September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அஞ்சலி : லதா மங்கேஷ்கர் நம் இசைவில்லாமல் பறந்துசென்ற இசையரசி …

சோழ. நாகராஜன்
இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் காலமாகிவிட்டார்.
செய்தியை அறிந்ததும் நடிகர் திலகம் சிவாஜியின் மகன் ராம்குமார் இப்படிச் சொன்னார் : லதா தன் அண்ணனிடம் போய்விட்டார்… ஆமாம், லதாவின் அண்ணனென்று அவர் குறிப்பிட்டது நடிகர் திலகத்தைத்தான்.
என்ன இது? நடிகர்திலகம் சிவாஜி லதா மங்கேஷ்கருக்கு அண்ணனா? ஆமாம், அதற்குப் பின்னே ஒரு மிகப் பெரிய காவியக் கதை இருக்கிறது. அது நடந்தது 1960-களில். லதாவின் தங்கை ஆஷா போன்ஸ்லே சென்னையில் இருந்த சமயம் சிவாஜி நடித்த ‘பாவமன்னிப்பு’ படத்தைப் பார்த்தார். அவர் மும்பை திரும்பியவுடன் தனது குடும்பத்தாரையும் அந்தப் படத்தைப் பார்க்க வற்புறுத்தினார். அதில் நடித்த சிவாஜி கணேசனை நீங்கள் எல்லோரும் பார்க்க வேண்டும் என்றார் ஆஷா. அதற்குக் காரணமிருந்தது.
மும்பை அரோரா தியேட்டரில் பாவமன்னிப்பு ஓடிக்கொண்டிருந்தது. உடனே லதாவின் குடும்பமே அந்தப் படத்தைப் பார்க்க ஓடியது. படம் பார்த்தவர்களுக்கு மொழி தெரியவில்லை. அவர்கள் பார்க்கும் முதல் தமிழ்ப்படம் அதுதான். இடைவேளையில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபோது எல்லோரின் கண்களிலும் கண்ணீர் பெருகியிருந்தது. படம் முழுவதையும் பார்த்தார்கள். சிவாஜி அப்படியே மறைந்த தங்களின் தந்தை தீனாநாத் மங்கேஷ்கர் போலவே இருப்பதாக உணர்ந்தார்கள். படம் முடிந்ததும் ஒரு முடிவெடுத்தார்கள். அதன்படி சிவாஜியுடன் தொடர்பு கொண்டார் லதா. சென்னைக்குப் பறந்தது லதாவின் குடும்பம். நேராக நடிகர் திலகம் வீட்டிற்குப் போனார்கள். சிவாஜியைக் கட்டித் தழுவினார்கள். அவர் கையில் சகோதர உணர்வை வெளிப்படுத்தும் ராக்கியைக் கட்டினார்கள். அவர்கள் அடைந்த வியப்பு கலந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சிவாஜியிடம் சொன்னார்கள்.. இன்று முதல் நீங்கள் எங்களுக்கு அண்ணன். மறுபடியும் கண்ணீர் சொரிந்தபடி நின்றார்கள். அந்த பந்தம் கடைசிவரை தொடர்ந்தது. லதா சிவாஜியைத் தமிழில் அண்ணா என்றே அழைப்பாராம். அவரது துணைவியார் கமலாவை அண்ணி என்பாராம்.
லதா எப்போது பாடல் பதிவுக்காக சென்னை வந்தாலும் அவர் தங்குகிற இடம் சிவாஜியின் இல்லம்தான் என்றானது. சென்னையிலிருக்கும் நாளெல்லாம் லதா மங்கேஷ்கருக்கு சிவாஜியின் துணைவியார் கமலாதான் தன் கையால் உணவு தயாரித்துப் போடுவார். வேறு எங்கு சாப்பிட்டாலும் லதாவுக்கு ஒத்துக்கொள்ளாது.
மும்பையில் லதாவின் அன்புக்கு மட்டுமல்ல. அவரது தாயாரின் பேரன்புக்கும் சிவாஜி பாத்திரமானார். அப்போது அடிக்கடி மும்பையில் சிவாஜியின் நாடகங்கள் நடக்கும். நாடகத்தில் சிவாஜி உரத்த குரலில் வசனம் பேசி, உணர்ச்சிவசப்பட்டு நடிப்பதைப் பார்த்த லதாவின் தாயார் பதறிப்போவார். இப்படி மெனக்கெட்டு நடித்தால் குரலும் உடம்பும் என்ன ஆகும்? விளைவு… லதாவின் அம்மாவிடமிருந்து தொண்டைக்கு இதமான சுவைமிகுந்த சூப் வகைகள் அந்த நாடக அரங்கிற்குப் போகும். அதை எடுத்துப்போய் சிவாஜிக்குக் கொடுத்துவிட்டு நாடகத்தை முழுவதும் பார்த்துவிட்டுத்தான் திரும்புவார்கள் மங்கேஷ்கர் சகோதரிகள்.
