August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அஞ்சலி: கிருஷ்ணகுமார் குன்னத் வியக்க வைத்துச் சென்ற குரலிசைக் கலைஞன்…

சோழ. நாகராஜன்
மின்சாரக் கனவு என்றொரு நனவிலிப் படம். 1997-ல் வெளிவந்த தமிழ்ப் படம். அதில் ‘ஸ்டிராபரி கண்ணே…’ என்று தொடங்கும் துள்ளல் பாடல் உண்டு. அதை உயிரின் ஓசை கொண்டு பாடியிருப்பார் கிருஷ்ணகுமார் குன்னத். அவருடன் பாடகி பெபி மணியும் இணைந்து அந்தப் பாடலுக்கு உயிரூட்டியிருப்பார். கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் அந்தப் பாடல் கேட்போருக்கு முழுக்க முழுக்க புதியதொரு இசையனுபவத்தைத் தரும். இப்படித்தான் கிருஷ்ணகுமார் குன்னத்தின் மயக்கும் குரலில் காதல் ஒரு தனிக்கட்சி.. காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்.. அப்படிப் போடு போடு.. ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்.. கல்யாணம்தான் கட்டிக்கிட்டு.. ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி.. உயிரின் உயிரே.. என்று அவரின் தமிழ் சினிமா பாடல்களின் பட்டியல் நீளுகிறது.
இத்தனைக்கும் அவர் தமிழில் கொஞ்சம்தான் பாடியிருக்கிறார். அவர் பாடாத மொழி இந்தியாவில் இருக்கிறதா என்று தெரியவில்லை. கே.கே. என்று செல்லமாக அழைக்கப்பட்ட கிருஷ்ணகுமார் குன்னத் 1968-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31 அன்று டெல்லியில் வசித்துவந்த மலையாளப் பெற்றோருக்குப் பிறந்தார். டெல்லியில் பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் முடித்த கிருஷ்ணகுமாருக்கு முதன்முதலில் 1999-ல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணியை உற்சாகப்படுத்தும் ஜோஷ் ஆஃப் இந்தியா பாடலில் பங்கேற்க வாய்ப்பு கிட்டியது. பிறகு விளம்பரப் படங்களில் வரும் துண்டு துண்டுப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். கொஞ்சநஞ்சமல்ல… 3500 க்கும் அதிகமான இப்படியான விளம்பரப் பாடல்களைப் பாடி அசத்தினார். அவை பல மொழிகளிலும் அமைந்தன. அந்த அனுபவம்தான் திரைப்படப் பின்னணிப் பாடகராக அவர் உயர வழி செய்தது.
1999-ல் தனது முதல் ஆல்பத்தை வெளியிட்டார் கிருஷ்ணகுமார். அதன் பெயர் பால். அதில் இடம்பெற்ற பாடல்கள் பால் மற்றும் யாரோன் மிகவும் பிரபலமாயின. பள்ளிக்கூடங்களில் கொண்டாடப்படும் நிறைவு நாளான பிரியாவிடை நாளில் இந்தப் பாடல்களே ஒலிக்கத் தொடங்கின. அதே ஆண்டு வெளிவந்த ஹம் தில் தே சுக்கே சனம் படத்தில் அவர் பாடிய தடப் தடப் கே இஸ் தில் சே எனும் பாடல் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. 2002-ல் தமிழின் அப்படிப் போடு போடு, இந்தியின் தோலா ரே தோலா பாடல்கள் என்று மெல்ல மெல்ல அவரது புகழ் ஏறுமுகம் காணத் தொடங்கியது.
தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, குஜராத்தி என்று குன்னத்தின் குரலில் நுழைந்து தவழ்ந்த மொழிகளின் எண்ணிக்கை அதிகமானது. இத்தனைக்கும் அவர் இசைத்துறையைத் தேர்வதற்கு முன்னர் கிரோரி மல் கல்லூரியில் வணிகவியல் படிப்பை முடித்த கையோடு மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவாக ஆறு மாதங்கள் பணியிலிருந்தார். அதன் பின்னரே இசைதான் தனது உயிரெனக் கண்டுகொண்டார். டெல்லி விடுதிகளில் பாடத் தொடங்கியவர் 1994-ல் மும்பை வந்துவிட்டார்.
