September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அம்பது நாளில் அம்பானி ஆவது எப்படி?

டாக்டர் ஜி. ராமானுஜம்
புகழ் பெற்ற சர்தார்ஜி ஜோக் ஒன்று உண்டு. ஒரு சர்தார்ஜி தினமும் இறைவனிடம் ‘எனக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைக்கச் செய்..’ எனக் கதறுவாராம். ஒரு நாள் ‘இருபது வருடங்களாகப் புலம்புகிறேனே! உன் இதயம் என்ன இரும்பாலானதா?’ என ஆண்டவனை அறம் பாடியபோது இறைவன் அவர் முன் தோன்றி ‘முட்டாளே! முதலில் அதற்கு நீ ஒரு லாட்டரி டிக்கட் வாங்க வேண்டும்!’ என்றாராம்.
செயல் இல்லாமல் வெறும் சொற்களால் எந்த பிரயோசனமும் இல்லை என்பதைத்தான் இந்த ஜோக் கூறுகிறது. ஆனாலும் நமக்குச் செயலைவிட வெறும் வார்த்தைகளின்மீதுதான் பிரியம் அதிகம். டன் கணக்கில் பேசுவதை விட அவுன்ஸ் கணக்கில் வேலை செய்வது மேலானது என்பார்கள். ஆனாலும் வெறுமே பேசிக் கொண்டும் கற்பனை செய்துகொண்டும் இருப்பதன் மீதான காதல் நமக்குத் தீரவே தீராது.
இதற்கொரு உதாரணமாக கிரிக்கெட் வட்டாரங்களில் ஒரு சம்பவத்தைக் கூறுவார்கள். முக்கியமான கிரிக்கெட் மேட்ச் ஒன்று நடைபெறுவதற்கு முன்தினம் ஒரு அணியினர் தீவிர ஆலோசனை நடத்தினார்களாம். எதிரணியினரை எப்படி வெல்வது என அணித்தலைவர், பயிற்சியாளர்கள், உளவியலாளர்கள் என மணிக்கணக்கில் ஆலோசனை நடத்தியதில் வெறுத்துப் போன சீனியர் வீரர் ஒருவர் “எதிர் டீமை விட ஒரு ரன் கூட அடிக்கணும்! அவ்வளவுதான்! ஆளை விடுங்க!..” என்று சொல்லிவிட்டு இழுத்துப் போர்த்திக் கொண்டாராம்.
வெறும் வார்த்தைகளின் மீதான நமது காதலுக்குச் சிறந்த எடுத்துக் காட்டு சுய முன்னேற்ற, தன்னம்பிக்கை நூல்களின் விற்பனை. புத்தகக் கண்காட்சிகளில் டெல்லி அப்பளத்திற்கு அடுத்து அதிகம் விற்பது சுய முன்னேற்றப் புத்தகங்கள்தானாம். பொன்னியின் செல்வன் கூட அதற்கு அடுத்த இடத்தில்தான் இருக்கிறது. அதேபோல் யூட்யூப் வீடியோக்களில் சமையல் குறிப்புகளுக்கு அடுத்து அதிகம் பார்க்கப்படுபவை சுயமுன்னேற்ற வீடியோக்கள்தான். இலக்கிய உலகின் மிக முக்கிய ஆக்கங்கள் விற்பனையில் இரட்டை இலக்கை அடையவே தடுமாறும் நேரத்தில் தன்னம்பிக்கை நூல்கள் சக்கை போடு போடுவதன் பின்னால் உள்ள சமூக உளவியல் காரணிகளை நாம் ஆராய வேண்டும்
எந்தத் துறையாக இருந்தாலும் வெற்றி பெற மென்திறன்கள் எனப்படும் ஆளுமைத் திறன்கள் முக்கியம். அதாவது தகவல் தொடர்புத் திறன், நேர மேலாண்மை, உணர்ச்சிகளைக் கையாளும் திறன் ஆகியவை. இது போக விளம்பரம், தொழில் நடைபெறும் சூழல் ஆகியவையும் முக்கியம்.
இவை முக்கியம் தான். ஆனால்.. இவற்றைப் பற்றி மட்டுமே கவனம் செலுத்தினால் போதாது. இவற்றைவிட முக்கியம் அடிப்படைத் திறன்கள். அதாவது எந்தத் துறையில் நீங்கள் இருக்கிறீர்களோ அந்தத் துறை சார்ந்த திறன். நீங்கள் ஓட்டல் தொழிலில் இருந்தால் ருசியாகவும் தரமாகவும் சமைப்பது; மருத்துவராக இருந்தால் நோயைச் சரியாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, இசைக்கலைஞராக இருந்தால் நன்றாக இசைக் கருவியை வாசிப்பது போன்றவை.
என்னதான் மென்திறன்கள் இருந்தாலும் அடிப்படைத் திறனில் கோட்டை விட்டால் அவ்வளவுதான். ஒரு ஹோட்டல் மிகவும் நவீனமாக, அழகாக இருக்கும். முதலாளி நன்றாக அன்பாகப் பேசுவார். ஆனால் சாப்பாட்டை வாயில் வைக்க முடியாது என்றால் அந்த ஹோட்டல் நீண்ட நாள் தாக்குப்பிடிக்காது.
என்னிடம் ஒரு டிரைவர் இருந்தார். மிக மிக நல்லவர். சரியான நேரத்துக்கு வருவார். காரைக் கண்ணாடி போல் துடைத்து வைப்பார். மிகவும் நேர்மையானவர். ஒரு லட்ச ரூபாயைக்கூட அவரை நம்பி விட்டுவிட்டுப் போகலாம். ஆனால் அவருக்கு கார் மட்டும் ஓட்டத் தெரியாது. ‘வரும்.. ஆனா வராது’ என்னத்த கன்னையா போல காரை ஆங்காங்கே வேறு ஏதாவதோடு மோதி இடித்து விடுவார். அவரை எப்படி வேலையில் வைத்திருக்க முடியும்?
மென்திறன்களே இல்லாவிட்டால் கூட வெற்றி பெற முடியும். உதாரணம் திருநெல்வேலியின் புகழ்பெற்ற அல்வாக் கடை. அதற்கு பெயர்ப் பலகைகூட கிடையாது. கடையில் ஒரு குண்டு பல்பு மட்டுமே இருக்கும்.
துறைசார்ந்த அறிவு, உழைப்பு, பொறுமை இவற்றோடு ‘சைட் டிஷ்’ ஆக சுயமுன்னேற்ற நூல்களை வைத்துக் கொள்ளலாம். இந்த எல்லைகளைப் புரிந்து கொண்டு அவற்றை வாசிப்பதே அறிவுடைய செயலாகும். இல்லையேல் அது வெறுமே சொறிந்து கொடுத்தல் போன்று ஆகிவிடும்! .. சில சமயம் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வதைப் போன்றும்!!
(நன்றி உயிர்மை மாத இதழ் – ஏப்ரல் இதழில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி)
(9443321004 – [email protected] )

Spread the love