June 26, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அண்ணன் பேச்சுக்கு மறுபேச்சு இருக்கப்பிடாது..!

தேனி சுந்தர்
சமீபத்தில் தொடக்க வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒன்று நடைபெற்றது. தமிழ், ஆங்கில மொழித் திறன் குறித்த பயிற்சி அது.
வந்திருந்த கருத்தாளர் பேசுகிறார்.. “வரி வடிவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொடுத்து ஒலி வடிவத்தைக் கெடுத்து விட்டனர். கல்வெட்டுகளில் இருந்த நம் எழுத்துகளின் அழகிய வடிவத்தையும் கெடுத்து விட்டனர். நம் மொழியை அழிப்பதற்கு என்றே ஒரு கும்பல் கிளம்பி உள்ளது..!” என்று ஆக்ரோசமாக பேசினார்.. அத்தோடு விடவில்லை.. சில எழுத்துகளை இப்படித்தான் எழுத வேண்டும் என்று எழுதியும் காட்டினார்..
அரசு சார்பில் நடக்கும் பயிற்சியில் ஒரு கருத்தாளர் இவ்வாறு சொல்கிறார் என்றால் பயிற்சிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் அது அங்கீகரிக்கப்பட்ட உண்மை.. கருத்து என்றுதானே நினைத்துக் கொள்வர்.. கூடவே இனிமேல் இப்படித்தான் எழுத வேண்டும் என்று குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க தொடங்கி விடுவார்களே..!
நான் எழுந்து கேட்டேன்.. “நம் மொழியின் எழுத்துச் சீர்திருத்தங்களை முன்மொழிந்தவர் தந்தை பெரியார். அதை நடைமுறைப்படுத்தியவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மொழியை அழிக்க வந்த கும்பல் என்று நீங்கள் சொல்வது யாரை..? அதேபோல தமிழக அரசின் ஆவணங்களிலும் பாட நூல்களிலும் இல்லாத ஒரு வடிவத்தை நீங்கள் சொல்கிறீர்கள்..இதற்கு யார் அனுமதி கொடுத்தது..? அங்கீகாரம் கொடுத்தது..? வரி வடிவம் இல்லாத காரணத்தினாலேயே ஏராளமான மொழிகள் அழிந்துள்ளனவே..? கல்வெட்டு மொழி அனைவருக்கும் புரியவில்லையே..?!” என்றெல்லாம் கேட்டதும் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று மறுத்து விட்டார் ..!
அதே பயிற்சியின் இன்னொரு அமர்வில் வந்த வேறொரு கருத்தாளர் மிக அழகாக, கலந்துரையாடல் பாணியில் சிறப்பாகத்தான் பேசினார்.. இருந்த போதிலும் அவர், எது குறித்துப் பேசினாலும் இறுதி வரியாக “என்னதான் இருந்தாலும் ஆண்டவனின் அனுக்கிரகம் என்னவோ, நமக்குன்னு என்ன எழுதி இருக்கிறதோ.. அதன்படிதான் நடக்கும்..!” என்ற வார்த்தைகளை தவறாமல் சொல்லிக் கொண்டே இருந்தார்..
எனக்குப் பொறுக்கவில்லை.. “தலைப்பு குறித்து மட்டும் பேசுங்கள்.. ஆண்டவன், தலைவிதி என்பதெல்லாம் விவாதத்துக்கு உரியவை.. வாய்ப்பும் வசதியும் கிடைத்தால் யாராலும் முன்னேற முடியும். விவாதிக்க வேண்டும் என்றால் விவாதிக்கலாம்..ஆனால் நீங்கள் ஒரு தலைப்பில் பேச வந்துள்ளீர்கள்.. தலைப்பும் அற்புதம். உங்கள் தயாரிப்பும் அற்புதம்.. எனவே அது குறித்து மட்டும் பேசுங்களேன்..!” என்றேன்..
பயிற்சி ஒருங்கிணைப்பாளர் வேகமாக எழுந்து, “சார், நமக்கு பயிற்சி கொடுக்க திருச்சியில் இருந்து வந்திருக்காங்க.. தொந்தரவு செய்யாமல், அமைதியாக, அவர்கள் சொல்வதை மட்டும் கேளுங்கள்..!” என்றார்..
நான் கேட்டேன்..”சரிங்க சார், கருத்தாளர் போனபிறகு என்னுடைய சந்தேகங்களை எல்லாம் உங்களிடம் கேட்கிறேன்.. நீங்கள் பதில் சொல்ல முடியுமா.?”
பாவம், அவர் இதை நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார். பேசாமல் உட்கார்ந்து கொண்டார்.. நான் கேட்ட கேள்விகளில் ஓரளவு நியாயம் இருப்பதாகத்தான் எனக்குப் படுகின்றது.. உங்களுக்கு?!
-(9047140584 – [email protected])

Spread the love