாஜக-வும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை மத ரீதியாகவும், சாதிய ரீதியாகவும் பிரித்து மோத விட்டன. அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் பெயர்போன மேற்குவங்கம் இவர்களால் பெருமளவு வன்முறைக்களமாக மாற்றப்பட்டது. இந்த பிளவு அரசியலில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்த கூட்டணி பின்னுக்குத் தள்ளப்பட்டது. எனினும் இது குறித்து இடதுசாரிக் கட்சிகள் ஆழமான பரிசீலனையை நடத்தி மீண்டெழ வேண்டும்.
தேர்தல் முடிவுகள் ஒருபுறமிருக்க கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் மக்களைப் பாதுகாப்பதில் ஒன்றிய அரசு முழுத் தோல்வி அடைந்துள்ளது. இது சர்வதேச அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தியப் பிரதமர் எங்கே என்று பல்வேறு சர்வதேச ஊடங்கள் கேள்வி கேட்கின்றன. ஆனால், அவரோ வழக்கம்போல வார்த்தைகளால் பந்தல் போட்டுக்கொண்டிருக்கிறார். அதில் இளைப்பாற முடியாமல் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். வளர்ச்சியின் நாயகன் என்று அறிமுகப்படுத்தப்பட்டவர், இப்போது இயலாமையின் நாயகனாக அம்பலப்பட்டு நிற்கிறார்.
(94422 02726 – [email protected]
gmail.com)

Spread the love