September 25, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அங்கே பேசியதும் இங்கே நடப்பதும்..

மதுக்கூர் இராமலிங்கம்
ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று இரண்டு அமர்வுகளில் உரையாற்றியுள்ளார்.
‘திறந்த வெளி சமூகங்கள்’ என்ற தலைப்பிலான அமர்வில் முன்னணிப் பேச்சாளராக அழைக்கப்பட்ட நரேந்திர மோடி ‘இந்தியாவின் நாகரிக நெறிமுறைகளில் ஜனநாயகமும் சுதந்திரமும் ஒரு அங்கமாக உள்ளன’ என்று பிரகடனம் செய்துள்ளார். சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் மோடி குறித்த பிம்பத்தைக் கட்டமைக்க சமூக ஊடகங்கள் பெருமளவு பயன்படுத்தப்பட்டன. இன்னமும் கூட இதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவு செய்யப்படுகின்றன. அதேநேரத்தில் கொரோனா காலத்தில் மோடி அரசின் செயலின்மை குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால் இந்த ஊடகங்களைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. அந்த நிறுவனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இது பற்றி பொதுவெளியில் விவாதம் நடைபெற்று வருவது பற்றி நாம் அறிவோம்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில் மோடி வல்லவர். இந்தியாவின் நாகரிக நெறிமுறைகளில் சுதந்திரம், ஜனநாயகம் ஆகியவை உள்ளார்ந்த அம்சங்களாக இருக்கின்றன என்று அங்கே அவர் பெருமையடித்துக் கொண்டார். ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் இவர் அந்த விழுமியங்களை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறாரா என்பது முக்கியமான கேள்வி.
குறிப்பாக நாடாளுமன்ற ஜனநாயகம் பெருமளவு சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. பிரதமர் என்கிற முறையில் நாடாளுமன்ற ஜனநாயக விவாதங்களில் பங்கேற்பதற்குப் பதிலாக அவற்றை மோடி தவிர்த்தே வந்துள்ளார். ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது கூட அவரைப் பொறுத்தவரை வேண்டாத வேலையே. ஆனால் ஒவ்வொரு மாதமும் ‘மனதின் குரல்’ என்கிற ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரைவீச்சு நிகழ்த்துகிறார். அதில் பார்வையாளர்கள் அவரைக் கேள்வி கேட்க முடியாது. அவர் சொல்வதைக் கேட்கலாம் அல்லது ஆஃப் செய்துவிட்டு வேறு வேலையைக் கவனிக்கப் போகலாம்.
நாடாளுமன்றத்தில் முறையான விவாதங்களே இல்லாமல் வேளாண் திருத்தச் சட்டங்கள், தேசிய கல்விக் கொள்கை போன்ற பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. நாடாளுமன்றத்தின் விவாத நாட்களை வெட்டிச் சுருக்க ஆட்சியாளர்களுக்கு அருமையான வாய்ப்பை கொரோனா வழங்கியிருக்கிறது. இதெல்லாம் இங்கே உள்ள மக்களுக்கு நன்கு தெரிந்த உண்மை என்பதால் சர்வதேச அரங்கில் போய், மோடி ஜனநாயகம் பற்றியும் சுதந்திரம் பற்றியும் வாய்ச்சவடால் அடித்துவிட்டு வருகிறார். சீனாவுக்கு செக் வைக்க பிற ஏகாதிபத்திய நாடுகளுக்கு இந்தியாவின் உதவி தேவைப்படுவதால் மோடியின் உரைக்கு அவை மறுப்பு ஏதும் தெரிவிப்பதில்லை.
