September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அஞ்சலி: புலமைப்பித்தன் யாரும் வாழப் பாடிய காற்று…

சோழ. நாகராஜன்


தமிழ்த் திரைப்படப்பாடல்களுக்கு உயிரோட்டமானதொரு அழகைத் தந்தவர்களுள் மிகமுக்கியமான கவிஞர் புலமைப்பித்தன். சொற்கட்டுக்குள் தமிழின் ஆகப்பெரிய வித்தைகளைக் காட்டியவர் அவர். பாட்டுக் கட்டுவது என்பதை ஒரு தனிக்கலை போல லயித்து லயித்துச் செய்தவர் அவரை மாதிரி இன்னொருவர் இருப்பாரா எனத் தெரியவில்லை.
‘குடியிருந்த கோயில்’ என்பது எம்ஜிஆர் படம். அறிவோம். அதிலொரு பாடலை எழுதியதன் வாயிலாகத் தமிழுலகத்தின் கவனம் பெற்றவரானார் இந்தப் புலமையார். அதுவொரு தத்துவப் பாடல்தான். சொல் விளையாட்டினை லாவகமாகச் செய்வதன் மூலமே இந்தப் பாடலில் தத்துவ முத்துக்களைக் கோர்த்தார் அவர். பாடல் எம்.ஜி.ஆருக்காக எழுதப்படுவது. அதில் அழுகுணித் தத்துவம் வரலாகாது. அப்படியொரு சவாலைத் தனது முதல் பாடலிலேயே எதிர்கொண்டு பெருவெற்றி பெற்றவர் புலமைப்பித்தன்.
“நான் யார் நான் யார் நீ யார் / நாலும் தெரிந்தவர் யார் யார்
தாய் யார் மகன் யார் தெரியார் / தந்தையென்பார் அவர் யார் யார்…”

