September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அஞ்சலி நெடுமுடி வேணு அர்ப்பணித்துக்கொண்ட கலையின் அதிமகன்…

சோழ. நாகராஜன்


கேரளத்தின் மரபார்ந்த பண்பாட்டு விழுமியங்களோடும் பாரம்பரிய கலை வடிவங்களோடும் மலையாள இலக்கியத்தோடும் உயிர்ப்பான தொடர்போடு இருந்து அவற்றின் செழுமையில் பங்களிப்புச் செய்த ஒரு பெரும் திரைக்கலை ஆளுமை அவர். அவரின் மறைவுச் செய்தி கலை-இலக்கிய ஆர்வலர்கள் முதல் எளிய ரசிகர்கள் வரை அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. நெடுமுடி வேணு என்ற அந்தக் கலைஞன் மலையாளத்தில் மட்டுமல்ல… இந்தியத் திரைவானில் ஜொலிக்கும் உன்னத நடிப்புக் கலைஞர்களிலும் முக்கியமானவர்.


வெறும் நடிகராக மட்டும் அறியப்பட்டவரில்லை நெடுமுடி வேணு. அவர் ஒரு பன்முகக் கலைஞர். இலக்கியத்தில் நாட்டமுள்ள அவர் ஒரு பத்திரிகையாளர் ஆகத்தான் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் மேடை நாடகங்களில் தனது கவனத்தைச் செலுத்தினார். அதுவரையில் தானொரு திரைக்கலைஞனாக உயர்வோம் என்று அவர் எண்ணியதில்லை. அது நடந்தது 1978-ல்.
அவரது இயற்பெயர் கேசவன் வேணுகோபால். சொந்த ஊர் ஆலப்புழை மாவட்டத்தைச் சேர்ந்த நெடுமுடி. சினிமாவில் தனது பெயரை ஊரின் பெயரோடு இணைத்து நெடுமுடி வேணு என்று வைத்துக்கொண்டார். அவரது பகுதிக்குக் குட்டநாடு என்று பெயர். அந்தக் குட்டநாடு கலைகளின் பூமி. கர்நாடக இசை, கதக்களி போன்ற செவ்விசையும் கலையும் செழித்தோங்கிய பகுதி அது. படையணி, சோபான சங்கீதம் முதலான நாட்டார் கலை வடிவங்களின் சொர்க்கமாகவும் குட்டநாடு திகழ்ந்தது. தகழி சிவசங்கரன் பிள்ளை, ஐயப்பப் பணிக்கர், நாராயண பணிக்கர் முதலான இலக்கிய-கலை ஆளுமைகளின் படைப்புகளில் குட்டநாடு எப்போதும் கௌரவம் பெற்றிருந்தது.


மண்ணின் தன்மையோடான ஒரு கலைமனதுடன் வளர்ந்தவர் வேணு. அவரது கலையின் பன்முக ஆற்றலுக்கு அவரது பிறப்பிடச் சூழலே உரமாகியது என்றும் சொல்லலாம். நெடுமுடி வேணுவுக்கு இணையாக வேறொரு கலைஞன் இத்தனை பன்முகப்பட்ட கதாபாத்திரங்களைக் கையாளவில்லை என்பதையே அவரது கலையின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். தனது கல்லூரித் தோழரும் பின்னாளில் பிரபல மலையாள இயக்குநருமான ஃபாசில், கல்லூரியில் படிக்கிறபோது போட்டிக்காக எழுதிய நாடகமொன்றில் வேணு நடித்தார். அதுதான் அவரது முதல் கலை அனுபவம். அந்த நாடகப் போட்டிக்கு நடுவராக வந்தவர் பிரபல நாடகவியலாளர் காவாலம் நாராயண பணிக்கர்.


நெடுமுடி வேணுவினுள் ஒரு கலைஞனைக் கண்டடைந்த பணிக்கர் தனது நாடகங்களில் வேணுவை நடிக்க வைத்தார். அதனால் திருவனந்தபுரத்திற்கு இடம்பெயர்ந்த வேணு அங்கே சிறிதுகாலம் பத்திரிகைத்துறையில் பணியாற்றவும் வாய்ப்பேற்பட்டது. பி.கேசவப்பிள்ளையின் நாவலைத் தழுவி 1972-ல் தோப்பில் பாசி இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு சுந்தரியுடெ கத’ படத்தில் வேணுவுக்கு மிகவும் சின்னஞ்சிறிய வேடத்தில் தோன்றும் வாய்ப்பு கிட்டியது. மாணவர்கள் கூட்டமாக நடனமாடுகிற காட்சியில் அந்த மாணவர்களுள் ஒருவராக அவர் தோன்றினார். அதுதான் நெடுமுடி வேணுவுக்கு முதல் படமாக அமைந்தது.


