August 9, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அக்னி பாதையும் புல்டோசர் பயணமும்

மதுக்கூர் இராமலிங்கம்


ஆளுநர் பதவி என்பது பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்டது. சுதந்திரம் அடைந்த பிறகும் அது தொடர்கிறது. ஒன்றிய அரசினால் நியமிக்கப்படுகிற ஆளுநர்கள் மாநில அரசுக்கு எதிராக போட்டி ராஜாங்கம் நடத்தி வருகிறார்கள். சட்டமன்றத்தில் கூட மாநில அரசு எழுதித் தரும் உரையைத்தான் ‘ஆளுநர் உரை’ என்ற பெயரில் ஆளுநர் வாசிக்கிறார். மரபெல்லாம் இப்படியிருக்க, தற்போதைய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
ஆளுநரின் அத்துமீறல்கள்
ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை என்று கூறியுள்ள திமுக அரசு, தமிழகத்திற்கென்று தனிக் கல்விக் கொள்கையை உருவாக்க குழு ஒன்றை அமைத்துள்ளது. ஆனால் ஆளுநர் ரவியோ பல்கலைக்கழக துணைவேந்தர்களை கூட்டிவைத்துக் கொண்டு தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துங்கள் என உத்தரவு போடுகிறார். இந்தப் பின்னணியில்தான் துணைவேந்தர்களை மாநில அரசுகளே நேரடியாக நியமிப்பதற்கான மசோதாவை சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. ஆனால் இதற்கும் கூட ஆளுநரின் ஒப்புதலைத்தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
சமீபத்தில் ஆளுநர் சனாதன தர்மத்தின் அடிப்படையில்தான் இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு பல்வேறு மதங்கள் உள்ளன. ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு கோட்பாடு உள்ளது. இந்தக் கோட்பாடுகளிலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதுதான் மதச்சார்பின்மையின் சாரம். சனாதன தர்மம் என்பது பிறப்பின் அடிப்படையிலான சாதிய அடுக்குகளை நியாயப்படுத்துவது, பெண்ணடிமைத்தனத்தை முன்னிறுத்துவது என்பதே ஆகப் பெரும்பான்மையான தமிழர்களின் கருத்து. ஆனால் இந்து மதத்திலுள்ள குறிப்பிட்ட சில மேல்தட்டினர் மட்டுமே பயனடையக்கூடிய சனாதனத்தை உயர்த்திப்பிடிக்கிறார் ஆளுநர். இது அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருந்தால் அது வேறு. ஓர் உயரிய அரசியல் சட்டப்பொறுப்பில் அமர்ந்துகொண்டு அவர் இவ்வாறு பேசுவது கண்டிக்கத்தக்கது.
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் அடிப்படையிலான
அரசியல் சட்டத்தை ஏற்க மறுத்து மனுநீதி அடிப்படையில்தான் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்படவேண்டும் என்று கூறி வருபவர்கள். வர்ணாசிரமக் கோட்பாடு அடிப்படையிலான சனாதனம் இந்திய மக்களை ஆயிரக்கணக்கான சாதிக் குழுக்களாகப் பிரித்து பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கிறது. உழைக்கும் மக்களை இழிவு செய்கிறது. இதுதான் இந்திய மரபு என்றும் கூறுகிறது. சமூக நீதிக்கெதிரான சனாதனத்தை உயர்த்திப் பிடிப்பது மதச்சார்பற்ற அரசியல் சட்டத்திற்கு எதிரானது. ஆளுநர் தொடர்ந்து இத்தகைய கருத்துகளை கூவிக்கூவி விற்பதை தமிழ்நாட்டில் நாம் அனுமதிக்க முடியாது. மாநிலங்களுக்கு ஆளுநர் என்ற ஒரு பதவி தேவையா என்ற கேள்விக்கே இந்த அத்துமீறல் இட்டுச் சென்றிருக்கிறது.
முகமது நபிகள் குறித்து அவதூறு
பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா என்பவர் முகமது நபிகள் குறித்து அவதூறான கருத்துகளை தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறினார். இதற்கு அரபு நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. வளைகுடா நாடுகளில் பணியாற்றிய இந்தியர்களின் வேலைக்கும் ஆபத்து ஏற்பட்டது. அரபு நாடுகளுக்கு இந்தியப் பொருட்களின் ஏற்றுமதியும் சிக்கலுக்கு உள்ளானது. எனவே வேறு வழியின்றி நூபுர் சர்மாவை பாஜக இடைநீக்கம் செய்தது. பிரதமர் மோடியோ உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ அவரைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட ப் பேசவில்லை. அரசியல் சட்டத்திற்கு விரோதமான அவரது இந்தப் பேச்சுக்கு அரசு அவர் மீது வழக்கு ஏதும் போடவும் இல்லை.
நூபுர் சர்மாவைக் கண்டித்து இந்தியாவிலும் போராட்டங்கள் வெடித்தன. ஆனால் அதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலிருக்கும் டில்லி போலீசாரும் உ.பி. உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களும் எதிர்கொண்டவிதம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
புதிய ஆயுதமாக புல்டோசர்
போராட்டம் நடத்தியவர்களின் வீடுகளுக்கு புல்டோசர்கள் அனுப்பப்பட்டு அவர்களது வீடுகளும் கடைகளும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. அலகாபாத்தில் இந்தப் போராட்டத்தைத் தூண்டியதாகக் கூறி, ஜாவேத் அகமது என்பவரின் வீடு இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. அது அவரது மனைவி பெயரில் உள்ள வீடு. இதே போன்று உ.பி.யில் ஏராளமான இஸ்லாமியர்களின் வீடுகளும் கடைகளும் இடிக்கப்பட்டன. அவர்கள் பல வருடங்களாகக் குடியிருந்து வரும் வீடுகளை ‘ஆக்கிரமிப்புகள்’ என்று கூசாமல் கூறியது யோகி ஆதித்யநாத் அரசு. ஆக்கிரமிப்பு என்றால் நோட்டீஸ் தர வேண்டும்.. வழக்கு போட வேண்டும் அல்லவா? ஆனால் அதையெல்லாம் செய்யாமல் இந்த அத்துமீறல் நடக்கிறது.
