September 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அன்பால் அணை…

ஜனநேசன்


வெளிவாசல் இரும்புப்படலை யாரோ திறக்கும் சத்தம் கேட்டது. மென்துயிலில் ஆழ்ந்திருந்த சுப்பிரமணியம் நெஞ்சில் விரித்திருந்த புத்தகத்தை மேஜையில் வைத்தார். ஜன்னல்வழி ஊடுருவினார். மீண்டும் சார், பி.எஸ்.சார் என்ற குரல். பழகியதாக இல்லை.
‘உள்ளே வாங்க’ என்றபடி எழுந்தார்.
நாற்பத்தைந்து வயதர் ஒருவர் மிடுக்கும் பணிவும் கலந்த உடல்மொழியில் வணங்கினார்.
‘கோவிச்சுக்காதீங்க; வயசாயிருச்சில்ல.. உங்களை யாருன்னு என் ஞாபகத்துக்கு வரலை..’
‘சார் மன்னிக்கணும்’ என்றவாறு குனிந்தவர், சுப்பிரமணியம் தடுக்கும்முன் அவரது காலைத் தொட்டு வணங்கினார்.
‘விழக்கூடாது, எழுந்திரிங்க..’
‘சார்.. என் பேர் முத்துகிருஷ்ணன்; 1980-ல் நீங்கள் எனக்கு பத்தாம் வகுப்பு ஆசிரியர் ; அப்புறம் எனக்கு பதினொன்று, பனிரெண்டாம் வகுப்புகளில் கணிதமும், இயற்பியலும் நடத்தினீர்கள். உங்கள் ஆசீர்வாதத்தால் ரயில்வேயில் உயர் அதிகாரியாக வேலை பார்க்கிறேன். எங்கள் செட் மாணவர்கள் இருபதுக்கு மேற்பட்டவர்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். நம் பள்ளி ஆசிரியர்களை கவுரவிக்க விரும்புகிறோம். சார் ஒப்புதல் அறிந்த பிறகு, மதுரை, சென்னையில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்து அக்டோபர் ரெண்டாவது சனிக்கிழமை விழா நடத்தலாம் என்ற யோசனை. உங்கள் சம்மதம் கேட்கவே வந்தேன்…’
‘இந்தக் கிழவனை, என் மாணவன் ரயில்வே உயரதிகாரியாகத் தேடிவந்தது ரொம்ப சந்தோசம்.! வாங்கின சம்பளத்துக்கு எனது கடமையைச் செஞ்சேன். இதுக்கு பாராட்டு கௌரவம் எதுக்கப்பா.? என்கிட்டே படிச்சாலும் உனது முயற்சியால் உயரதிகாரியாக வந்திருக்கே. நான்தான் உன்னைப் பாராட்டணும். இதோ இந்த சத்தியசோதனை புத்தகம். இதைப் பலர் முழுசா புரிஞ்சிக்கலை. நீங்க மத்திய அரசில வேலை பார்க்கிறீங்க. உங்களுக்கு இது அவசியம். படிச்சு உங்க சமூகக் கடமையைச் செய்ங்க. என் ஆசீர்வாதமும், வாழ்த்துகளும் எப்போதும் உண்டு..!’
‘ரொம்ப நன்றி சார். ஏறக்குறைய முப்பது வருசத்துக்குப்பின் எல்லா நண்பர்களும் சந்திக்கிற சந்தோசத் தருணத்தில் உங்களைப் போன்ற ஆசிரியர்களால் உயர்ந்த நாங்க நன்றி தெரிவிக்கவும் வாழ்த்து பெறவும் விரும்பறோம். இது வெறும் நன்றி பாராட்டும் நிகழ்ச்சி மட்டுமல்ல; இன்றைய ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் நீங்கள் அடிக்கடி சொல்லும் சமூகப் பொறுப்பை உணர்த்தும் நிகழ்ச்சி என்று நாங்க நெனக்கிறோம். நீங்கள் அவசியம் குடும்பத்தோடு வரவேண்டும். அம்மா எங்கே காணலை…’
சுப்பிரமணியம் மனைவியின் போட்டோ பக்கம் திரும்பினார். மனைவி வாடிய மாலைக்கிடையில் வாடாத புன்னகையோடு மலர்ந்திருந்தார்.
