May 18, 2022

புதியஆசிரியன்

டிஜிட்டல் வெளியீடு

ஃபிடல் காஸ்ட்ரோ

ஆசிரியர்: சேது ஆனந்தன்
செல்: 94420 22301 விலை: ரூ.175/-
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் திரு. சேது ஆனந்தன் இருபதாம் நூற்றாண்டு அரசியல் உலகில் வெற்றிநாயகனாக வலம் வந்த ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கை வரலாற்றை எளிய தமிழில் எழுதி வண்ணப் படங்களுடன் நேர்த்தியாக வெளியிட்டுள்ளார். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் பொருத்தமான அணிந்துரையுடன் ஃபிடல் பற்றி கலைஞர் எழுதிய கவிதையையும் இணைத்துக் கொணர்ந்துள்ளார். ஜோசப் ஸ்டாலின், மக்கள் சீனம், மகாபாரதம் என்று ஏற்கனவே எழுதியுள்ள படைப்புகளின் வரிசையில் இதுவும் அணிசேர்ந்துள்ளது. கியூபா நாட்டின் வரலாற்றோடு ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகர வாழ்க்கைச் சித்திரத்தையும் வாசகர்களுக்குச் சேர்த்துக் கொடுத்து பிரமிக்கச் செய்துள்ளார் சேது ஆனந்தன். கிறிஸ்டோபர் கொலம்பஸ் கியூபாவில் வந்திறங்கியதில் தொடங்கி, ஜோசே மார்த்தீ தலைமையின் கீழ் ஸ்பெயினிடம் பெற்ற விடுதலை, சர்வாதிகாரி பாடிஸ்ட்டாவின் கொடுங்கோல் ஆட்சி, சே குவேராவுடன் இணைந்து புரட்சியைத் திறம்பட நடத்தி ஃபிடல் பெற்ற வெற்றி, அன்றிலிருந்து இன்று வரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக அருகில் இருந்தும் அதன் அச்சுறுத்தலுக்கு அஞ்சிடாமல் கியூபா வீரநடை போடுவது வரை வரலாற்றுச் செய்திகளைப் பாங்குடன் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். சோவியத் யூனியன் சிதைவுக்குப் பின்னரும் தனித்து நின்று அமெரிக்காவின் சவால்களைச் சமாளித்து கியூபா சோசலிச நாடாக பரிணமித்திட தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஃபிடல் காஸ்ட்ரோ வாழ்வின் அனைத்து முக்கியமான தருணங்களும் நூலில் பதிவாகியுள்ளன. புரட்சியே லட்சியமாய் வாழ்ந்த ஃபிடல் தன்னுடைய 90 ஆவது வயதில் இயற்கை எய்தியபோது உலகெங்கும் தொழிலாளர் வர்க்கம் சிவப்பு சூரியனுக்கு வீரவணக்கம் செய்தது என்று நிறைவு செய்கிறார். சேது ஆனந்தனை புதிய ஆசிரியன் இதழ் பாராட்டுவதோடு அவர் எழுத்துப் பணியைத் தொடர வேண்டும் என்றும் வாழ்த்துகிறது. –பெ.விஜயகுமார்

Spread the love