இதுவரை பயன்படுத்தி வந்த பல்வேறு வன்முறை வடிவங்களோடு தற்போது புல்டோசரையும் கையிலெடுத்துள்ளது பாஜக. தில்லி ஜஹாங்கிர்புரியில் இஸ்லாமியக் குடியிருப்புகள் நீதிமன்ற உத்தரவையும் மீறி புல்டோசர்களால் இடிக்கப்பட்டன. அந்தப் பகுதி இஸ்லாமிய மக்கள் பாஜகவினருக்கு எதிராக போராடியதுதான் காரணம். சிபிஎம் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத், புல்டோசர் முன்னின்று அநீதிக்கெதிராக கர்ஜித்த காட்சியின் புகைப்படங்கள் உலக அளவில் பிரபலமாகின. அதற்குப் பின்தான் அந்தப் பகுதியில் புல்டோசர் இடிப்பு நிறுத்தப்பட்டது.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் புல்டோசர் பாபா என்று அவரது ஆதரவாளர்களால் புகழப்படும் அளவிற்கு புல்டோசர்களை ஏவிவிடுகிறார். உ.பி., தில்லியில் மட்டுமல்ல, மத்தியப்பிரதேசத்திலும் சிவராஜ் சிங் சவுகான் அரசு சிறுபான்மை மக்களுக்குச் சொந்தமான 16 வீடுகளையும் 29 கடைகளையும் இடித்துள்ளது. புல்டோசர் இடிப்புகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரையிலும் முறையீடு செய்யப்பட்டது. நீதிமன்றமும் பொறுப்பாக இடிப்புக்குத் தடைவிதிக்க மறுத்து விசாரணைக்கு மட்டும் வழக்கை ஏற்றுக்கொண்டுள்ளது. வழக்கு முடிந்து தீர்ப்பு வரும்போது எத்தனை வீடுகள் எஞ்சியிருக்கும் என்று தெரியாது.
பறிபோகும் வேலைவாய்ப்புகள்
ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை தருவோம் என்று 2014 தேர்தலின்போது நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். அவர் ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. இருந்த வேலைவாய்ப்புகளும் பறிபோனதே அன்றி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. அனைத்து வேலைவாய்ப்புகளும் ஒப்பந்த அடிப்படையிலானவையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வங்கி, எல்ஐசி, இரயில்வே, விமானத்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுக் கொண்டிருப்பதால் அந்த வேலைவாய்ப்புகளும் பறிபோய்க் கொண்டிருக்கின்றன.
அக்னி பாதை
ராணுவத்துறையிலும் காண்ட்ராக்ட் முறையைக் கொண்டுவந்துவிட்டது பாஜக அரசு. ‘அக்னி பாதை’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின்படி நான்கு ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் 17.5 வயதிலிருந்து 21 வயது வரை உள்ள இளைஞர்கள் ராணுவத்திற்கு தேர்வு செய்யப்படுவார்கள். நியமிக்கப்படும் இளைஞர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள். அதன்பின் இவர்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்படும். மீதமுள்ள 75 சதவீதம் பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இதுதான் அக்னி பாதை திட்டம்.
இந்திய இளைஞர்கள் குறிப்பாக வடமாநில இளைஞர்கள் பெரும் கொந்தளிப்புக்கு உள்ளானார்கள். பல இடங்களில் போராட்டம் வெடித்தது. மோடி ஆதரவு ஊடகங்கள் இது வேலைவாய்ப்பு அல்ல, தேச பக்த வாய்ப்பு என்று உபதேசம் செய்தன. அப்படிப்பட்ட தேசபக்த வாய்ப்பை ஏன் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் வழங்க வேண்டும்.. ஏற்கெனவே இருந்ததுபோல வழங்கலாமே எனக் கேட்டால் அதற்கு பதிலில்லை. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு வந்தவுடன் டி.வி.எஸ்., மகேந்திரா உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள் அக்னி பாதை இளைஞர்களுக்கு நாங்கள் வேலை வழங்கத் தயார் என்று வரிசைகட்டி வந்தார்கள். அப்படியென்றால் இந்த நிறுவனங்களில் வேலைபார்க்க அரசு செலவில் பயிற்சி அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழாதா? அக்னி பாதையில் பயிற்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்குவது இருக்கட்டும்.. ஏற்கனவே உங்கள் நிறுவனத்தில் எத்தனை ராணுவ வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளீர்கள் என்று மகேந்திராவை நோக்கி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நிறுவனத்திடமிருந்து பதில் இல்லை.
நாட்டையே ராணுவமயமாக்கிவிட வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டங்களில் ஒன்று. அதன் ஒரு பகுதியாகவே அக்னி பாதை திட்டம் கொண்டுவரப்படுகிறது…என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. எப்படியோ இந்திய இளைஞர்களுக்கு மலர்ப்பாதை அமைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் அவர்களை அக்னி பாதையில் தள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
(94422 02726 – [email protected])

Spread the love