 • இதுதான் புலமைப்பித்தன் தந்த புதுமையான பல்லவி.
  அந்தப் பாடலின் சரணங்களில் அவர் மேலும் ஆழ்ந்து போகிறார்.
  “உறவார் பகை யார் / உண்மையை உணரார் / உனக்கே நீ யாரோ…”
 • என்கிற இந்த இடம் மனித சமூகத்தின் முரண்களைத் தத்துவார்த்தமாகத் தெளிவிக்க முற்படுகிறது. அப்புறமும் அவர்,
  “உள்ளார் புசிப்பார் / இல்லார் பசிப்பார் / உதவிக்கு யார் யாரோ
  நல்லார் தீயார் / உயர்ந்தார் தாழ்ந்தார் / நமக்குள் யார் யாரோ…”
  “அடிப்பார் வலியார் / துடிப்பார் மெலியார் / தடுப்பார் யார் யரோ…
  எடுப்பார் சிரிப்பார் / இழப்பார் அழுவார் / எதிர்ப்பார் யார் யாரோ…” – என்றெல்லாமே எம்.ஜி.ஆரை மனதில் வைத்து எழுதப்பட்டதாக இருப்பினும் ஏழை உழைப்பாளர்கள் பக்கம் நின்று அவர்களுக்கான வாழ்வியல் தத்துவத்தைச் சொல்லும் முற்போக்குத் தன்மையையே இந்தப் பாடல் பெற்றுவிடுகிறது. புலமைப்பித்தன் எனும் அற்புதமான தமிழ்க் கவியின் சொல்லோவியத்தில் இதுவொரு நேர்மறைத் தத்துவப்பாடலாக இன்றுவரையில் உலா வந்து கொண்டிருக்கிறது.
  தமிழ் சினிமாவில் அவர் அளவாகத்தான் எழுதியிருக்கிறார். மொத்தம் ஆயிரம் பாடல்கள்கூட இல்லை. ஆனால், அவற்றுள்தான் அடிமைப்பெண் படத்தின் “ஆயிரம் நிலவே வா…” – பாடலும் அடங்கும். புலமைப்பித்தன் ஒரு பாடல் எழுதினால் அது ஆயிரம் பாடலுக்குச் சமம் என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா? அவர்தான் புலமைப்பித்தன்.
  “மெல்லிய பூங்கொடி வளைத்து – மலர் / மேனியைக் கொஞ்சம் அணைத்து
  இதழில் தேனைக் குடித்து – ஒரு / இன்ப நாடகம் நடித்து” – என்று ‘பாடும்போது தென்றல் காற்றாக’ அவர் சிருங்கார ரசத்தைப் பிழிந்தாலும் முடிவில்,
  “எல்லைகளில்லா உலகம் – என் / இதயமும் அதுபோல் நிலவும்
  புதுமை உலகம் மலரும் – நல்ல / பொழுதாய் யாருக்கும் புலரும்
  யாரும் வாழ பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே / இன்ப நாளும் இன்றுதானே – என்ற சரண முடிப்பில் அவரிடமிருந்து காதலிலும் சமூக உணர்வு பட்டுக்கோட்டையின் சாயலில் வெளிப்படுவதைக் கவனித்து ரசிக்கலாம்.
  இப்படித்தான்,
  “வலிமையுள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி – பிறர்
  வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம் சட்டம் ஆகணும் தம்பி” – என்கிறார் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ – என்ற பல்லவியை எடுத்துப் பா தொடுத்த அவர்.
  “இங்கே சமத்துவம் வந்தாகணும்
  அதிலே மகத்துவம் உண்டாகணும் – நாம
  பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் – நாட்டுக்குப்
  படிப்பினை தந்தாகணும்…” – எனும் முடிப்பில் பாடகர்களின் – கலைஞர்களின் சமூகக் கடப்பாடினை உணர்த்துவது வியக்க வைக்கிறது.
  எம்.ஜி.ஆரின் பாடலாசிரியர் என்று பெயரெடுத்திருந்தாலும் புலமைப்பித்தன் ‘யாரும் வாழப் பாடிய காற்றாக’ மற்ற பலருக்கும் எழுதியே வந்திருக்கிறார். பன்முக ரசனைகளின் ஊற்றாக அவரது பாடல்கள் திகழ்கின்றன. சிவாஜி கணேசனுக்காக ‘சிவகாமியின் செல்வன்’ படத்தில் அவர் எழுதிய இனியவளே பாடல் அவரது புலமை ஆற்றலுக்கு மேலுமொரு சாட்சியாக இருக்கிறது.
  “இனியவளே… இனி அவள்தான்”-என்றும், “இனியவனே… இனி அவன்தான்”-என்றும் தமிழைக் கைக்கொண்டு சந்த விளையாட்டு ஆடினார் இந்தப் பாடலில். ‘இன்பமெல்லாம் ஏந்திவரும் இனிமை கொண்டவளாக’ அந்த அவரின் இனியவள் விளங்கினதும் இதனால்தானே?
  மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சித்திரமான ‘பாரதி’ படத்தில் அந்த பாரதிதானே எல்லா பாடல்களுக்கும் பாடலாசிரியராக இருக்க முடியும்? அந்தப் படத்திலும் புலமைப்பித்தன் ஒரு பாடலும், மு.மேத்தா ஒரு பாடலும் எழுத நேர்ந்தது. புலமையார் தனது தத்துவ தரிசனத்தை மீண்டும் இந்தப் பாடலில் பகிர அதனையொரு வாய்ப்பாகக் கருதி எழுதினார். அதனால் ஆன்மீக சிந்தனையால் ‘அடியும் முடியும்’ அறிய முடியானை ‘எதிலும் இங்கு இருப்பான் அவன் யாரோ…’ – என்ற கேள்வியோடு அணுகி பதிலிறுத்தார். எளிய அடியர் ஓதும் வேத நாதமாகி அது மக்களைச் சென்றடைந்தது. “தொடக்கமும் அதன் அடக்கமும் அவன் வேலை… நடப்பதும் அதைத் தடுப்பதும் அவன் லீலை…” – என ஆன்மீகச் சரடைத் தன் அருமைத் தமிழால் சுற்றிச் சுழற்ற அவர் தவறவில்லை.
  இப்படி எண்ணிறைந்த பாடல்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் செய்நேர்த்தியோடு தமிழின்பம் கூட்டின. ரசிகனின் ரசனை மட்டத்தைச் சற்றே தரமுயர்த்தும் காரியத்தையும் அவ்வப்போது செய்தன புலமைப்பித்தனின் பாடல்கள்.
  அப்படியானதொரு பாட்டுக்காரன் அண்மையில் தனது 85-வது வயதில் மறைந்தார் என்கிற செய்தி தமிழ் சினிமா இங்கு கட்டமைத்து ஏற்படுத்தியிருக்கிற கலைரசனையின்மீது இடியாக இறங்கியதை எவரும் உணரவே செய்தனர். ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன் கோவை மாவட்டத்தின் இருகூரில் 1935-ல் பிறந்து, துவக்கத்தில் சென்னையில் ஆசிரியப் பணியிலிருந்து, பின்னர் தேர்ந்த தமிழ்ப் புலமையின் துணையோடு திரைப்பாடலாசிரியராக தமிழுலகத்தின் கவனம் பெற்று, தமிழகத்தின் மேலவைத் தலைவராக, அரசவைக் கவிஞராக, எண்ணற்ற பாடல்களுக்காக பலமுறை சிறந்த பாடலாசிரியராகத் தேர்வானவராக.. ஏறத்தாழ அரை நூற்றாண்டுகாலம் மதிப்புடன் வாழ்ந்தவர். அவரின் பாடல்கள் பலவும் தமிழுலகத்தின் சிந்தைப்பெருவெளியில் உயிர்ப்போடு வாழும் வல்லமை பெற்றவை என்பதை மறுக்கவும் கூடுமோ?

(98425 93924 – [email protected])

Spread the love