இத்தனைக்கும் கே.கே. முறைப்படி இசையைப் பயின்றவர் அல்ல. இயற்கையிலேயே அவருக்கிருந்த இசை ஆர்வமும், அதனடிப்படையில் அவர் வளர்த்துக்கொண்ட பாடுந்திறனும் அவரிடத்தில் ஒரு பாடல் கலைஞனை அடையாளம் காட்டியது. மகிழ்ச்சியை, சோகத்தை, கோபத்தை, காதல் உணர்வை என்று அவர் அத்தனையையும் ஒரு மந்திரவாதியைப்போல தன் குரலில் வெளிப்படுத்தினார். பாடகர்களின் குரலைத்தான் ரசிகர்கள் கேட்கவேண்டும். அவர் பாடுவதைப் பார்த்து ரசிப்பதில் ஏதுமில்லை என்பார் கிருஷ்ணகுமார். அதனால் அவருக்கு மைக் தரும் இயல்பான மகிழ்ச்சியைப்போல கேமராவால் தர இயலவில்லை. தானொரு குறிப்பிட்ட நடிகரின் பின்னணிக் குரலாக – குறிப்பிட்ட நடிகரின் பாடகராக அடையாளப்படுத்தப்படுவதை, முத்திரை குத்தப்படுவதை அவர் எப்போதும் விரும்பவில்லை. பலதரப்பட்ட நடிகர்களுக்குப் பாடுவதையே அவர் மனம் நாடியது.
ஏ.ஆர்.ரஹ்மான்தான் கிருஷ்ணகுமார் குன்னத் என்னும் தனித்துவமான குரலுக்குச் சொந்தக்காரரை முதன்முதலில் சினிமாவுக்காகப் பாடவைத்த முதல் இசையமைப்பாளர். அவர் பாடிய முதல் பாடல் கல்லூரி சாலை எனும் தமிழ்ப் படத்தில் இடம் பெற்றது. இந்தியிலும் மற்ற மொழிகளிலும் அவர் குரலின்வழி முத்திரை பதித்த பாடல்கள் கணக்கின்றிக் கிடக்கின்றன. தொலைக்காட்சித் தொடர்களிலும் கே.கே. பாடியிருக்கிறார். இந்தியா மட்டுமல்லாமல் பாகிஸ்தான் தொலைக்காட்சிக்காகவும் பாடியிருக்கிறார்.
புகழினை முகர்ந்து பார்க்கிற பொழுதொன்றிலேயே கிருஷ்ணகுமார் தனது பால்ய காலத்துத் தோழியான ஜோதியை 1991-ல் திருமணம் செய்துகொண்டார். அவரது மகன் நகுல் கிருஷ்ண குன்னத் அவரது ஆல்பமான ஹம்சஃபரில் இடம் பெற்ற மஸ்தி எனும் பாடலைப் பாடினார். கே.கே.வுக்கு ஒரு மகளும் உண்டு. கிருஷ்ணகுமார் குன்னத் ஆறுமுறை ஃபிலிம்ஃபேர் விருதுக்குத் தேர்வாகி ஒருமுறைகூட வெற்றிபெறவில்லை என்பதும் ஒரு முரண் வியப்புதான். அவர் பச்னா ஏ ஹசீனோ படத்தில் இடம்பெற்ற குதா ஜானே என்ற பாடலுக்கு சிறந்த ஆண் பின்னணிப் பாடகர் என்ற ஸ்கிரீன் விருதை வென்றிருக்கிறார். 2000-ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் பாப் இசையின் தவிர்க்க இயலாத ஒரு அடையாளமாகவே அவர் முத்திரை பதித்தார்.
பின்னணிப் பாடகரான தனக்கு மேடைகளில் பார்வையாளர்களின் முன்னிலையில் நேரடியாகப் பாடுவதிலேயே அதிக விருப்பம் இருப்பதாகச் சொன்ன கே.கே. அண்மையில் தெற்கு கொல்கத்தாவில் குருதாஸ் கல்லூரியின் நஸ்ருல் மஞ்சா அரங்கில் நடைபெற்ற நேரடி இசை நிகழ்வில் பங்கேற்றபோது உடல்நலக் குறைவை உணர்ந்தார். நிகழ்ச்சி முடிந்து அவர் தங்கியிருந்த விடுதி அறைக்குத் திரும்பியபோதே மாரடைப்பு அவர் உயிருடன் அவரது உன்னத இசையையும் சேர்த்து முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது.
பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள், ஆல்பம்கள், அள்ளிக் குவித்த விருதுகள் என ஒரு இசைச் சாம்ராஜ்யத்தையே தன் குரல்வழி கட்டி ஆண்டுகொண்டிருந்தார் கிருஷ்ணகுமார் குன்னத். அவரது 25 ஆண்டுகால இசை வாழ்வில் புதிய முகம் (2009) எனும் மலையாளப் படத்தில் இடம்பெற்ற ரகசியமே என்று தொடங்கும் ஒரேயொரு பாடலை மட்டுமே தனது தாய்மொழியில் பாடியுள்ளார் எனும் செய்தி அவரைப்போலவே வியப்புக்குரியதுதான்.

Spread the love