‘சாரி சார். நீங்கள் அவசியம் இந்நிகழ்வில் கலந்து எங்களுக்கு புதிய தூண்டலையும் புத்துணர்ச்சியையும் தரவேண்டும். வர்றேன் சார்..’
கண்கள் பனிக்க சுப்ரமண்யம் அவரை வழியனுப்பினார்.
குறிப்பிட்ட நாளன்று முத்துகிருஷ்ணனும் மற்ற மாணவர்களும் தங்களது கார்களில் பிற்பகல் நாலுமணிக்கே சுப்பிரமணியம் வீட்டுக்கு வந்துவிட்டனர். தம் வீட்டின்முன் விதவிதமான கார்கள் நிற்பது பேரப்பிள்ளைகளுக்கு குதூகலம் ஊட்டியது. மகனுக்கு பெருமையாக இருந்தது. இப்படியானதொரு மாமனாரை சம்பளமில்லா காவல்காரரைப் போல் நடத்தினோமே என்ற உறுத்தல் மருமகளுக்கு. அதை வெளிக்காட்டாமல், சிரிப்பைப் படரவிட்டு, வந்தவர்களுக்கு பிஸ்கட், டீ கொடுத்து உபசரித்தாள். விழாவுக்கு குடும்பத்தோடு கலந்துகொள்ளத் தயாரானாள். மருமகளின் மாற்றம் உணர்ந்து மாமனாருக்கு மனம் பூரித்தது. வந்தவர்களிடம் மகன், மருமகள், பேரப்பிள்ளைகளைப் பற்றி பெருமைப்பட்டார்.
சரியாக ஐந்து மணிக்கு தலைமையாசிரியர் தலைமையேற்க விழா தொடங்கியது. முத்துகிருஷ்ணன் வந்தவர்களை வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பின்னர் “சுப்பிரமணியம் போன்ற ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியின் காரணமாகவே அவர்களது மாணவர்கள் சமூகத்திலும், அரசுப் பணியிலும் உயர்நிலை வகிக்கிறார்கள். இந்த ஆசிரியர்களின் மேன்மையை உணரமுடிகிறது. சுப்ரமணியத்தையும், அவரது சக ஆசிரியர்களையும் தேடி அழைத்து தாம் படித்த பள்ளியிலேயே பாராட்டுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் இப்பள்ளிக்குத் தேவையான கணினிகள், ஆய்வக உபகரணங்களை நீங்கள் வழங்க வேண்டும்” என்று உரையாற்றிவிட்டு, தனக்கு வேறு நிகழ்ச்சி இருப்பதாகக் கூறி விடைபெற்றார்.
முன்னாள் மாணவர்கள் சார்பாக தெலுங்கானா மாநில ஐஏஎஸ்அதிகாரியாக இருப்பவர் ஒருவரும், டெல்லியில் காவல்துறை அதிகாரியாக இருப்பவர் ஒருவரும், மராட்டிய சுங்கத்துறை அதிகாரியாக இருப்பவர் ஒருவரும் முன்னாள் ஆசிரியர்களின் சிறப்பான குணங்களை நினைவுகூர்ந்து நெகிழ்வாகப் பேசினர்.
அந்தவூர் ஓட்டல் அதிபராக இருக்கும் முன்னாள் மாணவர் முருகன் “எதைச் செய்தாலும் ஈடுபாட்டோடும், பிறருக்கு உதவும் வகையில் செய்யவேண்டும் என்பதை பி.எஸ்.சாரிடம் கற்றேன். எனது குடும்பச் சூழல் காரணமாக பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்கமுடியவில்லை. எனக்கு முன்னாள் பேசிய நண்பர்களைப் போல நான் உயரதிகாரியாக ஆகவில்லைதான். ஆனாலும் எதிர்நீச்சல்போட்டு இன்று இந்த ஊரில் ஓட்டல் அதிபராக மட்டுமல்ல, நகரின் முக்கிய பிரமுகராகவும் மதிக்கப்படுகிறேன். ஏழை மாணவர்களுக்கு உதவுகிறேன் இதற்குக் காரணம் இந்த ஆசிரியர்கள் ஊட்டிய கல்வியும், ஞானமும்தான்” என்று பேசினார்.