முதன்முறையாக சிவாஜி அமெரிக்கா போகிறார். போகிற வழியில் மும்பையில் லதா வீட்டிற்குப் போகிறார். லதாவின் தாயார் அவரைப் பூஜை அறைக்கு அழைத்துப்போய் அவருக்காக ஆரத்தி எடுத்து, வழிபாடு நடத்தி, பிரசாதம் தந்து, ஆசி வழங்கி அனுப்பி வைக்கிறார். அத்தோடு ஒரு தங்கச் சங்கிலியை சிவாஜிக்குப் பரிசளிக்கிறார். அந்தச் சங்கிலியை அணிந்துகொண்டு அமெரிக்கா போகிறார் சிவாஜி. திரும்பி வந்ததும் நேராக லதாவின் வீட்டிற்குத்தான் போனார் சிவாஜி. பண்டிகை நாட்களில் லதாவிடமிருந்து சிவாஜி குடும்பத்தில் இருக்கும் எல்லோருக்கும் புத்தாடைகள் தவறாமல் வரும்.
இத்தனைக்கும் லதாவுக்குத் தமிழ் தெரியாது. இந்தியிலும் மராட்டியிலும்தான் பேசுவார். சிவாஜி தனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் சமாளிப்பார். கமலா அம்மையாருக்குத் தமிழ் மட்டுமே தெரியும். லதா இந்தியிலும் கமலா தமிழிலும் மணிக்கணக்காகப் பேசுவார்களாம். பாசமிகு அன்புக்கு மொழிகள் எப்படியொரு தடையாக முடியும் என்பதற்கு நடிகர்திலகம் சிவாஜி – லதா மங்கேஷ்கர் பந்தமே சாட்சி.
இந்திப் பாடல்களைக் கேட்டுக் கிறுகிறுத்துக்கொண்டிருந்த பள்ளி – கல்லூரி நாட்கள் அவை. இன்னார் பாடுகிறார்கள், பாடலின் பொருள் இன்னதாக இருக்கிறது என்பதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் இசையின் நயத்தில், அதன் புதுமையில் லயித்துக் கிடந்திருக்கிறோம். அது முந்தைய தலைமுறைகளின் அனுபவம். தமிழ் உள்ளிட்ட தென்னிந்தியத் திரையிசைக்குக் கர்நாடக இசை அடிப்படையென்றால் இந்தி உள்ளிட்ட வடபுலத்துத் திரையிசைக்கு இந்துஸ்தானி இசையே உயிர்நாடி. அப்போதே தொழில் நுட்பத்திலும் முன்னேறியிருந்தது இந்தித் திரைப்பட உலகம். அதற்கிருந்த வணிகரீதியிலான சர்வதேசச் சந்தையும் அதற்கொரு காரணம்.
வானொலியில் இந்திப்பாடல்களை ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே பாடகர்களின் பெயர் இப்படியெல்லாம் அறிவிக்கப்படும். கிஷோர்குமார் – லதா மங்கேஷ்கர், முகமது ரஃபி – லதா மங்கேஷ்கர், மன்னாடே – லதா மங்கேஷ்கர் என்றபடியே போகும். எத்தனை ஆண் பாடகர்களுடனும் இணையாக லதாவின் பெயரே பெரும்பாலும் உச்சரிக்கப்படும்.
அப்படியொரு கானக்குயிலென இந்தியத் திரைவானில் சிகரத்தில் கோலோச்சியவர் லதா மங்கேஷ்கர். அவரது குரலில் ஏதோவொரு அதிசயமிருக்கிறது என்பார் இளையராஜா. இந்தி, மராட்டி, வங்கமொழி உள்ளிட்ட 36 மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடிய அவர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார். 1987-ல் வெளியான ‘ஆனந்தம்’ என்ற தமிழ்ப்படத்தில் லதாவைப் பாடவைத்த பெருமை சிவாஜியின் புதல்வர் ராம்குமாரைத்தான் சாரும். அதில் இளையராஜா இசையில் லதா பாடிய ‘ஆராரோ ஆராரோ’ என்று தொடங்கும் பாடல் ஒரு கந்தர்வ கானம். சத்யாவில் (1988) அவர் பாடிய ‘வளையோசை கலகலகலவென’ பாடல் இன்னொரு சுகானுபவம். கொஞ்சமாகப் பாடினாலும் தமிழில் அவர் சேர்த்துச் சென்றது இசையமுதம்.
லதா மங்கேஷ்கர் இந்தியாவின் மிக உயரிய விருதுகளனைத்தையும் பெற்றார். அதைவிட இந்திய ரசிகர்களின் மனங்களில் எல்லாம் தனித்ததொரு ஆளுமையெனத் திகழ்ந்தார். கொரோனா தாக்கி, 20 நாட்கள் நோயுடன் போராடித் தோற்று, கடந்த பிப்ரவரி 6 ஆம் நாள் தனது 92 வது வயதில் மரணத்தைத் தழுவினார் அந்த இசையரசி, நம் எவரின் இசைவுமில்லாமலேயே!
(98425 93924 [email protected])

Spread the love