பின்னர் 1978-ல்தான் அவரை ஒரு முழு திரைக்கலைஞனாக வெளிக் கொணருவதான படம் அவருக்கு அமைந்தது. அது அரவிந்தன் இயக்கத்தில் வெளிவந்த ‘தம்பு’ என்னும் திரைப்படம். அதனைத் தொடர்ந்து அவரது சினிமா பங்களிப்பானது இடைவிடாத ஓட்டமானது. மலையாள சினிமாவில் அவரது தடம் என்பது அளப்பரியதானதாகும். பல்வேறு படங்களில் பலவிதங்களிலும் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ள நெடுமுடியின் முக்கியமான படங்களை இப்படி வரிசைப்படுத்தலாம்.


1981-ல் பத்மராஜனின் இயக்கத்தில் வெளிவந்த கள்ளன் பவித்ரன், மோகன் இயக்கத்தில் விட பறயும் முன்பே, ரச்சனா, பரதனின் இயக்கத்தில் சாமரம், இயக்குநர் ஜி. அரவிந்தனின் ஓரிடத்து, சிபி மலையில்லின் ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, ஒரு மின்னாமினுங்கின்டே நுறுங்குவெட்டம் முதலான பல படங்கள் அவரது தனித்துவமான நடிப்புத் திறனுக்கு எடுத்துக்காட்டானவை. மலையாளம் தவிர தமிழ் உள்ளிட்ட பிறமொழிப் படங்களிலும் வேணு நடித்துள்ளார். தமிழில் இந்தியன், அந்நியன், நவரசா, சிலம்பாட்டம், பொய் சொல்லப்போறோம், சர்வம் தாள மயம், மோகமுள் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார். இஷ்டி என்பது அவர் நடிப்பில் ஜி.பிரபா இயக்கத்தில் வெளிவந்த சமஸ்கிருத மொழிப்படமாகும். அம்மொழியில் வெளிந்த ஒரே சமூகக் கதையாடலைக்கொண்ட படமும் அதுதான்.


அதுபோலவே நெடுமுடி வேணு நடித்த ஒரே ஆங்கிலமொழி இந்தியப்படம் சௌராஹென். ஜீனத் அமன், ரூபா கங்குலி, சோஹா அலி, கீரா சாப்ளின் ஆகியோருடன் மிஸ்டர் நாயர் எனும் கதாபாத்திரத்தில் வேணு நடித்தார். நிர்மல் வர்மாவின் கதையை ராஜ்ஸ்ரீ ஓஜா இயக்கினார். அந்தப் படம் 2012-ல் வெளிவந்தது. பரதன் இயக்கத்தில் காற்றத்தெ கிளிக்கூடு வேணுவின் திரைக்கதையில் வெளிவந்த படம். அவர் 7 படங்களுக்கு திரைக்கதை எழுதியவராகவும் பூரம் எனும் திரைப்படத்தை இயக்கி இயக்குநராகவும் அவர் சினிமாவில் ஒரு பன்முகக் கலைஞராகத் திகழ்ந்தார். தொடர்ந்து நாடகத்துடனான உயிர்ப்புமிக்க உறவையும் இறுதிவரையில் கொண்டிருந்தார்.


ஆறுமுறை கேரள அரசின் விருதுகளையும் இரண்டுமுறை மத்திய அரசின் விருதுகளையும் பலமுறை ஃபிலிம்ஃபேர் விருதுகளையும் பெற்றிருந்தாலும் சினிமாவின் எளிய ரசிகர்கள் அவரைக் கொண்டாடிய அளவுக்கு அவருக்கான மிகச் சரியான அங்கீகாரத்தை மத்திய அரசு வழங்கவே இல்லை. ஆனால், இதையெல்லாம் தாண்டிய பரிபக்குவக் கலைஞராகவே அவர் இறுதிவரையில் தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்தார். தனது 73-வது வயதில் அவர் உயிர்நீத்து இயற்கையோடு இணையும் வரையில் தன்னையொரு அர்ப்பணித்துக்கொண்ட கலையின் அதிமகனாகவே பராமரித்துக்கொண்டார், அது மிகச் சிரமமானதொரு வாழ்க்கைமுறையாக இருந்தபோதிலும்.
அவர்தான் நெடுமுடி வேணு!


(98425 93924 – [email protected])

Spread the love