September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அத்துமீறும் ஆளுநர்கள்

மதுக்கூர் இராமலிங்கம்
தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதுகுறித்து அப்போதைய ஆளுநர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. சிபிஎம் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்த டி.கே.ரங்கராஜன் இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு எழுதிக் கேட்டவுடன் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடமிருந்து அத்தகைய கோப்பு எதுவும் வரவில்லை என்று கூறிவிட்டார்கள். ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டதற்கு அந்தக் கோப்பைக் காணவில்லை என்று மிகவும் ‘பொறுப்போடு’ பதில் சொன்னார்கள்.
இந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மீண்டும் அதே மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அவரும் பல மாதங்கள் எடுத்துக் கொண்டு வரிக்கு வரி படித்து கடைசியில் மசோதாவை திருப்பி அனுப்பி விட்டார். அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. கூட்டத்திற்கு வந்த பாஜக வெளிநடப்பு செய்தது. அதிமுக உள்ளிட்ட மற்ற அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாக எடுத்த முடிவின் அடிப்படையில் சட்டப்பேரவையை மீண்டும் கூட்டி மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த முறை ஆளுநர் என்ன செய்யப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இது ஒருபுறமிருக்க தமிழக ஆளுநர் நீட் தேர்வை நியாயப்படுத்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது அப்பட்டமான அரசியல் சட்ட அத்துமீறல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிலைபாட்டுக்கு மாறாக தன்னுடைய தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை.
நாகாலாந்திலிருந்து தமிழகத்திற்கு மாற்றப்பட்ட முன்னாள் ஐ,பி.எஸ் அதிகாரியான ஆர்.என். ரவி தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை செய்ய வேண்டிய வேலையை செய்வது அராஜகமானது.
ஆளுநர் பதவி என்பது ஒன்றிய அரசினால் நியமிக்கப்படுகிற ஒன்றுதான். ஆனால் சுதந்திர இந்திய வரலாற்றில் பல ஆளுநர்கள் அத்துமீறி செயல்பட்டுள்ளனர். மாநில அரசுக்கு குடைச்சல் கொடுக்கும் திறனை வைத்தே ஆளுநர்களை ஒன்றிய அரசு மதிப்பீடு செய்கிறது. மேற்குவங்கத்தில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தையே ஆளுநர் முடக்கி வைத்துள்ளார்.
இதைப் பார்த்த தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திலும் சட்டப்பேரவை ஆளுநர் மூலம் முடக்கப்படும் என்றும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அடிப்படையில் இன்னும் 27 அமாவாசைகளில் திமுக ஆட்சி முடிந்து அதிமுக ஆட்சி வந்துவிடும் என்றும் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார். பத்தாண்டு காலம் அதிமுக ஆட்சி தமிழகத்தில் இருந்தது. அதில் சில ஆண்டுகள் இவர் இரவல் முதல்வராக இருந்தார். ஆனால் பத்து மாத காலம் கூட எதிர்க்கட்சித் தலைவராக இருக்க இவரால் முடியவில்லை. ஆளுநர் மற்றும் பாஜக துணையோடு ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கத் தயாராகிவிட்டார்.
இந்தப் பின்னணியில்தான் பாஜக அல்லாத மாநில முதல்வர்களின் மாநாட்டை நடத்தப்போவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது காலத்தின் தேவை என்பதில் சந்தேகம் இல்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை சீர்குலைக்க ஒன்றிய ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்த பாஜக முயலுமானால், அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு. ஆளுநர் பதவி என்ற ஒன்று தேவையா என்று கூட மாநில முதலமைச்சர்கள் விவாதிக்க வேண்டிய கட்டம் வந்துவிட்டது.
ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்பதையே உ.பி., பஞ்சாப், உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல்களில் அந்தக் கட்சி மேற்கொள்ளும் பிரச்சாரம் காட்டுகிறது. உ.பி.யில் பாஜக தோல்விப் பள்ளத்தாக்கை நோக்கி பயணம் செய்வதைத் தடுக்க அப்பட்டமான மதப் பகைமையைத் தூண்டிவிடுகிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். தன்னுடைய ஐந்தாண்டு கால ஆட்சிக்காலத்தில் அனைத்துப் பகுதி மக்களையும் வஞ்சித்த இவர், இந்தத் தேர்தல் களம் 80 சதவீதத்திற்கும் 20 சதவீதத்திற்கும் இடையில் நடக்கும் மோதல் என்று அறிக்கை வெளியிட்டார். 80 சதவீத இந்துக்களுக்கும் 20 சதவீத முஸ்லிம்களுக்கும் இடையிலான தேர்தல் என்று அதற்கு அர்த்தம். இது அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது. கொரோனா காலத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உ.பி.யும் ஒன்று. அதற்குக் காரணம் மாநில அரசின் செயலின்மை. பல்வேறு மனிதவளக் குறியீடுகளில் உ.பி. கடைசி இடத்தில் உள்ளது. இதையெல்லாம் மடைமாற்றம் செய்ய நான் மீண்டும் முதல்வரானால் உ.பி.யில் உள்ள முஸ்லிம் பெண்கள் பொட்டு வைத்துக் கொள்வார்கள் என்றும் அகிலேஷ் யாதவ் முதல்வர் ஆனால், உ.பி. மற்றுமொரு கேரளாவாகவோ மேற்கு வங்கம் ஆகவோ மாறிவிடும் என்று பேசுகிறார். அப்படி கேரளாவாக மாறினால் அது மக்களுக்கு நல்லதுதானே என்று பினராயி விஜயன் பதிலடி கொடுத்தார்.
உ.பி. தேர்தல் களத்தில் அவர்களது ஒரே ஆயுதம் இராமர் கோயிலாக இருந்தது. அதுவும் போதாது என்று மதுரா, காசி என கலவர நெருப்பை பற்ற வைக்க முயன்றனர். கடைசியில் எதுவும் பலனளிக்காது என்ற நிலையில், மத வன்முறையைத் தூண்டவும் துணிந்துவிட்டார்கள்.
உ.பி. இப்படியென்றால், கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சனையை பாஜக கிளப்பிவிட்டது. பள்ளிக்கு வரும் முஸ்லிம் குழந்தைகள் தங்கள் சீருடையோடு, ஹிஜாப் அணிந்து வருவது நீண்ட காலமாக அங்கே வழக்கமாக இருந்தது. இதனால் எந்தப் பிரச்சனையும் எழவில்லை. ஆனால் திடீரென்று பாஜக மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி.யின் தூண்டுதலின்பேரில் சில நிர்வாகங்கள் ஹிஜாப் அணிய தடைவிதித்தன. இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளிலும் பிரச்சனையைத் தூண்டிவிட்டு அதை தேசியப் பிரச்சனையாக்கியது சங்பரிவாரம்.
இது ஏதோ வெளிமாநில விவகாரம் என தமிழகம் ஒதுங்கிவிட முடியாது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது மேலூரிலும் இன்னொரு இடத்திலும் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்த முஸ்லிம் சகோதரிகளுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் மேலூரில் அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து பாஜக ஏஜெண்டை வாக்குச் சாவடியிலிருந்து வெளியேற்றினர்.
ஆர்எஸ்எஸ்-சின் நிகழ்ச்சி நிரலை ஃபாசிச பாணியில் நிறைவேற்ற சங்பரிவாரம் முயலும் நிலையில், மேலூர் வாக்குச்சாவடியில் எழுந்த ஒற்றுமை நாடு முழுவதும் கட்டப்பட வேண்டியது அவசியம்.
(94422 02726 – [email protected])

Spread the love