May 17, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அனாதைப் பூனைகளுக்கு புதுவாழ்வு அளிக்கும் காபி கடை

சிதம்பரம் இரவிச்சந்திரன்


உற்றாரும் உறவினரும் இல்லாமல் தெருவில் அலையும் விலங்குகள் உலகில் எல்லா நாடுகளிலும் வாழ்கின்றன. இவ்வாறு தெருவில் இறக்கி விடப்படும் விலங்குகளில் நாய்களும், பூனைகளுமே முதலிடம் பெறுகின்றன. சக உயிரினங்களை நேசிக்கும் நல்ல மனிதர்கள் பலர் இவற்றிற்கு புதுவாழ்வு தரும்வகையில் பல முயற்சிகளைச் செய்கின்றனர். ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் ஒரு மெட்ரோ இரயில் பெட்டி இத்தகைய விலங்குகளுக்கு உரிமையாளர்களைத் தேடித்தரும் முயற்சியில் சமீபத்தில் ஈடுபட்டது. பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் காட்டோ காபி கடை என்றழைக்கப்படும் கடையில் இருக்கும் பூனைகள் விற்பனைக்கல்ல. விரும்புபவர்கள் அவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று செல்லப் பிராணியாக வளர்க்கலாம். வீட்டிற்கு கூட்டிச்சென்று வளர்க்க இயலாத பூனை ஆர்வலர்கள் கடையிலேயே இருந்து அவற்றுடன் கொஞ்சிக் குலாவலாம். இந்த காபிக் கடை பல விதங்களில் வித்தியாசமானது. காபிக் கோப்பைகளிலும், கடையில் திரும்பும் இடங்களில் எல்லாமும் பூனைகளின் அழகழகான படங்கள் காட்சி தருகின்றன. பூனையின் கை அளவில் தயாரிக்கப்பட்ட பிஸ்கட்டுகளும் இங்கு கிடைக்கும். இந்தக் கடைக்கு இப்போது வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வருகை தர ஆரம்பித்துள்ளனர். 2020 ஜூலையில் ரியோ டி ஜெனீரோவில் இந்த கடை தொடங்கப்பட்டது. அனாதையாக்கப்பட்ட பூனைகளைப் பாதுகாக்க, அவற்றை தத்து எடுப்பதை இலட்சியமாகக் கொண்டு ‘பங்கர் விஸ்கேர்ஸ்’ என்ற தன்னார்வக் குழு இந்த கடையை நடத்திவருகிறது. 2019ல் மட்டும் பிரேசிலில் 78 மில்லியன் செல்லப்பிராணிகள் குறிப்பாக பூனைகள், நாய்கள் தெருவில் அனாதையாக விடப்பட்டன. உரிமையாளர்கள் மரணமடைந்தது மட்டும் இதற்கு காரணமில்லை. உரிமையாளர்களே தெருவில் விரட்டிவிட்ட விலங்குகளும் இதில் உண்டு. இவ்வாறு வாழ்விழந்து தவிக்கும் இந்த விலங்குகளை பாதுகாப்பான கைகளில் ஒப்படைக்க, பராமரித்து கவனிக்க வாயில்லா இந்த ஜீவன்களுக்கு புது வாழ்வளிக்க விரும்புபவர்களிடம் கொண்டு சேர்ப்பதே இந்த அமைப்பின் குறிக்கோள். சக மனிதர்களை விலங்குகள் போல நடத்தும் மனிதர்கள் நிறைந்த உலகில் ஒரு கோப்பை ஆவி பறக்கும் காபியுடன் கொஞ்சுவதற்கு பூனைகளையும் அளிக்கும் பங்கர் விஸ்கேர்ஸ் போன்ற தன்னார்வக் குழுக்களின் நூதன முயற்சிகள் பூமியில் இன்னமும் மனிதமை முழுவதுமாக அழிந்துவிடவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.


(73390 89961 – [email protected])

Spread the love