தேசிய பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் திருத்தப்பட்டு மனித உரிமைகள் இங்கே நசுக்கப்படுகின்றன. சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர். அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்கள், போராடுபவர்கள் எல்லாம் தேசவிரோதிகள் என முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். தாக்கப்படுகின்றனர். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீது பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் சென்ற ஆண்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களைப் பிணையில் விடுவித்த டில்லி உயர்நீதிமன்றம் போராடுவது தேசத்துரோகக் குற்றம் ஆகாது என்று தெளிவுபடுத்தியது. ஆனால் உச்சநீதிமன்றம் அதை ஏற்கவில்லை. பல்வேறு மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்படுகின்றனர்.. அவர்கள் பிணையில் வரக்கூட அனுமதி கிடைப்பதில்லை.
இந்திய ஜனநாயகத்தின் உள்ளார்ந்த அம்சங்களில் ஒன்று கூட்டாட்சி. ஆனால் மாநில உரிமைகள் சர்வசாதாரணமாக பறிக்கப்படுகின்றன. கல்வித்துறை, சுகாதாரத்துறை, வேளாண்துறை போன்ற பல துறைகள் ஒன்றிய அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டன. கொரோனா தடுப்பூசிகள் விஷயத்தில் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் மற்றும் நீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகே ஒன்றிய அரசு அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் என்று பிரதமர் வேறுவழியின்றி ஏற்றுக் கொண்டுள்ளார். அப்போதும் கூட தனியார் மருத்துவமனைகளுக்கு 25 சதவீதம் ஒதுக்கப்படும் என்று அவர்கள் மீது பாசம் காட்ட அவர் தவறவில்லை.
தடுப்பூசிக்கான காப்புரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் சர்வதேச அரங்கில் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் உரிமையை ஒன்றிய அரசு இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கியிருப்பது ஏன்? செங்கல்பட்டு, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் வலுவான கட்டமைப்புகளுடன் உள்ள பொதுத்துறை நிறுவனங்களுக்கு தடுப்பூசி தயாரிப்பு உரிமையை ஏன் மறுக்க வேண்டும்? தடுப்பூசி தயாரிக்க பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது என்று மோடி அரசைத் தடுத்தது யார்?
இவர்கள் ஆட்சியில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டது. அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்வது, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு ராமர் கோவில் கட்டுவது, குடியுரிமைச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு பாரபட்சம் காட்டுவது எல்லாமே பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ். வகுத்துக் கொடுத்த அஜெண்டாதான். அடுத்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தை சீர்குலைப்பது என்ற திட்டம் நிறைவேறிக் கொண்டிருக்கிறது.
புதுவையில் கொல்லைப்புற வழியாக ஆட்சி அமைக்க பாஜகவினரை நியமன எம்எல்ஏக்களாக நியமிப்பது, சுயேச்சைகளை குதிரை பேரம் மூலம் வளைத்துப்பிடிப்பது, சபாநாயகர் பதவியைக் கைப்பற்றுவது போன்றவை ஜனநாயகத்திற்கு வலுச்சேர்க்கும் நடவடிக்கைகளா என்பதை பிரதமர் மோடிதான் விளக்க வேண்டும். இம்மாதிரி கேள்விகள் வரும்போது அவர் மவுனமாகி விடுவார். மறுபுறத்தில் அரசியல் சாசனத்தின்படி உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம், மத்திய புலனாய்வு அமைப்புகள், நீதிமன்றங்கள் போன்றவற்றின் சுயேச்சைத் தன்மையை அழிப்பதும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
சொந்த நாட்டில் நடைமுறைகளை இப்படி வைத்துக்கொண்டு, சர்வதேச அரங்கில் பேசும்போது மட்டும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பிரதமர் விதந்தோதுவது யாரை ஏமாற்ற..?
கடைசிச் செய்தி : அண்மையில் ஒரு எதிர்பாராத திருப்பமாக, பிரதமரும் உள்துறை அமைச்சரும் காஷ்மீர் தலைவர்களைச் சந்தித்து உரையாடினர். விரைவில் அங்கு சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் எனத் தெரிகிறது. மற்ற விவரங்கள் பின்னர் தெரியவரும்.
(94422 02726 – [email protected])

Spread the love