September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அதிகார மையத்திற்கு மோடி தன்னை உயர்த்திக் கொண்டது எப்படி..?

நீரா சந்தோக்
மோடியின் ‘கலப்பின’ மாடல் பூகோளத்தின் அடிப்படையிலும் தத்துவார்த்த அடிப்படையிலும் நாட்டின் அரசியல் வெளியை மாற்றிட விரும்புகிறது. மசூதிகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கோயில்களைக் கட்ட விரும்புகிறது. ஜனநாயகம் தழைத்தோங்க நேரு ஆற்றிய பங்களிப்பைப் புறக்கணித்து அறநெறிகளுக்கு எதிரான ஒரு அரசியல் மொழியை வளர்க்கவும் அது விரும்புகிறது. கும்பல் படுகொலைகள், காவல்துறை அராஜகங்களுக்கு நடுவிலே உயிர் வாழ்வதற்குக் கூட சிறுபான்மையினர் போராட வேண்டிய அவலம் நாட்டைச் சூழ்ந்துள்ளது. அரசியல், சமூக சூழல், பொதுவெளி ஏன் இப்படி மாறிப்போனது?
ஒரு நபரின் அதிகாரம் பூதாகரமாக வளர்ந்து அதன் விளைவாக எதேச்சாதிகாரம் இன்று தலைவிரித்து ஆடுகிறது என்று கூறும் ஆசிரியர் பி. ராமன்,கூசலளவ றiவா ளுவசடிபே டுநயனநச ஞடியீரடளைஅ என்ற தன் நூலில் அதை விளக்கிச் செல்கிறார்.
ஆர்எஸ்எஸ்ஸுடன் இணைந்து நிற்பது
பிரதம மந்திரி வேட்பாளராக ஆன நரேந்திர மோடிக்கு ஆர்எஸ்எஸ் உயர்மட்டத் தலைவர்களின் முழு ஆதரவையும் திரட்டித் தருவதாக 19.2. 2013 அன்று அதன் தலைவர் மோகன் பகவத் உறுதியளித்தார் என்பதிலிருந்து இவருடைய நூல் தொடங்குகிறது. மூத்த தலைவர்கள் எப்போது எங்கே அழைத்தாலும் அங்கே இருப்பேன் என்று மோடி உறுதியளித்தார். அவருடைய இலக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெற 272 தொகுதிகளைக் கைப்பற்றுவதுதான். ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமான இந்துத்துவ கோட்பாட்டை அவர் அமல்படுத்துவார் என்பது குறித்து அவர்களுக்கு முழு நம்பிக்கை இருந்தது.
ஆனாலும் வேறு சில தலைவர்கள் மோடியிடம் எச்சரிக்கையோடு இருந்தனர். அவரது கார்ப்பரேட் பாசமும் நவீன தாராளமயமாக்கலின் மீது அவர் கொண்ட மோகமும் ஆர்எஸ்எஸ் முன்னிறுத்தும் சுதேசிக் கொள்கைக்கு நேர் எதிரானது. ஆனாலும் மோகன் பகவத்தின் முழு ஆதரவும் அவருக்குக் கிடைத்தது. குஜராத் பெருமுதலாளிகளும் பிறமாநிலத் தொழில் அதிபர்களும் பகிரங்கமாய் மோடியின் பின்னால் அணிவகுத்து நின்றனர். உலகின் பிற நாடுகளில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிறகு சர்வாதிகாரியாக மாறிய பலரைப் போலவே இங்கேயும் ஒரு சர்வாதிகார அரசியல் தலைவரின் எழுச்சிக்கான சூழல் இப்படித்தான் ஏற்பட்டது. இந்துத்துவா மற்றும் கலப்படமற்ற நவீன தாராளமயம் இரண்டும் கலந்த கொடிய விஷத்தை அளிப்பதே மோடியின் அரசியல் வியூகமாக இருந்தது.
பொருளாதார தாராளமயமாக்கலும் அரசியலில் தாராளமற்ற தன்மையும் எப்பொழுதும் இணைந்தே வரும். கார்ப்பரேட்டுகள் முன்னதைக் கொண்டு வருவர். ஏராளமான நிதியையும், துதிபாடும் ஊடக நிறுவனங்களையும், மக்கள் தொடர்பு முகவர்களையும், டிஜிட்டல் பொறியாளர்களையும்,கள ஆய்வாளர்களையும் அவர்கள் மோடி அரசின் காலடியில் கொண்டுவந்து வைத்தனர். தாராளமற்ற தன்மையை இந்துத்துவா கோட்பாடு சாத்தியமாக்கியது. ஒவ்வொரு குடிமகனையும் பெரும்பான்மைவாதத்திற்கு அடிபணியச் செய்ய வாட்ஸ் அப் குழு நிர்வாக மேலாளர்கள், கொலையாளிகள், கள்ளச்சாராயப் பேர்வழிகள், சமூக மாஃபியாக்கள் என எல்லோரும் இந்த இரட்டைத் தத்துவத்தை ஆராதித்து செயல்படுவர். தேர்தல் பேரணிகள் எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு ஒரு புதிய இலக்கணத்தை மோடி ஏற்படுத்தினார். மிக பிரம்மாண்டமான திரைச்சீலைகளில் அவருடைய பிம்பம் காட்டப்படும். அவருடைய பஜனை கோஷ்டிகள் தன்னிலை மறந்து குதூகலிப்பார்கள். பழையனவற்றை எல்லாம் அடித்து நொறுக்கும் சர்வ வல்லமையுடைய நாயகனாக இந்தியாவின் விஸ்வகுருவாக அவர் திரும்பத் திரும்ப காட்சியளிப்பார்.