கூட்டம் நெகிழ்ந்து உருகியது. “முருகன் அளித்த அறுசுவை உணவே அவரது ஓட்டலின் தரத்தை உணர்த்துவதாக இருந்தது. இந்நிகழ்வுகளுக்கான அனைத்து செலவுகளோடு, நமது வெளியூர் நண்பர்கள் தங்கவும் அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். இவை அனைத்தும் ஆசிரியர்களுக்கு தனது காணிக்கை என்கிறார் முருகன்” என்று முத்துகிருஷ்ணன் முருகனைப் பாராட்டிப் பேசினார்.
நிறைவாக முன்னாள் ஆசிரியர்கள் சார்பாக சுப்பிரமணியம் சார் பேசுவதற்கு முன் எங்களது நண்பர்கள் இருபது பேரையும் இந்த பிரம்பால் ஓர் அடி அடித்து, ரீசார்ஜ் செய்ய வேண்டும்; மாணவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றார் முத்துகிருஷ்ணன்.
நேரடியாக வாழ்த்திப் பேசத் தொடங்கிய சுப்பிரமணியம் “இப்படியோர் நெகிழ்வான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு சக ஆசிரியர்கள் சார்பாக என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களது மாணவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பது எங்களுக்குப் பெருமிதம்தான்! ஆனால் ஒரு விஷயம். நான் 1983-லிருந்தே பிரம்பைப் பயன்படுத்துவதில்லை. அந்த ஜூலையில் ஒரு நாள் மதுரைக்கு போயிருந்தேன். ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். எதிரில் சாப்பிட்டவர் இலையை எடுத்துத் துடைக்க ஒரு பையன் வாளியோடு வந்தவன், என்னைப் பார்த்ததும் உள்ளே ஓடிவிட்டான். அவனைப் பார்த்த நொடியில் அந்தப் பையன் எனது வகுப்பு மாணவன்; புத்தகம் கொண்டு வராததற்கு அடிக்கடி என்னிடம் அடிபட்டவன் போலிருந்தது. எனக்கு உறுத்தலாக இருந்தது. சாப்பிட மனம் ஒப்பவில்லை; பணத்தைக் கொடுத்துட்டு அவனைப் பார்க்க ஓரமாக உட்கார்ந்தேன். பத்து நிமிடமாகியும் அவன் வரவில்லை. வகுப்பிலிருந்து விரட்டியதுமில்லாமல் வயிற்றுப் பிழைப்பில் இருந்தும் விரட்டி விட்டுட்டோமோ என்ற குற்றவுணர்வு வறுத்தெடுத்தது. அன்றிலிருந்து பிரம்பை நினைப்பதுகூட இல்லை.
அன்பால் அணைப்பது; இயலாதபட்சம் சொல்லால் கண்டிப்பது; பாடத்தை இயன்றளவு எளிமையாகவும், ஈர்ப்பாகவும் புரியவைப்பது என்ற நடைமுறையை வகுத்துக் கொண்டேன். இந்த ஞானத்தைத் தந்தவன் உருவம் இன்றும் வாளியோடு என்கண்முன் வந்து வழி நடத்துது. அவனிடம் மன்னிப்புக் கோரத் தேடுகிறேன்” என்று பேசிவிட்டு உடைந்த குரலையும், கசிந்த கண்களையும் சரி செய்யும் விதமாக சிறிது உறைந்தார்.
“அந்தப் பையன் நான்தான் சார்!” என்று கண்ணீர் பொங்க ஓடிவந்த ஓட்டல் அதிபர் முருகன், ஆசிரியரை அணைத்து கைகளைப் பற்றினார்.

(94422 83668 – [email protected])

Spread the love