September 27, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

அக்கறையும் அலட்சியமும்

நிறப்பிரிகை 3
எஸ்.வி. வேணுகோபாலன்
நண்பர் ஓர் ஆங்கில வாக்கியம் அனுப்பிவைத்து அதைத் தமிழில் மொழி பெயர்த்து அனுப்புங்கள் என்று கேட்டிருந்தார். யாரோ அறிஞரது பொன் மொழியாக அது இருக்கக் கூடும், அல்லது எவரோ ஒருவரது அனுபவ மொழி! அதற்குப் போகுமுன் அது சொல்லவருவதை இப்படி தொகுக்க முடியும்.
யாரோ ஒருவரோடு நாம் அமர்ந்து விவாதிக்கிறோம். அவர் சம்பந்தப்பட்ட விஷயம். அவருக்கான அக்கறையில்தான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். கேட்டுக் கொண்டே இருப்பவர் சட்டென்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு விடுகிறார். ‘சரி, போதும், நானே பார்த்துக் கொள்கிறேன்’ என்கிறார். ‘போயும் போயும் நம்ம நேரத்தை இவருக்காகச் செலவழிச்சு மெனக்கெட்டு வந்து உட்கார்ந்து பேசினோமே, நம்மைத்தான் சொல்லணும்’ என்று நமக்குக் கோபம் வருகிறது.
இப்போது ஆங்கிலப் பொன்மொழிக்கு வருவோம். நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் விஷயம் எதிரே இருப்பவரைச் சார்ந்தது என்பதால், அதில் உணர்ச்சிபூர்வமான நேரடித் தொடர்பு உங்களை விட அவருக்குத்தான் அதிகம் இருக்கும். உங்களைப் பொறுத்தவரையில் அது பரோபகாரம். அவருக்கோ அது தனது வலியை வெளிப்படுத்துதல். நீங்களோ அதை ஒன்றுமே இல்லை என்று அடித்து நொறுக்கிவிட்டு உட்கார்ந்திருக்கக் கூடும். இத்தனைக்குப் பிறகும் நீங்கள் அமைதியாக இருக்க முடியும், அவரால் முடியாது. ஏனெனில் அது அவரது பிரச்சனை. எனவே, கொஞ்சம் அடக்கத்தோடு நடந்து கொள்ளுங்கள்.
இத்தனையையும் பேசுகிறது அந்த ஒற்றை வரி. ‘பம்மல் கே சம்பந்தம்’ படத்தில் சினேகாவை அருகே வைத்துக் கொண்டு, சிம்ரன் அவரது கதையைப் பொதுவெளியில்-அரங்கக் கூட்டத்தில் எந்தச் சலனமும் இன்றி போட்டு வெளுத்து வாங்கிக் கொண்டிருக்க, சினேகா மட்டும் குமுறிக் கொண்டிருக்கும் காட்சி நினைவுக்கு வரலாம்.
பல ஆண்டுகளுக்குமுன் மறைந்துவிட்ட உற்ற நண்பர் ஒரு முறை மிகவும் வருத்தத்தோடு பகிர்ந்து கொண்ட விஷயம். தற்செயலாக வேறு ஒரு மனிதரைப் பார்க்க அவரது அலுவலகத்திற்குப் போயிருக்கிறார். அவரோ, தனது சக பணியாளர் ஒருவரிடம் இவரைக் காட்டி, ‘ஒருத்தன் எப்படி வாழக் கூடாது என்பதற்கு நல்ல உதாரணம் இவர்’ என்று அறிமுகப்படுத்தினாராம். அவரைப் பற்றிய அக்கறையா, அலட்சியமா, எது அங்கே வெளிப்பட்டது என்பதுதான் கேள்வி. எத்தனை அபத்தமான தருணம் அது!
யாரைப் பற்றிக் கேட்டாலும், மனப்பாடச் செய்யுள் மாதிரி எதிர்மறையான செய்திகளாக கடகட என்று ஒப்பித்துக் கொண்டே இருப்போர் சிலர் உண்டு. கேட்டால், எச்சரிக்கை செய்யத்தான் சொல்கிறேன் என்பார்கள். வேறு சிலரோ, எப்போதும் எல்லாவற்றையும் நல்ல விதமாகவே பார்க்கப் பழகி இருப்பர்.
ஸ்டீபன் கொவே என்கிற பிரபல எழுத்தாளரின் புத்தகம் ஒன்றில் – ‘மிகவும் திறமை வாய்ந்த மனிதர்களது ஏழு பழக்கங்கள்’- ஒரு பயணத்தில் சந்திக்கும் ஒரு மனிதரை விவரிக்கிறார். அவரது குழந்தைகள் சக பயணிகளை ஒரு வழி செய்து கொண்டிருக்கின்றனர். கொவே மெல்ல வினவுகிறார்,
‘உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் கொஞ்சம் புத்திமதி சொல்லலாம் இல்லையா?’


அந்த மனிதர் சொல்கிறார், ‘ஆமாம் என்னதான் தாயை இழந்த பிள்ளைகள் என்றாலும், இப்படியா பயணத்தில் அடுத்தவருக்குத் தொல்லை தருவது?’.
’ஓ…மன்னிக்கணும்…உங்க மனைவி எப்போது தவறி விட்டார்?’ என்று அதிர்ந்து போய்க் கேட்கிறார்.
சில மணி நேரங்களுக்கு முன்புதான் மனைவியைப் பறிகொடுத்தவர் அவர். அடக்கம் செய்துவிட்டு, எங்கே போவது என்கிற புகலிடம் கூடப் பிடிபடாமல் கிடைத்த வண்டியில் ஏறி இவர்களோடு பயணத்தில் இருக்கிறார். இந்தக் கதையைக் கேட்டதும், அவ்வளவுதான், வண்டியில் இருப்போர் எல்லோரும் கோபத்தை மறந்துவிட்டு, தங்களால் ஆன உதவியைச் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். நிலைமை தலைகீழாக மாறிப் போகிறது.
அடுத்த முனையில் இருப்பவரது அகநிலை, புறநிலை என்ன என்பதைக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் என்பதுதான் அந்த விவரிப்பின் சாரம். நாம் யாருக்காகப் பேசினாலும், பிரச்சனை அவர்களுடையது. அதன் சுமையும் வலியும் அவர்களுடையது என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும். ஏற்ற விதத்தில் சொல்லும் பொறுமையும், கேட்பவர் உள்ளத்தை உறுத்திவிடாமல் சொல்லும் பொறுப்பும் முக்கியமாகிறது.
(94452 59691 – ளஎ.எநரே@பஅயடை.உடிஅ)

Spread the love