காட்சியும் இல்லை..குரலும் இல்லை
2014-ம் ஆண்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தது. நாடாளுமன்ற ஜனநாயகம் மிக வேகமாக சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்தது. மோடியின் நிர்வாக ஏற்பாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்கள் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டார்கள். அவர்கள் மக்கள் பணியாற்றிய காட்சி இல்லை. பிரதமர் அவர்களை பள்ளி மாணவர்களைப் போல நடத்துவார். நையாண்டி செய்வார். அதிகாரிகளுடன் அவர் நடத்தும் கூட்டங்களுக்கு அவர்களுக்கு அழைப்பு இருக்காது. அவர்களை பிரதமரே நேரடியாக சந்திப்பார். அமைச்சகங்களின் முக்கிய முடிவுகளை பிரதமர் அலுவலகமே இறுதிப்படுத்தும். ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகள் ஆர்எஸ்எஸ் கண்காணிப்பில் இருந்தது. அமித்ஷா கட்சியின் தலைவர் ஆனதிலிருந்து கட்சி இருவர் கட்டுப்பாட்டிலும் வந்துவிட்டது, அதிலும் மாற்றம் வருமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.
அதிகாரங்கள் குவிக்கப்பட்ட ஒன்றை ஆட்சி நல்லதொரு நிர்வாகத்தை நாடு முழுவதும் வழங்க முடியாது. எவ்வித முன் யோசனையும் திட்டமிடலும் இல்லாமல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கம் அலங்கோலத்தையும் வறுமையையும் அதிகரித்தது. மிகுந்த ஆரவாரத்துடனும் படாடோபத்துடனும் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் பிரம்மாண்டமான தோல்வியைத் தழுவின. ஆனாலும் ரிசர்வ் வங்கி, சிபிஐ முதலான அமைப்புகள் மத்திய அரசின் முழு கட்டுப்பாட்டிற்குள் கடத்திச் செல்லப்பட்டன. மோடியின் தேரோட்டம் இவ்வாறு தொடர்ந்தது.
2019-ம் ஆண்டு தேர்தலில் நாடாளுமன்றத்தில் பிஜேபி மேலும் கூடுதல் இடங்களைக் கைப்பற்றியது. அயோத்தி முதல் ஜம்மு காஷ்மீர் வரை உள்ள அதன் இந்துத்துவ நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றிக் கொள்ள இந்த வெற்றி மோடி அரசாங்கத்தை மேலும் ஊக்குவித்தது.
நிறுவனங்களின் சீர்குலைவு
எதேச்சதிகார ஆட்சியின் அலங்கோலங்களை ஆய்வு செய்தபின் தன் நூலின் இறுதிப் பகுதியில் இந்தியா பேராபத்திற்கு அருகே உள்ளது என்று ஆசிரியர் எச்சரிக்கிறார். ஒரு மனிதனின் தனி ஆளுமைக்கு உட்படுத்தப்பட்டு அதன் விளைவாக நாடாளுமன்றம் முதல் சிவில் சமூகம் வரை எல்லா ஜனநாயக அமைப்புகளும் சிதைக்கப்பட்டுள்ளன. அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய ஊடகங்கள் அதனை மறந்து அவர்களின் ஊதுகுழலாக மாறிவிட்டன. அதே நேரத்தில் மோடி அரசாங்கத்தின் கொள்கைக் குளறுபடிகள் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து பெருந்துயருக்குள் அவர்களை தள்ளியதை உணர முடியாமல் செய்வதிலும் வெற்றி அடைந்துள்ளனர்.
நாம் கேட்க விரும்பாத கேள்வி நமக்குள் எழுகிறது.. இந்திய மக்கள் அரசியல் உணர்வற்றவர்களாக மாறிவிட்டனரா? ஜனநாயகத்தை மதிக்கும் தலைவர்களைக் காட்டிலும் வலிமையான தலைவர்களால் ஈர்க்கப்பட்டு விட்டனரா?
-தமிழில் : கடலூர் சுகுமாரன்
(94437 [email protected])

Spread the love